நான் இங்கு தமிழில் எழுதப் போவதையே நேற்று முகநூலில் ஆங்கிலத்தில் பதிவேற்றியிருக்கிறேன். ஆதங்கம்தான் காரணம். இன்று என்னவாக இருக்கிறோமோ அதற்கு காரணமாக இருந்தவர்கள் வீழ்ச்சியடைந்து கிடப்பதைப் பார்க்கும் பொழுது பொங்கிவரும் தன்னெழுச்சியான ஆத்திரம்தான் இதை எழுதத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டிற்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு காரைக் கொண்டு சென்றேன். பெட்ரோலுக்கான தொகையைக் கொடுப்பதற்கு முன்னால், "ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் பிடிப்பவர்களுக்கு ஆனந்த விகடன் இலவசம், சார்" என்று சொல்லியவாறே கையில் அந்த சஞ்சிகையைத் திணித்தான் அந்தப் பையன்.
ஆனந்த விகடன் என்னை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறது! வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு பத்திரிக்கை வரும் வீடு ஒன்றில் பிறந்து வளர்ந்தது முன்னர் செய்த தவமே அன்றி வேறென்ன? ஆனந்த விகடன், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கல்கி, குமுதம், கல்கண்டு, தினமணிக் கதிர் என்று ஒவ்வொரு நாளுமே ஏதேனும் ஒன்று வீட்டிற்குள் நுழைந்த வண்ணமே இருப்பினும், வெள்ளிக் கிழமையும் சனிக்கிழமையும் அனைவருமே எதிர்பார்க்கும் தினங்களாக இருந்தது. வெள்ளி அன்று விகடனும், சனிக்கிழமைகளில் குமுதமும் வீட்டிற்குள் வீசி எறியப்படுவதை எதிர்பார்த்தவாறே இருந்த வருடங்கள் இன்பமயமானவை. சிவசங்கரி, இந்துமதி, பாலகுமாரன், சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, கண்ணதாசன், அரசு, மதன், சுந்தரேசன், ரங்கராஜன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் உள்ளிட்ட எண்ணற்றவர்களின் எழுத்து எங்களைக் கட்டிப் போட்டிருந்தது.
வீட்டில் இரண்டு கட்சிகள் இருந்தன. குமுதம் கட்சி மற்றும் விகடன் கட்சி. முன்னதிற்கு அதிக விசுவாசிகள் இருந்தனர் என்றாலும், வீட்டில் பெரியவர்கள் விகடன் கட்சியின் தலைவர்களாக இருந்தனர். எனக்குமே விகடனைத்தான் அதிகம் பிடித்திருந்தது. நினைவு சரியாக இருந்தால், பாலகுமாரனின் கரையோர முதலைகள் விகடனில்தான் தொடராக வந்தது. ஸ்டெல்லா ப்ரூஸ் என்பவர் எழுதி வந்த 'அது ஒரு நிலாக் காலம்' என்ற தொடரை அந்தத் தெருவே ஒரு வித புனிதமான மயக்கத்தில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. தெருவின் எல்லா விடலைப் பயல்களும் தங்களை ராம்குமாராகவும், கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்த எல்லா குமரிகளும் தங்களை சுகந்தியாகவும் நினைத்தே நடந்து கொண்டனர். எனக்கு அவர்களைப் போல வயசாகாததால் என்னவாக நினைத்து நடந்து கொள்வது என்பது தெரியாமல், சின்ன ராம்குமாராக இரகசியமாக வரித்துக் கொண்டு யாராவது சின்ன சுகந்தி கிடைக்க மாட்டாளா என்று ஜன்னல்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாவது அல்லது பத்தாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன். அப்பாவும் அவரது நண்பர்களும் வீட்டின் முன் 'அலை ஓசை' மற்றும் 'முரசொலி'யை வைத்துக் கொண்டு அரசியலை அலசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசுகின்ற விடயங்களைப் பற்றி கூடுதல் தகவல்களை விகடனின் தலையங்கமோ அல்லது அந்த வார இதழில் வரும் தலைவர்களின் நேர்காணல்களோ எனக்குத் தந்தவாறு இருக்கும். எனக்குத் தெரிந்து புலிகளின் நிலைப்பாட்டை தொடர்ந்து ஆதரித்து வந்த ஒரு தமிழ் வெகுஜன பத்திரிக்கை விகடன் மட்டுமே. திடீரென்று ஒரு இதழில் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம் அறிவிக்கப்பட்டது. வீட்டில் என்னைப் பற்றி வேறு திட்டங்கள் இருந்ததால் விண்ணப்பிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.
விகடனின் சினிமாச் செய்திகளும் கூட குமுதம் உள்ளிட்ட பிற சஞ்சிகைகளிலிருந்து மாறுபட்டு நிற்கும். இதன் திரைப்பட விமரிசனங்கள் மிகவும் செல்வாக்கு பெற்றவை. அந்தக் காலகட்டத்தில் சினிமா போஸ்டர்கள் விகடன் கொடுக்கும் மதிப்பெண்களை கதாநாயகியின் உருவத்தை விடவும் பெரியதாக காண்பிக்கும். ஊர்வசி என்ற நடிகை அறிமுகமான படத்தில், ரொம்பவும் சிறந்த நடிகையாக வருவார் என்று யூகித்திருந்தார்கள். அவரும் அப்படியே ஆனார். சினிமா ஒன்றைப் பார்த்துவிட்டு நண்பர்களுக்கிடையே அது பற்றி விவாதங்களில் சூடேறும் போதெல்லாம், 'விகடன் என்ன சொல்றான் பார்க்கலாம்' என்றுதான் தணியும்.
இதுவெல்லாம் அந்தக் காலம். முப்பது வருடங்களுக்கு முன்னால். காலம் சுழற்றி அடித்ததில் தமிழ்ப் பத்திரிக்கைகளே கடைகளில் கிடைக்காத இடங்களிலெல்லாம் சோற்றுக்கு மாரடித்து விட்டு, திரும்பி வருவதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது. தொலைக்காட்சி குடும்பங்களின் பெரும்பாலான நேரத்தை அபகரித்து விட்டது. போதாதற்கு அலைபேசிகள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலும் பத்திரிக்கைகளுக்கு சந்தா கட்டுவதில்லை என்றுதான் நினைக்கிறேன். பத்திரிக்கைகளின் மின்னணுப் பிரதிகள் வேறு கைபேசிகளிலேயே கிடைக்கின்றன. பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். தினசரிகள் கொஞ்ச வருடங்கள் தாக்குப் பிடிக்கலாம்.
இந்தப் பின்புலத்தில்தான், எனக்கு நேர்ந்த அதிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். பெட்ரோல் நிலையத்தில் அந்தப் பையன் கையில் திணித்த விகடனுக்கும் நான் காதலுற்றுக் கிடந்த விகடனுக்கும் இடையில் முப்பதாண்டுகள் விரிந்திருக்கின்றன. இருந்தாலுமே கூட, பால்யக் காதலியைப் பார்க்க வந்த ஒருவன், நோயுற்றுக் கம்பலையாக நைந்திருக்கும் கிழவி ஒருத்தியைப் பார்க்க நேர்ந்து நொந்து கொள்வதைப் போல, இன்றைய விகடன் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. எதுவும் சரியாக இல்லை. இன்றும் நல்ல எழுத்து வந்துகொண்டுதான் இருக்கிறது. புனைவு மற்றும் அபுனைவு வகைமைகளில் படிக்க முடிகிற எழுத்துக்கள் எப்போதும் இருந்திராத அளவு வந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த நவீன வசதிகளுமே பதிப்பகங்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் இல்லாத வருடங்களிலேயே காணக் கிடைந்த புதுமை, படைப்பாற்றல், ஊடகத் துறை சாமர்த்தியம் - அனைத்தும் அற்றுப் பாழடைந்து போன பெரிய வீடு ஒன்றுக்கு வெளி வர்ணம் மட்டும் பூசி காட்சிப் படுத்தியது போலத்தான், விகடனை கையில் ஏந்தியிருந்த நிமிடங்களில், உணர்ந்தேன்.
படித்து முடித்தவுடன் நினைத்தேன். அன்று நான் பெட்ரோல் பிடிக்க போயிருக்கவே கூடாது.
0 comments:
Post a Comment