"முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்" என்ற கட்டுரையை ஆழி
செந்தில்நாதன் இன்றைய தமிழ் ஹிந்துவில் (16-3-2017) எழுதியிருக்கிறார்.
நம்மில் பல பேருக்கு முத்துகிருஷ்ணன்களை கொல்ல வேண்டிய அவசியம்
இருக்கிறது. உண்மையில் முத்துகிருஷ்ணனை
கொன்று இருபதாண்டுகள் முடிந்து விட்டது. அரசுப் பள்ளிகள் அனைவருக்குமான பள்ளிகள்
அல்ல என்று எந்த நிமிடம் முடிவானதோ அந்த நிமிடத்தில்தான் நாம் முத்துகிருஷ்ணனைக்
கொன்றோம்.
இது பற்றி நிறைய வே.வசந்திதேவி முதற்கொண்டு பலர் பேசியாகி விட்டது;
எழுதியாயிற்று. நிறையப் படித்துமாகி விட்டது. ஆழி செந்தில்நாதன் முத்துகிருஷ்ணன்களை கொல்ல வேண்டி
வந்த காரணங்களை பட்டியலிடுகிறார்.
ஒவ்வொன்றும் உண்மை. நாம்தான்
அரசுப் பள்ளிகளின் தரத்தைத் தாழ்த்தினோம்.
தனியார் பள்ளிகளைத் துவக்க அனுமதி கொடுத்த போதே அரசுப் பள்ளிகளைக் கொன்று
விட்டோம். அப்புறம், அதில் படிக்கும்
முத்துகிருஷ்ணன்கள் சாகாமலா இருப்பார்கள்?
School is a community. It has in
it all elements of the society. நமது
குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலிருந்து எடுத்ததுமே, அரசுப் பள்ளிகள் ஒரு holistic
community என்ற தன்மையை இழந்து விட்டன.
என்னோடு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாவது படித்த நண்பன்
ஒருவனின் பெயர் பிரேம் ஆனந்த். அவன்
பக்கத்தில் இருந்த மின்சாரத் தேக்கு நிலையத்தின் அதி உயர் அதிகாரியான
செயற்பொறியாளரின் மகன். இன்ஸ்பெக்டரின் மகளும் என்னோடுதான் படித்தாள். பக்கத்து வீட்டு ஐயரு பையன் கிருஷ்ணமூர்த்தியும்
நானும் ஒன்று முதல் ஆறு வரை வகுப்புத் தோழர்கள்.
கவுண்டர்கள் மட்டுமே வசித்து வந்த வெள்ளாளத் தெரு பையன்கள் - பொண்ணுகள்
எல்லோரும் இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து அந்தப் பள்ளிக்கு வருவார்கள். ஐயரு முதல் ஆதிதிராவிடன் வரை
அங்கிருந்தோம். அரசு அதிகாரி முதல்
அன்றாடங்காய்ச்சி வரை தங்களின் குழந்தைகளை பஞ்சாயத்து பள்ளிக் கூடத்திற்குத்தான் அனுப்பி
வைத்தார்கள். முத்து வாத்தியார்தான் எல்லோருக்கும்
நல்லதங்காள் கதையைச் சொன்னார். கம்யூனிசம்
அங்கே இயல்பாகவே இருந்தது.
எல்லாம் கெட்டுப் போனது எழுபதுகளுக்குப் பின்னால் பட்டம் பெற்று
'பெரிய ஆளா' ஆனவங்களோட கைங்கர்யம்தான்.
அப்புறம் எம்ஜியார் காலத்தில் தனியார் பள்ளிக்கூடங்கள் - பாலிடெக்னிக்குகள்
- கல்லூரிகள் புற்றீசல் போலக் கிளம்பின.
இங்கிலீசு தேவைப் பட்டது எல்லோருக்கும். இந்த இங்கிலீசு பற்றிய உண்மை
எனக்குத் தெரியும். இந்த இங்கிலீசுப்
பள்ளிக்கூடங்களில் படித்த - படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் எவருடைய
இங்கிலீசும் குறைந்தபட்ச தரத்துடன் கூட இல்லை.
ஒரு ஐநூறு வார்த்தைகளை வைத்துக் கொண்டே சல்லியடிக்கிறார்கள் இந்தப்
பெண்டுகளும் பிள்ளைகளும். இவர்களிடம்
writing skill என்பது கொஞ்சமும் இல்லை.
ஒரு சில விலக்குகள் இருந்தாலும் அதற்கும் இந்த இங்கிலீசு
கல்விக்கூடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த மாணவனுடைய தனி ஆர்வம் - திறமை மற்றும் வீட்டு சூழல் மட்டுமே காரணமாக அமைகின்றன.
நான் பஞ்சாயத்து பள்ளியில்தான் படித்தவன். பனிரெண்டாவது வரைக்குமே
தமிழ் வழிதான். ஆங்கில இலக்கியத்தில்
இளநிலை ஆய்வர் பட்டமும், மொழியியலில் முனைவர் பட்டமும் பெறுவதற்கு பஞ்சாயத்து
பள்ளியில் சொல்லிக்கொடுத்த வாத்தியார்களும் கூடப் படித்த பசங்களும் பொண்ணுகளும்தான்
காரணம். இதில் சந்தேகமேயில்லை. எல்லோரின்
நிலையும் இதுதான். முப்பத்தைந்து வருடங்களாக விடாமல், உண்மையிலேயே, தொடர்ந்து
தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பழக்கம் எனக்கு
வந்தது நான் படித்த பஞ்சாயத்து பள்ளியால்தான்.
அப்பாவும் அந்தப் பள்ளியில்தான் வாத்தியார். வாத்தியார்களும் வாத்திச்சிகளும் (அம்மாவும்
அவரில் ஒருவர்) பொழுதன்னிக்கும் புத்தகம் படித்தவாறே இருப்பார்கள். நாங்கள் அதை அப்படியே காப்பியடித்தோம். அந்த வாத்திகளுக்கு உடம்பை செருப்பாக்கிப்
போட்டாலும் கடன் கட்டி முடியாது.
நாம் இன்றிருக்கும் நிலைக்கு கல்வி தவிர்த்த நிறைய காரணங்கள் உண்டு.
சில சாதியினரின் பிள்ளைகளுடன் நம்முடைய பிள்ளைகள் படிப்பதை நாம்
விரும்பவில்லை. ஏனென்றால், நாம் புதுப்பணக்காரர்கள்
போல, புதுசாதீயர்கள். என்னுடைய பையன்
இங்கிலீசு பேசா விட்டாலும் பரவாயில்லை; இங்கிலீசு பள்ளிக்கூடத்திற்கு போனால் போதும். வீட்டிற்கு முன்னால் நவீனமான பேருந்து வந்து
நின்று பையனை அள்ளிக்கொண்டு போனால் போதும்.
கவர்ன்மென்டு நினைத்தால் இதற்கு ஒரே நாளில் முடிவு கட்டி விட முடியும். முத்துகிருஷ்ணன்கள் கொல்லப்பட
மாட்டார்கள். அனைத்து சுயநிதிப் பள்ளிகள்
- கல்லூரிகள் அரசுடமையாகிறது என்ற ஒரே உத்தரவில், தரமான கல்வியை ஐயரு - கவுண்டர் -
சாயபு - ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு உத்தரவாதம் செய்துவிட முடியும். ஆனால் அரசு செய்யாது. செய்ய விட மாட்டோம். இதற்குக் கல்வி சார்ந்த காரணங்களே இல்லை. இது அரசுக்குத் தெரியும். அரசுக்குத்தான் முதலில் தெரியும். ஆனாலும் அரசுப் பள்ளிகளில் தரத்தை உயர்த்த
கட்டிடங்கள் கட்டப்படும். வாத்தியார்கள்
நிரப்பப்படும். இலவசங்கள் கொடுக்கப்படும். அரசுப்
பள்ளிகளுக்கு சேரி பிள்ளைகள் மட்டும் படிக்கும் நிறுவன அந்தஸ்து கவனமாகப்
பாதுகாக்கப்படும். எல்லாம் நாசமாக்கப்படும்.
சாவுங்கடா!
0 comments:
Post a Comment