டார்ச் லைட் 1

| Thursday, November 28, 2013
 19-11-2013
வி.ஆர்.கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி.
நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களைப் பற்றியதான ஒரு கட்டுரை அண்மையில் தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கிறது. நல்ல முறையில், ஐயா அவர்களைப் பற்றிய புரிதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரையில் அவரின் ஆங்கிலத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடாததுதான் ஒரு குறை. நீதிபதி வி ஆர் கிருஷ்ணா அய்யர் அவர்களின் ஆங்கிலத்தை பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆங்கில ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நான், அய்யர் அவர்களுடய ஆங்கிலத்தைப்போல படித்ததில்லை. இவரின் ஆங்கில சொல்லாட்சி நிகரற்றது. நுனி நாக்கில் வைத்து ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசிப் பிறரை ஏமாற்றும் கபடப் பேர்வழிகள் (இவர்களில் பெரும்பாலும் பன்னாட்டு நிறுமங்களில் மென்பொருள் பொறியாளர்களாகவும், அவைகளில் HR பிரிவுகளிலும் தங்களின் பணியை அயராது கொட்டித்தீர்ப்பவர்கள். விலக்குகளும் உண்டு) இவரின் ஆங்கிலத்தை படித்தால் வெட்கிப்போவார்கள். சிவாஜி கணேசன் கம்பீரமாக தமிழை உச்சரிப்பதைப்போல், இவரின் ஆங்கிலம் அதற்கே உரிய நளினம் கலந்த கட்சிதத்தோடு இருக்கும். இவரின் உரைநடை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில இலக்கியம் பயிலுவோருக்கு பாடமாக வைக்கத் தகுந்தது.

-------
17-11-2013 

இன்றைய தமிழ் தி ஹிந்து நாளிதழில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி வெளியிடப்பட்டுள்ளது. ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் தன்மையாகவும், அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்காமல் ஜனநாயக ரீதியில் உள்ளதாகவும் நிறைய வாசகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களின் நினைவாற்றலுக்கும் பெரிய நன்றி. இலங்கை விடுதலை பெற்றதற்கு முன்பிருந்தே சிங்கள பேரினவாதம் மிகக் கவனமாக திட்டம்போட்டு, "வந்தேறிகள்" என்று அவர்களால் கொச்சையாக அழைக்கப்பட்ட தமிழர்களை இன ஒழிப்பு செய்து வந்திருக்கிற இருநூறு ஆண்டு கால வரலாறை தெரியாதவர்கள் இன்றைய செவ்வியை மட்டும் படித்துவிட்டு, திரு.விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து நூற்றுக்கு இருநூறு சதம் சரி என்று சொல்லலாம். இவர்கள் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை எப்படிவேண்டுமானாலும் எடை போடலாம். ஒரு இன வரலாற்றையும் அதன் ரத்தம் சொரிந்த நாட்களையும் இன்றைய சௌகர்யத்திற்காக புறக்கணிப்பதும், அதன் வேதனையை, துயரத்தை வருவதாக சொல்லப்படும் புற வாழ்வியல் வசதிகளுக்காக மறைக்க முற்படுவதும், இனமான அவமானத்தை ஏற்றுக்கொள்வதும் "தி ஹிந்து" போன்ற 'உண்மை விளம்பிகள்" செய்யலாம். ஐயா விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமாதானத்தை விரும்பினாலும், இன எழுச்சிக்காக போராடியவர்களின் நினைவுக்கு குந்தகம் விளைவிக்க விரும்பும் எந்த ஒரு கருத்தையும் வெளியிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
-------

17-11-2013 

 இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் நீதியரசர் சந்துரு அவர்கள் தமிழகத்தின் சிலைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். தமிழகத்தின் கடந்த நாற்பத்தைந்து வருட அரசியல், சிலைகள் சம்பந்தப்பட்டது. சிலைகள் தவிர்த்த திராவிடக் கட்சிகளின் அரசியல் உப்பு சப்பில்லாதது. உண்மையில், சிலைகளே தமிழகத்தை கடந்த நான்கு தசாப்தங்களாக ஆண்டு வந்துள்ளன. முதலில் திரு. அண்ணாதுரை அவர்களின் சிலையும், பிறகு திரு.எம்ஜியார் அவர்களின் சிலையும் தமிழகத்தை, சிலைகளால் முடிந்தவரை, ஆட்சி செய்துள்ளன. பரதனுக்கு ராமனின் செருப்பைப் போல திமுகவிற்கு அண்ணாதுரையும், அதிமுகவிற்கு எம்ஜியாரும் சிலைகளாக நின்றவாறே அரசுக்கட்டிலை நிர்வகித்துவந்துள்ளனர். இதில், காமராஜரும், சிவாஜியும் இன்னபிற சிலையாளர்களும் "ஓரங்கட்டப்பட்டனர்". நேரு ரொம்பப் பாவம். கையிலிருந்த புறாவோடு காணாமல் போய்விட்டார். புறா அவரை தூக்கிக்கொண்டு போயிருக்கலாம். காணாமல் போவதும், திடீரென்று கண்ணில் விழுவதும் கண்ணகியின் வழக்கம். இதையெல்லாம் கவனித்துவரும் நீங்கள் ஏன் ஆடாமல் அசையாமல் நிற்கிறீர்கள்? சிலையாகிவிட்டீர்களா?

-------
17-11-2013 

டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் சென்று வந்திருக்கிறார். இலங்கையில் தனி மனித சுதந்திரம் தாராளமாக இருக்கிறது என்பதின் அடையாளமாக இதைப் பார்க்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. டேவிட் கேமரூன் அவர்களின் அரசியல் துணிவையே இது காட்டுகிறது. "உதயன்" நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று எரிந்து போன பதிப்புப் பொறிகளை பார்வையிட்ட டேவிட் கேமரூன் காட்டமான அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நடுவில், சில சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்கள், "பிரித்தொனிய அரசின் காலனி ஆதிக்கம் முடிந்துவிட்டது: டேவிட் கேமரூன் சொல்லி இனி ஆகப்போவது ஏதுமில்லை" என்ற வகையில் கருத்தருளியுள்ளார்கள்.

மன்மோகன் சிங் வராவிட்டால் பரவாயில்லை; சல்மான் குர்ஷித் உங்களிடம் மன்னிப்புக் கேட்டு காலில் விழுந்து நீங்கள் மன்னிக்கும் வரை அழுது தொழுவார். டேவிட் கேமரூன் கதை கொஞ்சம் வேறு விடயம். சர்வதேசியம் உங்களின் கதையை நீங்கள் சொல்லியவாறு நம்பத்தயாரில்லை. நடந்தது என்ன என்பதை அது பாதிக்கப்பட்ட தரப்பாரிடமும் பேசிப் புரிந்து கொள்ள முனைய ஆரம்பித்துள்ளது. நீங்களும் உங்களின் ஆகப்பெரிய தோழருமான இந்திய அரசும் சர்வதேசியம் முன் வைக்கப்போகும் புதிய கதை எவ்வளவு சுவராஸ்யங்களும் வெட்கக்கேடுகளும் நிறைந்ததோ?
 -------

16-11-2013 

குழந்தைகளுக்கான 7 டி சினிமா தியேட்டர் சென்னையில் ஸ்கைவாக் வளாகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ளது. சென்னை சென்றிருந்தபோது உள்ளே நுழைந்தேன். கண்களில் போட்டுக்கொள்ள பெரிய கண்ணாடி ஒன்றை கொடுத்தார்கள். ஒரு மணி நேரம் ஐந்து அல்லது ஆறு சிறுவர் படங்கள் திரையிடுகிறார்கள். கதையில் மழை பெய்தால் நம் மீதும் மழை பெய்கிறது. யாரோ யார் மீதோ எச்சில் துப்புகிறார்கள், நம் மீது விழுகிறது. அடிக்கடி நாம் அமரும் நாற்காலி பயங்கரமாக ஆடுகிறது. விழாமல் தப்பித்தால் பழனி முருகனுக்கு மொட்டை போட்டுக்கொள்வதாக நம்மிடம் கேட்காமலேயே மனம் வேண்டிக்கொள்கிறது. தியேட்டரில் இறுதியாக பல்புகள் எரிகையில் வயதையும் மீறி பல சாகசங்களைத் தாண்டி வந்ததற்காக நம்மை நாமே தட்டிக்கொடுக்கிறோம். நம்மை ஒரு மணி நேரம் குழந்தையாக்கிய இந்த அரங்கம், நமக்குச் சொல்வது: "குழந்தமை அற்புதமானது. அடிக்கடி நீங்கள் இப்படி சிரித்ததும் பிரமித்ததும் கடைசியாக எப்பொழுது? ஏன் வளர்ந்தீர்கள்? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்?"
-------
06-11-2013
 
புதிதாக நுழைந்துள்ள இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் வெளியிட இடம் அமைத்து தருகின்றன; இதன் காரணமாய் கருத்துக் குழப்பமும், கருத்து நெரிசலும் ஏற்பட்டு, ஏற்கனவே இடத்தையும் மடத்தையும் நிரப்பியிருக்கும் அறிவுஜீவிகளுக்கு சற்று சௌகர்யக் குறைவும், கவுரவக் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது என்றெல்லாம் திரு.கார்த்திகேயன் அவர்கள் தி ஹிந்துவில் எழுதியுள்ளார். கருத்துக்குழப்பம் ஏற்படுவதும், கருத்து நெரிசல் ஏற்படுவதும் கல்வி பரப்பலின் இயல்பான நகர்வு. நீங்கள் இணையத்தில் எல்லோரும் கருத்துக்களை தெரிவிக்க கூடாதென்றால், சாமான்யர், கல்வியறிவு பெற்ற காரணத்தால் மட்டுமே, தம்மையும் தமது கருத்தை அறிவிக்கவும் வேறு ஊடகத்தை நிறுவிக்கொள்வர். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லமுடியும் இங்கு. பாலும் விஷமும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். அருந்துபவர்தான் தன்மையை முடிவுசெய்கிறார். மற்றவர்க்கான முடிவை திரு.கார்த்திகேயன் போன்றவர்கள் எடுக்காமல் இருப்பது, அவரையும் சேர்த்த, எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
-------
03-11-2013

நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் 85வது பிறந்த நாள் விழா அக்டோபர் ஒன்றாம் திகதி 2013ல் கொண்டாடப்பட்டபோது திரு.நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு YouTubeல் காணக் கிடைக்கிறது. திரு.நெல்லை கண்ணன் அவர்கள் தமது வழக்கமான உற்சாகத்தில் இல்லையோ என்று சந்தேகப்படும்படியான உரைதான் என்றாலுங்கூட, திரு.சிவாஜி அவர்கள் எப்படி இரண்டு தலைமுறைத் தமிழர்களின் தோற்றம், பாவனை, அலங்காரம், பேச்சு, செயல்பாடு மற்றும் சிந்தனையைப் பாதித்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. நெல்லை கண்ணனுடையது நிச்சயமாக மிகுவுரைதான் என்றபோதும், தமிழர்களின் பாவனைகளும் பேச்சுக்களும் திரு.சிவாஜி கணேசன் காலத்திற்கு முன்பேஇருந்து (சங்க இலக்கிய காலத்திலேயிருந்து என்று உறுதியாக சொல்ல முடியும்) மிகை வெளிப்பாடுகளாகத்தான் இருந்திருக்கின்றன என்பதால், அவைகளை மிகச் சரியாக மேடையிலும், திரையிலும் பிரதிபலித்த கலைஞன் திரு.சிவாஜி அவர்கள்தான். வாழ்க்கையையே நாடகமாக உணர்ந்திருப்பாரோ!

டார்ச் லைட்

|
28-11-2013
"A Complete Vindication" என்ற தலைப்பிட்டு இன்றைய ஆங்கில தி ஹிந்து பதிப்பில் உள்ள தலையங்கம் மிகுந்த சுவாராஸ்யமானது. யார் யாருடைய பக்கம், இத்தனை நாள் இவர்கள் தூக்கிப்பிடித்த அரசியல் தத்துவங்கள், நியாயத்தின் கொடியை ஏந்திக் கொண்டிருப்பது இந்த பாரதத் துணைகண்டத்திலேயே நாங்கள் மட்டுந்தான் என்று செய்து வந்த கர்ஜனை, தமது 125வது ஆண்டின் துவக்கத்தில் (2004ம் ஆண்டு) வெளியிட்ட தங்களது மறு அர்ப்பணிப்பு ஊடகவியல் கொள்கைகள் எல்லாம் நம் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இன்றையதைப்போல மேலெழுந்தவாரியான தலையங்கம் அண்மைக்காலங்களில், தி ஹிந்து உட்பட, வேறேங்கும் கண்ணுற முடிந்ததில்லை. புலனாய்வு ஊடக தர்மத்தில், இந்தியாவிலேயே மற்றவருக்கு வழிகாட்டியாக இருக்கிறோம் என்று முழங்கிய நாட்கள் எங்கே? அஞ்சா நெஞ்சர் திரு.அசாஞ்சே அவர்களுக்கு கொடுத்த ஆதரவும் அக்கறையும் எங்கே? போபார்ஸ் ஊழலில் சிபிஐ கண்டுபிடிக்க முடியாததையெல்லாம் கண்டுபிடித்து, காற்றுப் புக முடியாத இடத்திலெல்லாம் புகுந்தெழுந்து நூற்றுக்கணக்கில் ஆவணம் ஆவணமாக பிரசுரித்து, நாட்டின் தலைவிதியையே தேர்தல் ஜனநாயகத்தில் தனது கருத்தேற்றத்தால் மாற்றிக்காட்டிய தி ஹிந்து எங்கே? டெஹல்கா ஆசிரியர் தண்டிக்கப்படவேண்டியவர் என்று சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கூர்த்த மதியுடன் மின்தூக்கியில் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளைக்கூட பின் கட்டமைப்பு செய்து, காட்டமான குரலுடன் எழுதப்பட்ட தலையங்கம் எங்கே? இவைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய பூசி மெழுகி காஞ்சிபுரத்தின் மட வாசலில் மண்டியிட்டு கோலம் போடாத குறையாக எழுதப்பட்டிருக்கும் தலையங்கம் எங்கே? என்னுடைய வேதனையெல்லாம், புலன் விசாரணை அதிகாரி அமரர் திரு.பிரேம் குமார் அவர்கள்தான் இந்தக் கொலையைச் செய்தார் என்று மட்டுந்தான் இந்தத் தலையங்கம் சொல்லவில்லை. இத்தலையங்கத்தின்படி, அமரர் திரு.பிரேம் குமார் அவர்கள் "தகாத ஆர்வம்" (undue interest) காட்டி வழக்கை விசாரித்தார். புலன் விசாரணை "தீவிரமாக நடத்தப்பட்டது" (As the investigation turned aggressive...). எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, தி ஹிந்து, இந்தத் தலையங்கத்தின் இறுதி வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறது: "புலனாய்வு அதிகாரிகள் பீடாதிபதியை மட்டுமே குறி வைத்ததால், உண்மையான கொலையாளி யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது".

(தயவுசெய்து இதைப் படிக்க வேண்டாம்: தி ஹிந்துவின் - ஆங்கிலப் பதிப்பு - இன்றைய கடைசிப் பக்கத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கொடுத்துள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள முழுப்பக்க விளம்பரம் வெளிவந்துள்ளது. இது எப்படி?)

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர!

-------
27-11-2013
 
நேற்றிரவு எனது நண்பர் ஒருவரிடமிருந்து அலைபேசி அழைப்பு. ரொம்பவும் அலட்டிக்கொண்டார். இந்த நாட்டில் எனக்கிருந்த எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. அரசு வேலையில் மட்டும் இல்லாவிட்டால் வேறு எந்த நாட்டுக்காவது குழந்தை மனைவியோடு ஓடிப்போய் விடுவேன் என்று ஒரே அரற்றல். தான் சற்று நேரம் வரை டிவியை பார்த்துக்கொண்டிருந்ததாகவும், ஒரு புகழ் பெற்ற வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவருமே விடுதலை செய்யப்பட்டதாகவும், இது மிகப் பெரிய அநியாயம் என்றும் பேசும்பொழுது அவரது குரல் உடைந்தது. நிச்சயமாக அவர் அழுதார். தான் ஒரு அறிவியல் ஆசிரியர் என்பதால், பேய், பிசாசு என்பவற்றில் நம்பிக்கை இல்லையென்றும், கொலை செய்யப்பட்டவர் தானே கழுத்தை அறுத்துக் கொண்டாரென்று வைத்துக்கொண்டாலும், அவரின் தலையில் மற்றும் இன்னபிற இடங்களில் தானே நெடுங்கத்தியால் கொத்திக்கொண்டிருப்பாரா, ஆகையால் நடந்தது கொலைதான் என்றும், ஏன் நடந்த நிகழ்விற்கு காரணமான யாரையுமே பொறுப்பேற்க நிர்ப்பந்திக்க அமைப்புக்கள் முன்வரவில்லை என்றும் விசும்பி விசும்பி கேள்விகளாக கேட்டுக்கொண்டிருந்தார்.

நண்பரே, மக்களின் நம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்து கட்டி எழுப்பப்படும் அமைப்புக்கள் அரசு மீதும் அதன் மற்ற அங்கங்களின் மீதும் செலுத்த முடிகிற அதிகாரம் வரலாற்றில் என்னவெல்லாம் சாதித்திருக்கிறது, இந்த உலகம் முழுவதும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அமைப்புக்களாக, அரசுகள் அல்ல, மக்களின் முட்டாள்தனத்தை மூலதனமாகக்கொண்டு இயங்குகிற இந்த அமைப்புகள்தான் என்று தெரிந்துகொள்ள, என்னைப்போல வரலாறு படித்தவனாக இருக்க வேண்டும். "நான் ஒரு அறிவியல் ஆசிரியன் தெரியுமா?" என்று அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளும் நண்பரே, எங்கே போனது உங்கள் அறிவு? ஏன் அழுகிறீர்கள்? இப்படித்தான் இங்கே நடக்கும். வேறெதற்கும் வாய்ப்பு குறைவு. கொஞ்சம் அறிவோடு சிந்தியுங்கள் அறிவியல் ஆசிரியரே? மனதில் இருக்கும் நீதியுணர்வு, நியாயம் குறித்த கவலைகள் எல்லாம் உங்களைப் பித்தனாக்கிவிடக் கூடியவை.

ஓம், திருச்செந்தூர் முருகா! என் நண்பரையும் காப்பாற்று!

-------
27-11-2013

இன்றைய தமிழ் தி ஹிந்து நாளிதழில் நீதியரசர் சந்துரு அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்குக் கொடுக்கப்பட்டு தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனை, நடைபெற்ற விசாரணையின்படி தகுந்ததுதானா என்பதுபற்றி நீதித் துறையின் பார்வை என்னவாக இருக்க வேண்டும் என்று விலாவரியாக எழுதியிருக்கிறார். திரு.பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பதும், அப்படி பதிவு செய்யாததிற்கான பணி அழுத்தங்கள் தம் மீது இருந்தன என்ற ரீதியில் விசாரணை அதிகாரி திரு.தியாகராஜன் வெளியிட்டிருக்கும் தகவல் மிகவும் அதிர்ச்சியுற வைப்பதாகும். இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டுள்ளதால், அவரே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்றும், இப்படி காலதாமதமான பகிரங்கப்படுத்தலுக்குப்பின் அரசியல் காரணம் இருக்கிறது என்றும், பேரறிவாளனே நீதிமன்றத்தில், வாக்குமூலம் தன்னிடமிருந்து விசாரனை அதிகாரியால் முழுமையான முறையில் பெறப்பட்டு அதன் 'மூலம்' பிறழாமல் பதியப்படவில்லை என்று கூறியிருந்தால் மட்டுமே, சட்டத்தின் கண்களுக்கு தற்போதைய சர்ச்சை பொருட்டானது என்றும், இல்லையெனில் இது வெறும் சில நாட்கள் பரபரப்புக்கு மட்டுமானது என்றும் "தினமணி" தனது இன்றைய தலையங்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறது. முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி திரு.ரகோத்தமன் அவர்கள் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி சேனல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில், திரு.தியாகராஜனிடம் திரு.பேரறிவாளன் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தண்டனையை நீதிமன்றம் வழங்கவில்லை, வேறு பல சாட்சியங்களையும் கருத்திற்கொண்டு அவைகளின் அடிப்படையில்தான் இத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இத் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒளிபரப்பானது. இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு.தியாகு அவர்கள் திரு.ரகோத்தமனின் கருத்தை முற்று முழுவதுமாக மறுத்தார். வழங்கப்பட்ட தண்டனையின் முதலும் ஈற்றுமான அடிப்படையே திரு.பேரறிவாளனின் வாக்குமூலந்தான் என்று தீர்க்கமாகப் பேசிய திரு.தியாகு, மொத்த வழக்கே மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தார்மீக ரீதியிலாவது சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவராக இருந்த திரு.கார்த்திகேயன் அவர்கள் நடந்தவைகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினார். இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட திரு.கார்த்திகேயன் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாவாறும், கோபப்பட்டவாறும் எல்லாவற்றையும் மறுத்தார். கலந்துரையாடலை நடத்திக்கொண்டிருந்த புதிய தலைமுறை செய்தியாளரே ஒருதலைப்பட்சமாக நிகழ்ச்சியை நடத்துவதாகவும், திரு.தியாகு போன்றவர்கள் மறுவிசாரணை கோருவதின் மூலம் நீதித்துறையையே அவமானப்படுத்துகிறார்கள் என்றும் உணர்ச்சிபொங்கக் கூறினார். திரு.கார்த்திகேயன் அவர்கள் அறிவும் ஆற்றலும் அனுபவமும் நிரம்பிய முன்னாள் உயர்நிலை சிபிஐ அதிகாரி. கலந்துரையாடலில் அவர் இன்னும் நிதானமாக தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. இங்கு கடவுளையே கேள்விக்குள்ளாக்குகிறோம். மறு விசாரணை, அதன் அடிப்படையில் புதிய வெளிச்சங்களோடு கூடிய நீதி பரிபாலனம் ஆகியவை ஜனநாயகத் தன்மை கொண்டவையே.

இது தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும் திருவாளர் பொதுஜனம் அர்த்தம் நிறைந்த மனதோடு பெரிய மனிதர்களின் வினோதமான சொல்லாடல்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அந்த மூன்று பேருக்கு என்னதான் நடக்கும்?" 

------

27-11-2013

நேற்று மதியம் ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அரசு மேல்நிலைப்பள்ளி,சுக்கம்பட்டி, சேலம் மாவட்டம் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு. ஆங்கில இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து மாணவர்களிடம் ஏதாவது பேசும்படி கேட்டிருந்தார். இரண்டு மணி அளவில் அங்கிருந்தேன். இப்பள்ளி ஏற்காடு சட்டமன்ற தொகுதியினுள் வருவதால் ஆங்காங்கே பிரதான சாலையில் காவலர் நிறுத்தங்களும் நிறைய பரிசோதனைகளும் இருந்தன. எல்லோரையும் சந்தேகமாகவே பார்க்கும் வேறு மாநிலத்து காவல் மனிதர்கள்.

பள்ளி முன்னால் பைக்கை நிறுத்தியபோது, ஏதேனும் விடுமுறையா என்ற சந்தேகம். வகுப்புகள் நடப்பதற்கான எந்த சத்தமும் இல்லை. தலைமை ஆசிரியர் மட்டும் மிகத் தொலைவில் பள்ளியின் உள்ளே தனியாளாக நின்று அங்குமிங்கும் பார்வையிட்டவாறு நின்றிருந்தார். பார்வையில் பட்டவுடன் உள்ளே போக முடிந்தது. சரியாக மூன்று மணிக்கு விழா தொடங்கியது. அதற்கு முன்னமேயே தலைமை ஆசிரியரின் அறையில் பேசிக்கொண்டிருந்தபொழுது, உள்ளே நுழைந்த நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்று அறிமுகப்படுத்தியபொழுது, நம்பவேமுடியவில்லை. மிகவும் எளிமையாக இருந்த அந்த நபர், பத்து நிமிடங்கள் தாமதத்திற்காக அங்கிருந்த அனைவரிடமும் கண்ணியமான முறையில் மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். இந்தப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா ஒன்று நடப்பது இதுதான் முதல் முறை என்றார்.

தலைமை ஆசிரியரின் அறையிலிருந்து விழா நடந்த மூன்றாவது மாடி அரங்கம் வரை வழி நெடுக, மற்றும் அரங்கத்திற்குள்ளே, ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் சம்பந்தமான மேற்கோள்கள், இலக்கியகர்த்தாக்கள் பொன்னுரைகள், கவிகளின் படங்கள் சீரிய முறையில் ஒட்டப்பட்டு, தொழில்முறை புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். ஆசிரியர் பயிற்சி மாணவர் மற்றும் மாணவியர் கண்ணில் பட்டனர். விழா தொடக்கத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி அரை மணி நேரம் நடந்தது. இதுதான் இந்த நிகழ்வின் பிரதானம். பாட்டு, சம்பாஷனை, குழு நடிப்பு, தனிநபர் நடிப்பு, நாடகம் என்று எல்லாமே ஆங்கிலத்தில். ஒரு குழந்தை கூட தயங்கவில்லை. மனனம் செய்திருக்கிறார்கள் என்று நம்பவே முடியாதபடி மிகவும் இயல்பாக தங்களது கலை மற்றும் மொழித்திறனை வெளிப்படுத்தியது, அரசுப் பள்ளிகளில் நான் இதுவரை கண்டிராதது. மனம் இந்தக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சியால் நிறைந்திருந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அவர்கள் பேசும்போது,குழந்தைகளின் சாதனைக்காக ஆசிரியர்களின் பொற்பாதங்களில் விழுந்து நன்றி தெரிவிப்பதாக சொன்னது, இவர் உண்மையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரா என்று சந்தேகப்பட வைத்தது. இரண்டு பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களும்,ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியரும் ஒரே வாரத்தில் குழந்தைகளை இந்த நிகழ்விற்காக உற்சாகப்படுத்த முடிந்ததாக சொன்னார்கள். அவர்களிடம் நான் கேட்டேன்: "எப்படி ஒரே வாரத்தில் இது முடிந்தது?" அவர்கள் சொன்னார்கள்: "குழந்தைகள் இன்னும் நிறைய செய்யத்தயாராக இருந்தார்கள். நீங்களெல்லாம் பேச வேண்டுமென்பதால் பல குழந்தைகளை நாங்கள் தடுக்க வேண்டி வந்தது."

விழா முடிந்து திரும்ப வந்துகொண்டிருந்தபொழுது எனக்குப்பட்டது: "குழந்தைங்க எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்காங்க. இந்த வாத்திங்க நாமதான் தயாரா இல்லையோ?"

சுக்கம்பட்டி தலைமை ஆசிரியருக்கும், ஆங்கில உபாத்தியாயர்களுக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும், எல்லோரும் ஆங்கிலத்தை கற்க முடியும் என்று இன்னுமொருமுறை என்னை நம்ப வைத்ததற்காக, ஆயிரம் நன்றிகள்.
 --------

20-11-2013 

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் அவர்கள் யாழ்ப்பாணம் போனது பற்றிய செய்தி கட்டுரையாக தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கிறது. இலங்கைத் தலைவர்களுக்கு இவரது விஜயம் தலைவலியாக அமைந்துவிட்டது பற்றியும், இந்தியப் பிரதமரும் திரு.கேமரூன் அவர்களைப் போலவே செய்திருக்கலாம் என்றும், பிரிட்டிஷ் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டைப் பொருத்தவரை ஒட்டுமொத்த கவனத்தைக் கவர்ந்து, மாநாட்டின் இன்ன பிற அம்சங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பதாகவும் கட்டுரை அமைகிறது. கேமரூன் செய்தது மிகச் சரி. போகாமல் இருந்ததைவிட போனது சரிதான். ஏனென்றால், யாழ்ப்பாணம் போகும் அளவுக்கு துணிவு இருந்தது. நமது பிரதமர் அங்கே போயிருப்பாரா? இவ்வளவு வெளிப்படையாக பேசியிருப்பாரா? அவர் வெளிப்படையாக பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிறகு, ராஜபக்ஷே மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட இலங்கைத் தலைவர்களும் வெளிப்படையாக பேசி, கேமரூன் போன்றவர்கள் போர்க்குற்றம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை இலங்கைக்கு வெளியேயும் வீச வேண்டி வந்தால்? இன்னும் ஆறே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வேறு; மே மாத ரிசல்ட் இப்போதே தெரிந்துவிடுமே?