தூக்கு மர நிழலில்

| Saturday, February 1, 2014
30-01-2014 நாளிட்ட தி ஹிந்து ஆங்கிலப் பதிப்பில் தலையங்கப் பக்கத்தில், உச்ச நீதி மன்ற மூத்த வழக்கறிஞரும், நடுவண் அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான திரு. தி.ஆர். அன்த்யருஜினா அவர்கள் தூக்குத் தண்டனை கைதிகளின் காத்திருப்பு காலம் எவ்வளவு கொடுமையும் துயரமும் நிறைந்தது, இதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதி மன்ற முன்னுதாரணங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி தமது கருத்துக்களை உரக்கச் சொல்லியிருக்கிறார்.  (The Agony Of Awaiting Death, The Hindu, dated 30-01-2014) மூன்று பேர் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள், நீதிபதி ஆர்.கோகாய் அவர்கள் மற்றும் நீதிபதி ஷிவ கீர்த்தி சிங் ஆகியோரை கொண்டது, ஜனவரி 21, 2014 அன்று அளித்த தீர்ப்புரையொன்றில், குடியரசுத் தலைவருக்கு விடுக்கப் பட்ட  கருணை மனு மீது முடிவெடுக்காமல் அவர் காட்டும் தாமதமானது, சம்மந்தப்பட்ட கைதிக்கு இழைக்கப்படும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயலுமாகும் என்று தெளிவாகக் கூறியுள்ளது, இத்தகைய பரிதாபமான நிலையில் வருடங்கள் பல கடந்தும், தூக்கிலிடப் படாமலும், விடுதலை செய்யப் படாமலும், கதியைப் பற்றிய தகவல் ஏதும் இல்லாமலேயே மன உளைச்சல் கொண்டு "உளப்பிணி"யின் விளிம்பிலே நிற்போருக்கு நிஜமான ஆறுதல் தருவதாகும். இப்படியெல்லாம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நீதிமன்றத்தின் கவனத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி, மரண தண்டனைக் கைதிகள் கொண்டு வருவாரேயெனின், அவரது தண்டனை குறைக்கப் பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப் பெறலாம் என்ற நம்பிக்கையான நிலை இத்தீர்ப்பின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின்   இத்தீர்ப்பு மேலும் இது குறித்து சொல்வது மிகுந்த கவனத்துடன் நாம் பரிசீலிக்கத் தக்கது.  குடியரசுத் தலைவரிடம் தண்டனையை குறைக்க வேண்டி  தூக்கு தண்டனை கைதி ஒருவர் கருணை மனு அளிப்பது என்பது, அவருக்குக் காட்டப்படும் சலுகை அல்ல என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவருக்கிருக்கும் ஒரு உரிமைபூர்வமான வழி என்றும் தெறித்தாற்போல கூறியிருக்கும் இந்தத் தீர்ப்பாணை இந்திய நீதி மன்ற வரலாற்றில் மைல்கல்லான ஒன்றாகும். இப்படியான ஒரு கைதியை, கருணை மனு மீது முடிவெடுக்க நீண்ட தாமதம் ஆகி விட்ட நிலையில், தூக்கிடலாமா என்று நீதிமன்றம் மறு ஆய்வு செய்யும் என்றும் இந்தத் தீர்ப்பாணை தெரிவிக்கிறது.

அத்தகைய நிலையில் இந்த பதினைந்து கைதிகளின் நிலையைக் குறித்து உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் அமர்வு விலாவரியாக சட்டத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது.  இவர்களது கருணை மனு நிராகரிக்கப் பட்ட நிலையிலும், இவர்களை தூக்கிலிட நீண்ட தாமதம் ஆன படியால், (ஏழிலிருந்து பனிரெண்டு வருடங்கள்) மனு நிராகரிக்கப் பட்ட நிலையை இத்துனை ஆண்டுகளும் தெரிவிக்காத நிலையில், இது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சொல்லவொண்ணாத் தீங்கினை விளைவித்திருக்கிறது என்றும், இந்தத் தாமதம் கைதிகளின் உடல் மற்றும் உள நலன்களை மிக மோசமாகத் தாக்கியிருக்கும் என்பதாகவும், கைதிகள் சம்பந்தப்பட்ட குற்றத்தின் தன்மையை வைத்து இந்த தாமதத்தை நியாயப் படுத்தவே முடியாது எனவும் இத்தீர்ப்பானை கனலாக தனது சட்ட விளக்கத்தைத் தருகிறது.

இதையெல்லாம் குறிப்பிடும் திரு.தி.ஆர்.அன்த்யருஜினா அவர்கள், நீதிமன்றம் இதற்கு முன்னரே கூட, இது விடயத்தில் தற்போதையதைப் போலவே விளக்கத்தை அளித்திருக்கிறது என்று சொல்லி, அப்படிப் பட்ட இரண்டொரு தருணங்களை சுட்டிக் காட்டவும் செய்கிறார்.  மரண தண்டனையை தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்து வரும் முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் 1974-ல் அளித்த தீர்ப்பொன்றிலும், அடுத்து 1983 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் உச்ச நீதி மன்றம் வேறு வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளும் ஜனவரி 21-ந் தேதிய தீர்ப்புக்கு முன்னுதாரணமாகவே அமைந்திருக்கின்றன.  முன் நிகழ்வுகள் இருப்பினும் கூட, சம்பந்தப் பட்ட வழக்குக்கான கைதிகளின் கருணை மனு மீது குடியரசுத் தலைவரும், அரசும் முடிவேதும் எடுக்காமல் பதினைந்து வருடங்கள் வரை தாமதப்படுத்தியிருப்பது, இக்கைதிகளுக்கும் அவர்களது கும்பத்தினருக்கும் இழைக்கப் பட்டிருக்கும் பெரிய அநீதியே.

இந்நிலையில் இது சம்பந்தப் பட்ட வேறு ஒரு வழக்கின் தன்மையைப் பார்ப்பது உகந்ததாகும் என்று கருதுகிற திரு.தி.ஆர்.அன்த்யருஜினா அவர்கள், தவீந்தர் பால் சிங் புல்லார் வழக்கை மேற்கோள் காட்டுகிறார்.  இவரது கருணை மனு மீது குடியரசுத் தலைவர் ஏழு ஆண்டுகளாக முடிவேதும் எடுக்காத நிலையில், மன உளைச்சல் மிகுந்து இந்த நீளமான காத்திருப்பை சுட்டிக் காட்டி, இதன் காரணமாக தனது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தை அணுகிய புல்லார் அவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் எஸ்.டி.முகோபாத்யாய ஆகியோர் கொண்ட அமர்வு, வேண்டுகோளை நிராகரித்து சொன்னது என்னவென்றால், திரு.புல்லார் அவர்கள் TADA (Terrorist And Anti Disruptive Act) சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால், தாமதமான காத்திருப்பைக் காரணம் காட்டி, தண்டனையைக் குறைக்க கோர இயலாது என்பதாகும்.  ஆனால், பின்னர் நியமிக்கப் பட்ட மூவர் அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனையைக் குறைக்க இயலாது என்பது சரியல்ல என்று கூறியது மட்டுமல்ல, தமது ஜனவரி 21-ம் தேதிய தீர்ப்பின் படி, ஒரு புதிய முன்னுதாரணத்தையும் துவக்கி விட்டது என்றும் கூறலாம்.

மேலே சொல்லப்பட்டது எல்லாம் நம்பிக்கை தருகிற செய்திகள் என்றால், அப்சல் குரு அவர்களின் விடயத்தில் நடந்தது நேரெதிரானது.  மேலதிக உச்ச நீதி மன்ற அமர்வு அப்சல் குரு விடயத்தை மறு ஆய்வு செய்யு முன்னரே அவர் தூக்கிலிடப் பட்டு விட்டார்.  தூக்கிலிடப்பட்டது பெப்ரவரி 9, 2013 அன்று.  தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப் பட்ட திகதி ஆகஸ்ட் 4, 2005.  குடியரசுத் தலைவருக்கு அப்சல் குரு அவர்கள் கருணை மனு சமர்ப்பித்த திகதி நவம்பர் 8, 2006.  ஆறு வருடங்களாக இவரது கருணை மனு குடியரசுத் தலைவரிடமே இருந்து, இறுதியில் நிராகரிக்கப் பட்ட விடயம் திரு.அப்சல் குருவிற்கோ, அவரது குடும்பத்தாருக்கோ தெரிவிக்கப்படவே இல்லை.  தெரிவிக்கப் பட்டிருக்குமாயின், மற்ற வழக்குகளைப் போலவே, கருணை மனு மீதான தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனைக் குறைப்பை உச்ச நீதி மன்றத்தில் அப்சல் குரு அவர்கள் வேண்டியிருக்க முடியும்.  இந்த வழக்கு சம்பந்தமான விடயங்கள் வேண்டுமென்றே, அரசியல் நோக்கங்களுக்காக, காங்கிரசாலும் பாஜக-வாலும் தாமதப்படுத்தப் பட்டன எற்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கலாம்.  தனது கதி என்ன ஆகுமோ என்ற மன உளைச்சல் தாங்க முடியாத அப்சல் குரு அவர்கள் ஒரு நேர்காணலில் சொன்னார்: "திரு.எல்.கே.அத்வானி அவர்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  அவர்தான் என்னை உடனடியாக தூக்கிலிடக் கூடியவர். தினந்தோறும் என்னை பெரும் மன அவஸ்தைகளுக்கு உள்ளாக்குகிற வேதனை அப்போது நின்றுவிடும்."


திரு.தி.ஆர்.அன்த்யருஜினா அவர்கள், நிராகரிக்கப் பட்ட கருணை மனுவின் விடயத்தை அப்சல் குருவிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமலேயே அவர் தூக்கிலிடப் பட்டதைப் பற்றி, amicus curiae என்ற சட்ட நிலையில் இருந்து, உச்ச நீதி மன்ற அமர்வின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.  இதையடுத்து, தற்போதைய வழக்கில், உச்ச நீதி மன்ற அமர்வானது, கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக கைதிக்குத் தெரிவிக்கப்படும் அறிக்கையின் தேதிக்கும், தூக்கிலிடப்படும் தேதிக்கும் குறைந்த பட்சம் பதினான்கு நாட்கள் இடைவெளி வேண்டும் என்று விதித்திருக்கிறது.  இது மிகவும் அவசியமானதொன்றே.  இந்தக் கால இடைவெளியில் கைதி தன் குடும்பத்தாரைக் கடைசி முறையாக பார்ப்பதற்கும், மரண தண்டனையை நிறைவேற்றும் வழியைப் பற்றி அவருக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அது சார்ந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.  மேலும், இந்த அமர்வு, கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தனிமைச் சிறையில் கைதியை அடைக்கக் கூடாதென்றும், மனம்-நினைவு சார் நோய்மை தாக்கப்பட்டிருப்பின் அவரைத் தூக்கிலிட ஆகாது என்றும் வலியுறுத்துகிறது.

திரு.தி.ஆர்.அன்த்யருஜினா அவர்களைப் பொறுத்த வரை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்து, இந்த ஜனவரி 21-ந் தேதிய உச்ச நீதி மன்ற தீர்ப்பானது மரண தண்டனை நிறைவேற்றம் குறித்த அதி முக்கியமானதும், நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.  உலகெங்கிலும், மரண தண்டனைக் கைதிகளை நீண்ட காலம் மன உளைச்சலில் வாடவிடுவதற்கு எதிராக கண்டனக் குரல்கள் அந்நாடுகளின் நீதிமன்றங்கள் விடுத்தபடியே உள்ளன.  சொல்லப் போனால், 140 நாடுகளில் தடை செய்யப்பட்ட மரண தண்டனை, இன்னும் அமுலில் இருப்பது வெறும் 58 நாடுகளில்தான்.  'அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே' அமுல் படுத்துவதாக எடுக்கப்பட்ட சட்ட நிலைப்பாட்டில், மரண தண்டனை இந்தியாவில் இன்னும் தக்கவைக்கப் பட்டிருக்கிறது. மரண தண்டனையை முற்றிலுமே மறுதலிக்க முடியுமா என்பதைப் பற்றி உச்ச நீதி மன்றம் தீவிரமாக பரிசீலிக்கும் ஒரு காலமும் வரலாம்.  இந்த இடைப் பட்ட காலத்தில், ஜனவரி 21-ந் தேதிய தீர்ப்பு மரண தண்டனைக் கைதிகளுக்கு சற்று மன ஆறுதலைத் தர முடியும்.

6 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Saravanakumar said...
This comment has been removed by a blog administrator.
Saravanakumar said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment