அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்

| Monday, June 22, 2015

புதையல்
பழமொழிகள் என்ற வார்த்தைக்கு இணைச்சொற்கள் தமிழில் நிறைய இருக்க வேண்டும். முதுமொழி, மூதுரை என்ற பதங்கள் நினைவுக்கு வருகின்றன. கி.ராஜநாராயணன் 'சொலவடை' என்று சொல்லுவது பழமொழி என்ற வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை. ஒரு சமூக வரலாற்றில் பழமொழிகள் பாரியமான இடத்தைப் பிடிக்கின்றன. அவைகள் அந்தந்த சமூகத்தின் காலக்கண்ணாடிகள். அந்தச் சமூகத்தின் உளவியலை தெளிவாகச் சொல்பவை பழமொழிகள்.
 
பதினைந்து வருடங்களுக்கு முன்பு கோவையில் பிரபலமான மனநல மருத்துவரிடம் என்னுடைய தோழனை அழைத்துச செல்ல வேண்டி வந்தது. அவன் முனைவர் பட்ட ஆய்வில் என்னுடைய சகா. அவனுடைய ஆய்வு நெறியாளர் கொடுத்த நெருக்கடியில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான். அவனை சோதித்து விட்டு சில யோசனைகள் சொன்ன அந்த மருத்துவர் நாங்கள் இருவரும் தமிழ் - ஆங்கிலம் மொழிகள் சார்ந்து எங்களது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறோம் என்று அறிந்து மிகவும் புளகாங்கிதம் அடைந்ததுடன், தான் ஒரு ஆய்வை மேற்கொண்டிருப்பதாகவும், அதற்கு எங்களுடைய கைங்கர்யம் தேவைப்படுவதாகவும் சொன்னார்.
 
"தமிழ் பழமொழிகளில் உளவியல் கூறுகள்" - என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சமர்ப்பிக்கவிருக்கும் தன்னுடைய ஆய்வுக்கட்டுரைக்கு எங்களுடைய பங்களிப்பை வேண்டிய அவர், பழமொழிகளைப் பற்றி சற்றேறக்குறைய இரண்டு மணி நேரம் பெரும் ஆவேசத்துடன் பேசினார். ஒரு சமூகத்திற்கு தேவையான மொத்த அறிவுமே அது பேசுகின்ற மொழியில் பழமொழிகளாக இருக்கின்றன என்றும், பழமொழிகளைப் பிரபலப்படுத்த ஏன் இன்னும் எந்த முயற்சியும் அரசும் ஆசிரியர்களும் செய்யவில்லை என்றும் அறச்சீற்றத்தோடு வினவினார். தமிழ் பழமொழிகள் மொத்தத்தையும் ஆவணப்படுத்தி ஏதாவது நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளதா என்று எனது நண்பரை வினவிய அந்த மருத்துவர், வட்டார ரீதியாக (கொங்கு, சோழ, பாண்டிய, நாஞ்சில் மற்றும் இன்ன பிற) பதிப்பிக்கப்பட்டிருந்த சில பழமொழிக் கோவைகளை உள்ளறைக்குள் இருந்து கொண்டு வந்து எங்களிடம் காண்பித்தார். "நீங்கள் செய்து வரும் இந்த ஆய்வு எங்களது சர்வகலா சாலை தமிழ்த் துறை மாணவர்கள் கூட நினைத்துப் பார்க்க முடியாதது" என்று அந்த மருத்துவரிடம் ஒப்புக்கொண்ட நண்பர், சில ஆய்வுப் பணிகளில் உதவுவதாக முன்வந்தார்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பழமொழிகள் நமக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றன என்ற அந்த மருத்துவர், எந்த மொழி நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளதோ அதில் பழமொழிகளின் வாழ்வியல் தன்மை அதிகம் என்றும் சொன்னார். கிரேக்க மற்றும் சீன பழமொழிகளின் UTILITY VALUE பற்றி நான் படித்திருந்த புத்தகம் உடனே நினைவுக்கு வந்தது. தமிழ் மொழி பேசும் சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்று பெருமைப் பட ஒரு நிஜமான காரணத்தை இந்த மனநல மருத்துவர் எங்களிடம் கையளித்தார். தமிழ் பழமொழிகள் சீன - கிரேக்க - லத்தீன் போலவே மொழி - சமூக - இலக்கிய கூறுகளை எழுத்தறிவில்லாதவர்களிடம் கூட கொண்டுபோய் சேர்த்தது மட்டுமன்றி, அந்த எளியவர்களின் ஞானத்தையும் வாய்வழியாகவே ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடத்தி வந்திருக்கின்றன என்றும் அந்த மருத்துவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார். அவர் கண்களில் ஒரு பித்தனின் விழிகளுக்கு மட்டுமே சாத்தியமாகும் ஒரு ஜுவாலை கனன்றடித்தவாறே எங்களை சூடாக்கிக் கொண்டிருந்தது.
 
பழமொழிகளைப் பற்றி அதற்கு முன்னும் பின்னும் வேறு யாரும் அப்படி பேசிக் கேட்டதில்லை. எதிர்பாராமல் கிடைக்கும் செல்வத்திற்கு புதையல் என்று பெயர். அன்று எங்களுக்கு கிடைத்ததும் அதுதான்.
----

KILLING LINCOLN என்ற திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆவணப்படம் + திரைப்படம் என்ற கலவையில் நெய்யப்பட்ட இந்தப் படம், அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி கொலை செய்யப்பட்டதை ஆராய்கிறது. பரவலாக அறியப்பட்டுள்ள படிக்கு, லிங்கன் ஒரு மனநோயாளியால் சுடப்படவில்லை. கரம்சந்த் காந்தியின் கொலை எப்படி ஒரு கொள்கையின் அடிப்படையில், அது சரி தவறு என்பது வேறு விஷயம், நிறைவேற்றப்பட்டதோ அதைப்போலவே லிங்கனின் கொலையும் அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிர்மாறான நிலைப்பாட்டை கொண்டவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது.
 
லிங்கனின் கொலைகாரனான ஜான் வில்க்ஸ் பூத் பிரபலமான நாடக நடிகன். தெற்கு மாகாணங்களைச் சேர்ந்தவன். லிங்கன் அடிமை முறையை ஒழித்தது குறித்து பெருஞ்சினம் கொண்டிருப்பவன். தெற்கு மாகாணங்கள் வடக்கிடம் அடிபணிய நேர்ந்த சிவில் போர் விழைவோடு தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவன். இதற்கெல்லாம் காரணமான லிங்கனை கொள்வது தனது அரசியலின் மிக முக்கிய கட்டம் என்று தன்னளவில் நம்புவன். அத்தகைய கொலையை முழுக்க முழுக்க தனது நாடு என்று நம்பும் நிலப்பிரதேச நன்மைக்காகவே நிறைவேற்றுகிறோம் என்ற உறுதிப்பாடு கொண்டவன்.
 
இந்தப்படம் லிங்கன் கொலையுறுவதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து - கொலைக்கான சதி - கொலை - லிங்கனின் இறப்பு - கொலைகாரர்களின் முடிவு என்பதாக விரிகிறது. மிகவும் நுணுக்கமாக, வரலாறு இன்னும் தன்னுள் வைத்திருக்கும் சம்பவத் தடங்களை ஆதாரமாகக் கொண்டு, புனைவு - அல்புனைவு இரண்டின் மூலமாகவும் அமெரிக்காவின் அதிபெரும் நிகழ்வொன்றை மறுகட்டமைப்பு செய்கிறது இந்தப் படம். Tom Hanks-ன் விவரணை இப்படத்தின் பெரிய பலம்.
 
ஜான் வில்க்ஸ் பூத் வேடத்தில் நடித்திருக்கும் Jesse Johnson உண்மையாகவே நமது கண்களுக்கு லிங்கனின் கொலையாளியாகவே தோன்றுவது, வீரபாண்டிய கட்டபொம்முவை வரைய நினைக்கும் சைத்ரீகர்கள் சிவாஜி கணேசன் என்ற அதிபெரும் நடிகரின் சாயலிலேயே வரைந்து முடிப்பது மாதிரியானது.
----

THE ROBE என்றொரு ஆங்கிலத் திரைப்படம். Richard Burton நடித்தது. ஐம்பதுகளில் வெளிவந்திருக்க வேண்டும். கி.பி.33-ல் நடப்பதாக புனைவு. ரோம் சக்கரவர்த்தியின் சேனையில் Tribune என்ற உயர் பதவியில் இருக்கும் Gallio குடி கும்மாளம் என்று இருப்பவன். இவனது தந்தையும் அரசில் ஒரு உயர் அதிகாரி. தன்னை விட உயர் பதவியில் இருக்கும் ஒருவனை Gallio ஏலம் ஒன்றில் அவமானப்படுத்தி விட, அவனது சதியால் ஜெருசலேம் என்ற தொலைதூர நகருக்கு அரசரால் பணிமாற்றம் செய்யப்படுகிறான். சிறு வயது முதலே இவனைக் காதலித்து வரும் Diana என்பவளின் முயற்சியால் மீண்டும் ரோம் நகரத்திற்கே மாற்றம் செய்யப்படுகிறான். ஆனால், ரோம் திரும்புவதற்கு முன்பு, அவனுடைய உயர் அதிகாரி "நாளை மூன்று பேரை சிலுவையில் அறைய வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு கிளம்பு" என சொல்ல அந்த மூவரையும் சிலுவையில் அறைகிறான் Gallio. அந்த மூவரில் ஒருவரின் பெயர் Jesus Christ.

அவரின் மகிமையை பின்னால் அறிய வரும் Gallio குற்ற உணர்ச்சியில் மனம் பித்தாகி அலைகிறான். அவனுடைய கிரேக்க அடிமை மற்றும் அவனுடைய காதலி உதவியுடன் அவன் தன்னை எப்படி மீட்டுக் கொள்கிறான் என்பது படத்தின் பின்பகுதி.

வரலாற்றில் எந்த அளவு புனைவைக் கலக்கலாம் என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது இந்தப் படம். ஜீசஸின் சீடர்களில் ஒருவரான பீட்டர் இந்தப் படத்தில் ஒரு கதா பாத்திரம். படத்தின் உச்சமென்று நான் கருதுவது, குற்ற உணர்ச்சியால் பாதித்த நிலையில் Gallio இருளடைந்த சந்து ஒன்றில் ஒருவனுடன் தத்துவார்த்தமாக பேசும் காட்சி. Gallio-வுடன் பேசுபவனின் பெயர் Judas.

ஆங்கில திரைப்படங்களைப் பார்ப்பது என்பதை வாழ்வின் முக்கியமான கடமையாகக் கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்னும் மர்மத்தை The Robe போன்ற படங்கள் அவிழ்க்கின்றன.
----

தமிழ் இதழ்களில் ஹாஸ்யக் கட்டுரைகள் மிகக் குறைவு. தேவன், மாலி, கல்கி போன்றோர் கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். அ.முத்துலிங்கம் ஓரளவு முயற்சி செய்திருக்கிறார். இதற்கான முன்னெடுப்புக்களே குறைச்சல் என்ற நிலையில் இன்று [ஜூன், திகதி பத்து, 2015]தமிழ் ஹிந்துவில் ராணிப்பேட்டை ரங்கன் என்பவர் தான் சிறு வயதில் சைக்கிள் கற்றுக் கொண்டதைப் பற்றி நகைச்சுவை கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். சுமாராக இருக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும். நகைச்சுவை என்று வருகிற பொழுது எனக்கு Jerome K Jerome என்பார் எழுதியுள்ள Three Men In A Boat என்ற நூல் நினைவுக்கு வருகிறது.
 
ஆபாசமில்லாத, இரட்டை அர்த்தம் இல்லாத, பெண்களின் வாடையே இல்லாத நகைச்சுவை சாத்தியம் என்றும் Jerome K Jerome நிரூபிக்கிறார். இதுவரை படிக்காதவர்கள் இனிமேலாவது அந்தப் புத்தகத்தை படிக்கலாம். படித்துவிட்டு படிக்காத நாலு பேருக்கு சொல்லலாம். படிக்க முடியாதவர்கள் தலைக்கு வைத்து தூங்கவாவது செய்யலாம்.
----

0 comments:

Post a Comment