ஆங்கிலம் கற்றல் - கற்பித்தல் ஆகியவற்றில் சில முன்மாதிரிகளைச் சுட்டிக்காட்டும் National Focus Group Position Paper on English (Tributary Paper to NCF 2005) கீழ்க்கண்டவர்கள் என்ன மாதிரியான முறைகளைப் (methodologies) பின்பற்றுகிறார்கள் என்பதை உற்றுக் கவனிக்கச் சொல்கிறது.
அ. வேறு மாநிலத்திலிருந்து மருமகளாக இன்னொரு மாநிலத்தில் உள்ள புகுந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதத்திற்குள் புது மொழியைக் கற்றுக் கொள்கிறாள் அல்லவா, அவள் என்ன முறையைப் பின்பற்றுகிறாள்?
ஆ. இந்தியாவில் பிற அன்னிய மொழிகளைக் (பிரெஞ்சு, ஜெர்மன், சைனீஸ் உள்ளிட்டவை) கற்றுக் கொடுக்கையில் பின்பற்றப்படும் முறைகள் என்னென்ன? பெங்களுரு போன்ற நகரங்களில் BPO நிலையங்களில் பணியாற்றச் செல்லும் இளைஞர்களுக்கு near native ஆங்கிலத்தை சரளமாக (ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள்ளாவது) கேட்கவும், பேசவும் ஆறு மாதங்களுக்குள் கற்றுத் தருகிறார்களே, அவர்களின் methodology என்ன?
இ. இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட மைய அரசுப் பணியில் அமர்த்தப்படும் இளைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மாநில அரசில் பணியில் சேர்ந்து சில மாதங்களுக்குள்ளாகவே அந்த மாநில மொழியில் உரையாடுகின்ற, கூட்டத்தில் மைக் பிடித்து பேசுகின்ற திறனை வளர்த்துக் கொள்கிறார்களே, அவர்களின் கற்றல் மாதிரி என்ன?
ஈ. தங்களுடைய மாநில மொழியில் பள்ளி இறுதி ஆண்டு வரை படித்து விட்டு, பின்னாட்களில் scientists, policy makers, professors, heads of institutes of national importance போன்ற உயர் பதவிகளை தம் மேன்மையால் அலங்கரித்திருக்கும் பெருமகன்கள் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் அதிசயத்தக்க புலமையைப் பெற்றிருக்கிறார்களே, அவர்களின் கற்றல் மாதிரி என்ன?
கூடவே, National Focus Group Position Paper on English இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கலாம்.
"மாணவன் தங்களுடைய பராமரிப்பில் பனிரெண்டு வருடங்கள் இருந்தும், ஆங்கிலத்தில் அடிப்படை மொழித் திறன்கள் கொஞ்சமும் இல்லாமல் கல்லூரிக்கோ, காணாமல் போகவோ நகர்கிறார்களே, அவர்களுக்கு என்ன கற்றல் மாதிரி (methodology) ஆங்கில ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டது?"
சில வருடங்கள் முன்பு, 2008 வாக்கில் இருக்கலாம், தாம்பரம் அருகிலிருக்கும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தெரிந்தெடுக்கப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்காக ஒரு வார கால பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. தற்போதைய SCERT இயக்குனர் முனைவர்.அறிவொளி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு அது. (அந்தப் பயிற்சியின் முடிவில் அந்தக் கல்லூரியின் முதலாளி லியோ முத்து அவர்களால் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், அப்பொழுதே சுமார் ஐநூறு மதிப்பிருக்கும், Daniel Jones தொகுத்த English Pronunciation Dictionary (14th Edition) அன்பளிக்கப்பட்டது. இன்றளவும் அதைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன்.) அந்தப் பயிற்சியின் போது ஒரு நாள் பங்கேற்பாளர்களிடம் உரையாட அண்ணா பல்கலைக் கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் இளங்கோ வந்திருந்தார். அவருடைய ஆங்கிலம் அங்கிருந்த அத்தனைப் பேர்களையும் அசத்தியது. எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். ஏறத்தாழ, native accent அவருக்கு கைவந்திருந்தது. போதாக்குறைக்கு, அவருடைய diction அனைவரின் மீதும் நம்பமுடியாத ரசவாதம் ஒன்றை செய்துகொண்டிருந்தது. அந்தக் கலந்துரையாடலின் இறுதியில், தன்னைப் பற்றி அவர் சொன்னதைத்தான் National Focus Group Position Paper on English-ம் சொல்கிறது. தான் ஒரு கிராமத்துக்காரன் என்றும், தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி தனது சொந்த ஊர் என்றும், பள்ளி இறுதி வரை அங்கிருந்த அரசுப் பள்ளியில் தமிழில்தான் படித்ததாகவும் சொன்னார். பேராசிரியருக்கு இப்படியான ஆங்கிலம் எப்படி வசப்பட்டது? அவருடைய கற்றல் மாதிரிதான் என்ன?
இதற்கான பதிலையும் அவரே சொன்னார். தன்னுடைய பேராசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெருநகரில் அவருக்கு அமைந்த சூழலில் ஆங்கிலத்தைப் பிறர் பேசக் கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், தன்னுடைய இன்றைய ஆங்கிலம் செவிவழியாகத் தனக்கு வந்தது என்றும் சொன்னார். அதே பேராசிரியர் இளங்கோ அவர்களே தற்போது English Language Teachers Association of India (ELTAI) அமைப்புக்கு செயலராகவும் இருக்கிறார். ஹைதராபாத் நகரில் நடந்த ELTAI தேசிய கருத்தரங்கத்தின் இறுதி நாளன்று ஊடகத்திடம் பேசுகையில் (ELTAI Hyderabad Chapter - National Seminar on English Language Education in India - Theory and Practice) இளங்கோ அவர்கள் தெரிவித்தது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு முன்னர் நடந்துள்ள ELTAI கருத்தரங்களை விட இன்றைய சூழலுக்கு அதிகம் தேவையானதாக அதிக பங்கேற்பாளர்களால் உணரும்படியான அமர்வுகள் ஹைதராபாத் கருத்தரங்கத்தில் நடந்துள்ளதாகவும், ஆனால் வருகை தந்தவர்களில் பெரும்பாலோர் repeaters என்றும், இதுவரை வருகை தந்திராத ஆங்கில ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ELTAI கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கான முஸ்தீபுகளை British Council மற்றும் இது போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து அரசுகளின் பள்ளிக்கல்வித் துறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் native speakers & near native speakers ஆகியோரின் ஆங்கிலத்தை நேரில் செவிமடுக்க வேண்டும் என்றும், பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் அல்லது தொலைதூரக் கல்வியில் ஆங்கிலம் இளங்கலைப் பட்டம் பெற்று ஆசிரியரானவர்கள் இந்த மாதிரியான கருத்தரங்குகளில் பங்கேற்கும் பொழுதுதான் தான் சம்பந்தப்பட்ட மொழிப்புலத்தில் இன்று என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - தமது துறையின் மேதாவிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் - இந்தியாவில் ஆங்கில மொழிப்புலம் எந்தத் திசையில் எந்த நோக்கோடு விரைந்து கொண்டிருக்கிறது - என்பதெல்லாம் உட்பட இன்னும் பல்வேறு விடயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்றும் பேராசிரியர் தெரிவிக்கிறார். நான் என்ன நினைக்கிறேனென்றால், இளங்கோ போன்றவர்களை ரசிக்கவாவது இங்கு வர வேண்டும்.
நான் மீண்டும் மீண்டும் வலியிறுத்திக் கொண்டிருப்பதையே இளங்கோ அவர்களும் சொல்கிறார் என்பதில் எனக்கு நிறைவு. ஒரு பெரிய மேதை என்ன நினைக்கிறாரோ அதையே நாமும், அந்த விடயத்தைப் பொறுத்தாவது, நினைத்தும் சொல்லியும் வந்திருக்கிறோம் என்பது ஆறுதலானது.
மாணவர்கள் ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் ஆசிரியர்கள் பேச வேண்டும். ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் mandatory என்பதாக நீண்ட கால அளவிலோ அல்லது தொடர் நிகழ்வாகவோ பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். OMR தாளில் புள்ளிக்கோலம் வைத்து, குல தெய்வத்தின் உதவியோடு, ஆங்கில ஆசிரியர் பதவிக்கு வந்து விட்டவர்களை நொந்து கொள்வதை விட, அவர்களுக்கான employability-ஐ காலம் கடந்தாவது ஏற்படுத்துவது துறையின் கடமை என்றே உணர்கிறேன். இதுவரை மாவட்ட அளவில் நடந்து வரும் ஆங்கில ஆசிரியர்களின் பணியிடைப் பயிற்சிகள் நடந்து வரும் விதம், இளங்கோ அவர்களின் அவாவில் மண் அள்ளிப் போடுவதாகவே இருக்கிறது. ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் கருத்தாளர் ஒருவர் தமிழ் சினிமாப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். அது பங்கேற்பாளர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டும், கொடுமையின் உச்சமாக once more-ம் வேண்டப்பட்டது.
வேறு என்னதான் வழி? மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் கூடிவர வேண்டுமென்றால், மாணவர்களுக்கு ஒரு சில நாட்கள் talent outsource செய்து அவர்கள் மூலமாக குறிப்பிட்ட கால அளவிற்கு பயிற்சி அளிப்பது பயனளிக்காது. தவிரவும், எத்தகைய தரம் நிறுவப்பட்ட materials production-ம் பயனளிக்காது. மாணவர்களின் ஆங்கில மொழித்திறனைக் கூட்ட, ஆசிரியர்களின் மொழித்திறனைக் கூட்டுவதுதான் ஒரே வழி. வேறு ஏதாவதான யுக்திகள் மிக குறுகிய இடத்தில், குறிப்பிட்ட கால அளவில் பயனளிப்பது போன்ற மாயைகளை உருவாக்கினாலும், அவைகளில் இனி நேரத்தையும் உழைப்பையும் இட்டு வைக்க வேண்டியதில்லை. நீண்ட காலப் பயனும், ஒரு teacher tutoring அமைப்பை ஆங்கில ஆசிரியர்களுக்காக உருவாக்கி நிலைபெறச் செய்வதும், தேசிய அளவில் தமிழ்நாடு knowledge lead ஒன்றை எடுக்க மிகவும் அவசியம்.
அப்படியான ஒன்றுக்கு வேண்டியிருப்பவைதான் என்ன?
(i). மாவட்டம் தோறும் ஒரு மைய ஆங்கில மொழி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குதல்.
(ii) இந்த மையங்களில் சமகாலத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய மொழிக்கூடம்.
(iii). இந்த மையத்தில், துவங்கப்பட்ட ஒரு வருடத்திற்காவது, native speaker (qualified) ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பது. அவருக்கு உதவியாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயிற்சியாளர்களை நியமிப்பது.
(v). மாவட்டத்தின் ஒவ்வொரு ஆங்கில ஆசிரியரும் (இடைநிலை - உயர்நிலை - மேல்நிலை) இந்தப் பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியது.
(vi). இந்தப் பயிற்சி கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவது போலவே, இரண்டு அல்லது மூன்று தொகுப்புகளில் நடத்தத் திட்டமிடுவது. பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கு அரசு அங்கீகரித்த தேசிய அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் தரச் சான்றிதழ் (with Grade / Band entries) வழங்குவது.
(vii). இந்தப் பயிற்சிகளுக்காகவே மாவட்ட அளவிலும் / மாநில அளவிலும் தொழில்முறை வல்லுனர்களைக் கொண்டு நேர்த்தியாக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டு, பயிற்சி நிகழ்வுகளின் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும். பயிற்சியின் இறுதியில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெற்ற Grade / Band அல்லது மதிப்பெண் சான்றிதழ்கள் அனைவரும் காணும்படிக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
(viii). இந்த பயிற்சியில் கலந்தோ கொள்ளாமல் இருந்தாலோ, அல்லது பயிற்சியின் இறுதியில் நடக்கும் LSRW தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் போனாலோ, அவர்கள் மீது துறை மேற்கொள்ளும் ஒழுங்காற்று நடவடிக்கைகள் பற்றிய விதிகள் உருவாக்குவது.
அனைத்து ஆங்கில ஆங்கில ஆசிரியர்களுக்குள்ளும் ஒரு இளங்கோ ஒளிந்திருக்கிறார். தரமான வாய்ப்புக்களால் உருவானவர் இளங்கோ. தனி மனிதனின் முயற்சியால் உருவாக்கிக்கொண்ட வாய்ப்பு அது. மற்றவர்களுக்கு அத்தகைய முயற்சி அறியாமையின் காரணமாகவே கூட இயலாமல் போகலாம். இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுவதற்கு அரசே முன்வர வேண்டும். அதற்கான காலம் இது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை வரலாற்றிலேயே முன்னுவமை இல்லாத வகையில் மாற்றங்கள் நடந்தும் வரும் இந்த காலத்தில் இத்தகைய தேவையினைப் புரிந்துகொள்ளக் கூடிய தலைமைகள் வாய்த்திருப்பது பாக்கியம் கூடிவந்திருக்கும் தருணமே ஆகும். இதற்கான கைங்கர்யத்தைச் செய்பவர்களை காலம் நினைவில் வைத்திருக்கும்.
0 comments:
Post a Comment