என் கதை - வெ.இராமலிங்கம் பிள்ளை

| Saturday, September 28, 2013

திரும்பிப் பார்க்கையிலே எப்பொழுதுமே ஒரு திருப்தி.  நடந்தது நல்லதோ இல்லையோ, அவையெல்லாம் முடிந்துவிட்ட சங்கதிகள். முடிந்துவிட்ட சங்கதிகளைப் பற்றி நமக்கு செய்ய ஏதுமில்லை.  நடந்து கொண்டிருப்பவைகளிலும், நடக்கப்போவைகளிலும்தான் எவ்வளவு மர்மங்கள்?  இந்த மர்மங்கள் தரும் தொடர்ந்த அவஸ்தைகளால் சல்லையுறும் இந்த மனது நடந்தவைகளை நினைவு கொண்டு ஆறுதலடைகிறது. எதிர்காலமே இறந்தகாலமாயிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்?  வாழ்க்கை போடும் எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்த நிலை கடந்துபோன காலம்.

புனைவேதும் இல்லாமல் கடந்த காலத்தை நினைவு கூறுதல் ஆகுமா?  எந்த வித மனச் சார்பும் இன்றி நடந்ததை நடந்தவாறே நினைக்கக் கூடுமா நம்மால்?  முடியாதென்றுதான் தோன்றுகிறது.  சொல்லப்போனால், உண்மை என்பது இல்லை.  உண்மை கூட ஒரு அபிப்பிராயம்தானே?  நடந்ததை நடந்தவாறே சொல்லுகிறேன் என்பதெல்லாம் சும்மா.  நடந்ததை உணர்ந்தவாறு வேண்டுமானால் சொல்லலாம். உணர்ந்தவாறு சொல்வதில் வேண்டுமென்றே பொய்யைக் கலந்து சொல்லாமல் இருப்பதே அந்த கடந்த காலத்திற்கு நாம் காண்பிக்கும் விசுவாசம்.  ஆனால் புனைவுகளும் ஜோடனைகளும் எப்படியோ அபிப்பிராயத்தில் கலந்துவிடுகின்றன, நமக்குத் தெரியாமலேயே.  நீதிமன்ற மரக் கட்டகங்களிலே குற்றவாளியையோ, சாட்சியையோ நிறுத்தி, கடந்த காலத்தின் உண்மைகளை மட்டும் புனைவில்லாமலும், பொய்யில்லாமலும் அவர்களிடமிருந்து உரித்து எடுத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்துடன் கேள்விகளால் துளைக்கும் வழக்குரைஞர்கள் சர்க்கரையில் இருந்து இனிப்பைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் இருப்பதாகவே தோன்றும்.  நினைவும் புனைவும் எப்போதும் ஒன்றை ஒன்று புணர்ந்தபடியே உள்ளன.  நடந்த ஒன்றைப் பற்றிய உனது வாக்குமூலம் உன் உண்மை, இது அதன் பற்றிய என்னுடைய உண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.  உண்மையில், உலகம் பார்வைகளால் ஆனது.  எத்தனை பேர் இங்கு உள்ளனரோ அத்தனை உலகங்கள் உள்ளன.

சுய சரிதை எழுதுவோர் அனைவரும் தங்களுடைய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே ஆரம்பிக்கின்றனர்.  பல உண்மைகளைச் சொல்லவில்லைஎன்றும், ஆனால் பெரும்பாலும் உண்மைகளை மட்டுமே சொல்லியிருப்பதாகவும் தங்களின் பாயிரத்தில் சொல்லுகின்றனர்.  தன்னுடைய சுய சரிதையான "என் கதை"-யில் நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளையவர்களும் இப்படியான  வாக்குமூலம் ஒன்றுடனே ஆரம்பிக்கிறார்.  இதில் இருக்கும் நிகழ்ச்சிகள் நடந்தவை என்றும், "ஆனால் ருசிக்கும்படியான முறையில் எழுதியிருக்கிற ஜோடிப்பு மட்டும் என்னுடையது" என்றும் கூறி, தன வாழ்க்கை கதையைத் தொடங்கும் பிள்ளையவர்கள் ஒரு மாபெரும் மானுடனின் கதையை பிரதி முழுதும் சுவைகுன்றாமல் சொல்லியிருக்கிறார்.  1888-ல் போலிஸ் ஏட்டுக்கு எட்டாவது குழந்தையாகவும், முதல் ஆண் குழந்தையாகவும் சேலம் ஜில்லாவின் தெற்குக் கோடியில் இருந்த மோகனூர் கிராமத்தில் பிறந்த பிள்ளையவர்கள் பிறவிக் கலைஞர்.  யாரும் சொல்லித் தராமல் சைத்ரீகம் கைக்குப் பழக்கமாகிறது.  எதையும் சித்திரமாகவே பார்க்கும் சிறுவன் ராமலிங்கம் மிகவும் செல்வாக்காக வளரும் பிள்ளை.  விரும்பியது பெரும்பாலும் உடனே கிடைக்கிறது.  

 சிறுவன் ராமலிங்கத்தின் பள்ளிப் படிப்பு முதல் தண்டி யாத்திரையின் தமிழ் நாட்டுப் பதிப்பான உப்பு ஊர்வலம் வரை, இவரின் கலையுள்ளமும் கவியுள்ளமும் நிறைந்து கிடக்கின்றன.  இன்னொன்று, இந்தக் கலையுள்ளத்திற்கான பயிற்சி எதையும் இவர் சிறப்பாகப் பெறவில்லை.  விரும்பியதை வரைகிறார்.  பொங்குவதை எழுதுகிறார்.  ஆங்கிலப் பயிற்சியும் உண்டு.  பள்ளியில் எல்லா வியாசப் பயிற்சிகளிலும் பாராட்டும்படியாக வந்த இவர், தன் சுயசரிதையில் தனித்துத் தெரிவது, பயன்படுத்தியிருக்கும் உரைநடையில்.  தனித் தமிழைத் தவிர்த்து, மணிப்பிரவாள  நடையில், காலக் கிரயப்படி எழுதாமல், காலத்தை முன் பின் நகர்த்தி, ஒவ்வொரு அத்தியாயமும் முழுமையடைந்த ஒன்றாக எழுதப்பட்டிருப்பது அன்றைய காலத்தில் மிகவும் நவீனமான முயற்சியாக அறியப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியுள்ள வாசகன் பிரதி முழுவதையும் படித்துவிட்டு தன் முயற்சியில் ஒருவாறு காலக் கிரயத்தை அவதானிக்க முடியும். 

"என் கதை" பிள்ளையவர்களின் குடும்பத்து கதையும் கூட.  இக்கதையின் தன்னிகரில்லா கதைமாந்தர் வெங்கட்ராம பிள்ளை - கவிஞரின் தந்தையார்.  இவர் தான் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி.  துரைமார்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் போலிஸ் ஏட்டு ஆன இவர் மகனின் மீது எல்லையற்ற பாசம் வைத்திருப்பவர்.  மகனுக்காக மறுகுபவர்.  தன் உறவுக்காரப் பெண் முத்தம்மாளை கவனிக்கும் இவர், இவள் தன் மகன் ராமலிங்கத்திற்கு சரியான ஜோடி என்று முடிவு செய்கிறார்.  இவருக்கும் முத்தம்மாளுக்குமிடையேயான உறவு நிலையை  அற்புதமாக ஒரு சினிமா கதாசிரியனுக்கே உரிய பாணியில் விவிரிக்கிறார் கவிஞர்.  தன் குழந்தைகளைவிட அதிக பாசமும் அன்பும் வைத்திருக்கும் முத்தம்மாளை தன் மகன் ராமலிங்கம் வெறுக்கிறான் என்பது அவருக்கு விழும் முதல் அடி. எதற்குமே வாழ்க்கையில் கலங்காத வெங்கட்ராம பிள்ளை மகன் முன் நின்று மன்றாடி கண் கலங்குகிறார்.  ஒரு பிரமிப்பான சினிமாவின் மிக முக்கியமான காட்சி போன்று பிரதியில் வெளிவந்திருக்கும் தருணம் இது.

பிரதி முழுக்க படித்த பிறகும் எதுவும் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ஆச்சர்யத்தின் மூலம், ஒரு கூர்த்த திரைக்கதைத் திட்டத்துடன் அத்தியாயங்கள் எழுதப்பட்டிருப்பதுதான்.  ஒவ்வொரு அத்தியாயமுமே ஒரு தனி மனிதனின் வாழ்வில் முக்கியமான காலகட்டத்தைப் பேசுகிறது.  தன்னுடைய மனைவி முத்தம்மாள்தான் கவிஞர் காதலித்த முதல் பெண்ணா?  அந்த சீதா இவருக்கு யார்?  சீதா இவரைப் பற்றி என்னதான் நினைத்தாள்?  தன் நண்பன் மண முடிப்பதாக இருந்த அவனின் முறைப் பெண்ணான சீதா, கவிஞரிடம் தன்னை மனதளவில் ஒப்படைத்திருந்தாளா? நண்பன் வெங்கடவரதனுக்கு சீதாவின் மேல் காதல் இருந்த நிலையில், சீதாவும் கவிஞரும் பழகியதை அவன் வெள்ளந்தியாக பாராட்டுகின்றானா, துரியோதனன்கள் இந்த நாட்டில் எப்போதுமே பிறந்து கர்ணன்களைப் புரிந்துகொண்ட வண்ணமே உள்ளனரா?  வாழ்வின் போக்கு திசை மாறி அடித்து, வெங்கடவரதனும் இல்லாமல், ராமலிங்கமும் இல்லாமல், எதோ ஓர் மைசூர் பணக்காரருக்கு வாழ்க்கைப்பட்டு,  உடனடியாக ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளுக்கு தாயாகி, அவசரமாக விதவையாகி, பதினைந்து வருடத்தில் ராமேஸ்வர ரயில்வே பிளாட்ஃபாரத்தில் அகஸ்மாத்தாக ராமலிங்கத்தை கண்டுபிடிக்கும்  சீதா தன் வாழ்க்கையில் கண்டுபிடித்ததுதான் உண்மையில் என்ன?  நிராசையா?  1927-ல் சீதா செத்துப் போன செய்தி கவிஞருக்கு கிடைக்கும்போது, வாசகன் திக்கித்துப் போகிறான்.

கவிஞரின் வாழ்க்கை, ஒவ்வொருவருடையது போலவே, சுவராஸ்யங்கள் நிறைந்ததாக உள்ளது.   கவிஞரின் தாயார் பிடித்துத் தந்த இலுப்ப மர பேய், பேய் பிசாசுகளில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவைகள் உண்மையில் யார் என்று காட்டிக்கொடுப்பதாக உள்ளது.  இதற்கு சற்றும் சுவராஸ்யம் குறையாத இன்னொரு பகுதி மாணிக்கம் நாயக்கருடன் கவிஞர் டெல்லி, பெஷாவர், காசி போன்ற ஊர்களுக்கு பிரயாணம் செய்வது.  வட இந்திய பண்டாக்கள் என்றுமே மாறுவதில்லை என்பது இன்றும் காசிக்குப் பொய் வருகிற பிரயாணிகள் உணர்வார்கள்.

 அடுத்து, வாசகனுக்குப் பெரிய பிரமிப்பைத் தருவது, கவிஞர் சந்தித்து உறவாடும் இந்த தேசத்தின் ஆகப்பெரிய ஆளுமைகள்.  ஈரோடு ராமசாமி நாயக்கர், ராஜகோபாலச்சாரியார், காந்தியடிகள், சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ஷண்முகம் செட்டியார், கிட்டப்பா போன்ற மாபெரும் ஆளுமைகளை பக்கத்தில் இருந்து பார்த்து பழகும் வாய்ப்பைப் பெற்ற கவிஞர், தானும் அந்த வரிசையிலேயே நின்று காட்சியளிக்கும்போது,  வாசகன் மகிழ்ந்து போகிறான்.

 இந்த சரிதையில் வாசகனைப் பெரிதும் கவருவது அனாவசியமாக வெளிப்பட்டிருக்கும் நேர்மை.  குழந்தை இல்லாத காரணத்தால், இரண்டாவதாக தன்னுடைய தங்கையையே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் மனைவி முத்தம்மாளிடம் கவிஞர் கேட்கிறார்: "சரி, எனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நான் இன்னொரு பெண்ணை கலியாணம் செய்து கொள்கிறேன். உனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நீ  இன்னொரு புருஷனைக் கலியாணம் செய்து கொள்கிறாயா?"  பிரதியின் இன்னொரு இடத்தில், காந்தியாரின் நேர்மையில் உவகை கொள்கிறான் வாசகன்.  ஏற்கனவே ஒப்புக்கொண்டு மக்களிடம் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருக்கிற கரூர், கோபி செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு உடல் நலம் பேரில் காந்தி வர மாட்டார் என்று ராஜாஜி கறாராக சொல்லிவிட, திகைத்துப் போகிறார் கரூர் காங்கிரஸ் பிரதிநிதியான கவிஞர்.  வாய்ப்பு கிடைத்ததும், காந்தியிடமே இதுபற்றி நேரடியாக கேட்கப்படுகிறது.  உடனடியாக, பயணத் திட்டத்தில் ஏற்பட்ட இத்தவறை நீக்கி கரூர் மற்றும் கோபிக்கு வருவதாக உறுதியளிக்கிறார் தேசத்தந்தை.

ஒரு நவீன நாவலுக்கு சற்றும் குறையாமல் வேகமெடுத்துப் பாயும் இந்த வரலாறு தனது கடைசிப் பக்கங்களில் கவிஞரின் வறுமையை சுய பச்சாதாபம் இல்லாமல் சொல்லிச் செல்கிறது.  கவிஞர் தன் இலக்கிய ஆளுமையின் உச்சத்தில் இருந்த காலமும் இதுவே.  திருக்குறளுக்கு பரிமேலழகர் உரைதான் லட்சியமானது என்பதனை கேள்விக்குள்ளாக்கும்  கவிஞர், அதற்கான மாற்று உரை எழுதும் பணியில் ஈடுபடுகிறார்.  காங்கிரஸ் சர்க்கார் பெரிதாக கவிஞருக்கு எதையும் செய்துவிடவில்லை, இரண்டொரு முறை ஜெயிலுக்குள் தள்ளியதைத் தவிர.  உதவ விரும்பும் நண்பர்களை விதி வழிமறிக்கிறது.  எல்லாவற்றையும் தன் பழைய வீட்டு மாடியில் இருந்து அவதானிக்கும் கிழவரான இந்த கவிஞர் யார் மீதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் தன் வறுமையை சொல்லுகிறபொழுது, கவிஞனாகவோ தேச பக்தனாகவோ நல்லவேளையாக நாம் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இப்பிரதி முழுக்க நம்மை சுண்டியிழுப்பது கவிஞரின் ஆற்றொழுக்கான தமிழ் உரைநடை.  எந்தவித வர்ணமும் பூசப்படாத உரைநடை.  எளிமையைக் கூட சிலர் வரவழைப்பார்கள்.  இவரிடம் எளிமை இயல்பாக உள்ளது.  முற்று முழுவதுமாக இதைப் படித்து முடித்தவுடன் ஒரு Bildungsroman ரக நாவலை முடித்த திருப்தி.  இதன் இறுதிப் பக்கத்தில் பாரதியார் அதிகாலை வேளையில் பித்தர் போல பாடியதைக் கேட்ட கவிஞர், அவரின் வடிவத்தை சாயத்தில் வரைய ஆசைப்படுகிறார்.  ஆனால், அவருக்கு பாரதியாரின் உள்ளம்தான் முன் வருகிறது.  உருவம் வருவதில்லை.  பாரதியின் உள்ளமும் தெரியக்கூடிய அவரின் உருவத்தை விரைவில் அமைப்பதாக கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உறுதியளிக்கிறார். "என் கதை" படித்து முடித்த பிறகு, வாசகனுக்கு கவிஞரின் உருவம், உள்ளம் மட்டுமன்றி அவரின் வாழ்க்கை, தேசம் எல்லாமே காலத்தின் கல்லிடுக்குகளிலிருந்து சுரந்து மெல்ல தளும்பி மேலே வந்து கண்ணையும் கருத்தையும் நிறைக்கிறது.



நன்றி மறவேல்

| Saturday, September 21, 2013


(2012 ஆகஸ்டு 15-ம் திகதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கும் விருதான சிறந்த ஆசிரியர் (முதுகலை) விருதினை பெற்றதின் காரணமாய், பணிபுரியும் பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவினில் பேசிய நன்றியுரை)

பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், எனது சகாக்களுக்கும் மனமுவந்த வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.  மாவட்டத்தின் சிறந்த முதுகலை ஆசிரியர் எனும் விருதினை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றிருக்கிற இப்பொழுதிலே எனது உள்ளத்தில் சில நிழலாடல்கள்.  

நினைவு தெரிந்த நாளிலிருந்து லட்சியமே இல்லாத ஒரு வாழ்க்கை.  என்னவாக வேண்டும் என்ற வேட்கை நண்பர் குழாத்திடம் மிகுந்திருந்த வேளையில் அதுபற்றி சிறிதும் கவலையின்றி திரிந்தலைந்த நாட்களிலே நிச்சயமற்றுக் கிடந்தது எனது எதிர்காலம்.  தாயும், தந்தையும் ஆசிரியர்களாதலால் வீடு நிரம்பிக் கிடந்தன சஞ்சிகைகள்.  தீபம், கணையாழி, கலைக்கதிர், தாமரை, விகடன், தினமணிக்கதிர், கல்கி போன்ற பத்திரிகைகளை புரிந்தோ புரியாமலோ படிக்க வேண்டிய கட்டாயம்.   எனது தந்தையின் ஆசிரியரும் நண்பருமான ஆங்கில உபாத்தியாயர் ஒருவரிடம் ஆங்கில இலக்கணப் பயிற்சிக்காக, ஐந்தாவது படிக்கின்ற நிலையிலே சேர்த்துவிடப் பட்டேன். இந்தக் கப்பல் கரை சேர்ந்தது அப்போதுதான்.  எனது தந்தையைவிடவும் நான் பெரிதும் மதிக்கிற, இவ்வருடம் மார்ச்சு மாதம்  மரித்துப்போன அப்பெரும் ஜோதி, TVS என்று எம்மால் அன்பாக விளிக்கப்பட்ட திரு.T.V.சௌந்திரராஜன்.  என்னை எனக்கே கண்டுபிடித்துக் கொடுத்தவர்.  இலக்கண அரிமா.  சுயம்பு.  வேதனைகளை புறந்தள்ளிக் கொண்டே தனக்குப் பிடித்த வேலைகளை அயராது செய்துகொண்டிருந்தவர்.  அவர் சொல்லித்  தெரிந்து கொண்டதைவிட, அவரைப் பார்த்து புரிந்து கொண்டது அதிகம்.  விழித்திருக்கும் நேரமெல்லாம் புத்தகமும் கையுமாகவே இருப்பார்.  ஆசிரியர் பணி உனக்கு வேண்டாம் என்று என்னிடம் எப்பொழுதும் சொல்லுவார்.  ஆனால், அந்த ஆளுமையின் வசீகரம், அவரைப் போலவே ஆக வேண்டும் என்ற ஆசை.  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.  ஆனால் உடம்பு முழுக்க இருக்கும் சூட்டு வடுக்களைப் பார்க்கும் பொழுது பூனை ஆசைப்பட்டது எதற்கு என்று புரிகிறது.  சில சமயங்களில், வலியும்  இன்பந்தான் அல்லவா?

பள்ளியில், பல்கலைக் கழகங்களில் படித்ததை விட, வீட்டு முற்றத்தில், மாடியில், சினிமாக் கொட்டகைகளில் டிக்கட்டுக்காக காத்திருக்கையில் படித்தது அதிகம்.  பாடங்களை விட, பாடத்திற்கு வெளியே படித்தது அதிகம்.  செய் என்றதை செய்யாமல் விட்டதும், செய்ய வேண்டாம் என்று தடுத்ததை எப்பாடு பட்டாகிலும் செய்திருப்பதும் நெஞ்சு நிறைய அனுபவங்களைத் தந்திருக்கிறது.

நான் நல்ல ஆசிரியன் அல்ல.  ஒரு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகள் எதுவும் இல்லாதவன் நான்.  மரியாதை தெரியாதவன். திமிர் பிடித்தவன்.  எதிப்பதை விருப்பமாக செய்பவன்.  கேள்வி கேட்பவன்.  கோணல் புத்திக்காரன்.    முன்கோபி.  விளைவுகளின் கவலையின்றி களமாடுபவன்.  நேரந்தவறாமை தெரியாதவன்.  அடிக்கடி காணாமல் போய்விடுபவன்.  ஆனாலும்கூட, நல்லாசிரியன் விருது வாங்கும் இந்நேரத்திலே, ஆழ்ந்து உற்று நோக்கும்பொழுது, வேறு சில ஆளுமை பண்புகளும் தெரிகின்றன.  யாரிடம் பேசுகிறோமோ அவருக்குப் புரிய வேண்டும் என்ற கரிசனம் கொண்டவன்.  மாணவனை நண்பனாக்கத் தெரிந்தவன். கிண்டல், கேலி மற்றும் வசவுகளின் மூலமே அன்பை வெளிபடுத்துபவன்.  சுமாரான நிகழ்த்துக் கலைஞன்.  மாணவனை அழ வைக்க
வும், சிரிக்க வைக்கவும், அரிதான பொழுதுகளில் சிந்திக்க வைக்கவும் தெரிந்தவன்.  நன்றி மறவாதவன்.  இது எல்லாவற்றையும்விட, படிப்பவன்.  முயன்றாலும் நிறுத்த முடியாதபடி படித்துக் கொண்டிருப்பவன்.   இவைகளில் ஏதோ ஒன்று என்னை இங்கே நிறுத்தி வைத்திருக்கக்கூடும்.

இந்த விருது எனது குடும்பத்தாரை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.  நண்பரை பெருமிதப்படுத்தியுள்ளது.  வீட்டு குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  என்னை சிந்திக்க வைத்துள்ளது.  சஹாக்களிடையே சிறந்தவர் என்று
நான் எண்ணும் சஹாக்களை உற்று நோக்க வைத்துள்ளது.  அவர் போன்ற தன்மைகளை, குணங்களை முயன்று பார்க்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளது.  முன்னிலும் அதிகமாக படிக்க வேண்டும் என்று புரிய வைத்துள்ளது.  எமது மாணவர் நலம் பொருட்டு, முன்னெப்போதையும் விட அதிகமாக இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புணர்வுடன் அறிவுலகு கதவு திறந்து அவரை வழி நடத்த வேண்டும் என்ற கடப்பாடு உரைக்கின்றது.

இந்த வெளிச்சங்களோடு, இவை விளக்கும் தரிசனங்களோடு, உம் முன் நின்று, விருதளித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகளுக்கும், ஊர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த  நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, சஹாக்களிடம் நட்பு பாராட்டி எமது இடம் சேர்கிறேன், வணக்கம்.

இ.பா.வின் "கால வெள்ளம்"

| Sunday, September 15, 2013

தனி மனிதனின் வாழ்க்கை என்பது நூதனச் சிக்கல்களால் நிறைந்திருக்கிறது. சராசரியாக அறுபதும், விதிவிலக்கான மனிதர்களின் கதையில் எண்பது வருடங்களுமாக நீளும் இந்த வாழ்க்கையில் துன்பங்கள் தீர்க்க முடியாத சிக்கல்களால் வளர்கிறது. தீர்வு ஏதும் தெரியாத நிலையிலேயே மனிதனுக்கு இவ்வுலகு விடுதலை அளித்து அனுப்பி வைக்கிறது.  தன்னுடைய பூதவுடலுக்கு நேரும் நோய்மையும், முதுமையும் பெரும் துயரம்தான் என்ற போதிலும், சமூகத்தோடு அவன் கொண்டிருக்கிற உறவால் சமூகம் அவனுக்கு வழங்குவதான அக மற்றும் புற உலகு சார்ந்த துன்பங்களால், வலிமையின் ஆணவத்தால் இறுமாந்து நின்ற அவன் சிறுகச் சிறுக செல்லரித்துப்போய் மனம் பேதலித்து தனக்குள்ளாகவே பேசி மறுகி சாவை மட்டுமே எதிர்பார்த்து, வந்தவுடன் கிளம்பிப் போகிறான்.

சமூகத்தின் வாயெங்கும் ரத்தக்கறைகள்.  சமூகம் ஒரு யட்சி.  கிட்ட வந்து  மோகம் காட்டி, மயக்கி, சுகமே போல ஒன்றை தந்து, சொக்கி நிற்கும் வேளையில் கடித்துக் குதறி ரத்தம் குடிக்க தொடங்கும்.  சமூகத்தின் பேச்சு விஷக்குரலால் ஆனது. அதன் தராசுகள் பல்வேறு தருணங்களில் வேறு வேறு நியாயங்கள் காண்பிக்கும்.  பழி வாங்குவதிலும் சமூகத்தின் குணம் வேறு எதற்கும் சளைத்ததல்ல.  அதற்கு யானையின் நினைவாற்றல் உண்டு.  அதிகாரத்தைக் கண்டு சற்று பயப்படுவதைப்போல்  நடித்தாலும், சீக்கிரம்  அதிகாரமே இதைக் கண்டு பயப்படும்.  சமூகத்தின் உடம்பு துர்நாற்றத்தால் ஆனது.  யாரையும் தூக்கிப் பிடித்த மறுகணமே, விளாசி அடிக்கும் குணம் கொண்டது.

மனிதனின் வரலாற்றில் அவனுடைய எந்த சமூகமுமே இந்த பொதுவான குணங்களால்தான் நிரம்பி இருக்கிறது.  நாகரீகம் வளர வளர சமூகம் தனது முந்தைய நிலையைவிட, மேலும் மோசமான அக மற்றும் புற சவால்களைத்தான் தனிமனிதனுக்கு தந்திருக்கிறது.  துன்பமே உருவான இந்த வாழ்க்கையில் சில மகத்தான மனிதர்களையும், தருணங்களையும்  சந்திக்கும் பாக்கியம் பெற்ற ஒரு தனி மனிதன் அந்த பெரும் மனிதர்களின் தரிசனங்கள் தரும் ஞானத்திலும், அற்புதமான தருணங்களின் வெளிச்சதிலும்தான் மிச்ச நாட்களை ஓட்டி, மறுகி, மரித்துப்போகிறான்.

 தமிழ் நவீன இலக்கியத்தின் பெரிய ஆளுமைகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவலான "கால வெள்ளம்" கிழக்கு பதிப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.  இவருடைய பிந்தைய புனைவுப் படைப்புகளை பெரும்பாலும் படித்து முடித்த பிறகு, அவரின் ஆதி புனைகதையான கால வெள்ளத்தை படிக்கும்பொழுது, இவரின் படைப்புத் தொடர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் புரிகிறது. இதில் கதை சொல்லப்பட்டிருக்கும் முறை, அவரின் பிந்தைய நாவல்களில் காணப்படும் நடையியல் சார்ந்த குணாதிசியங்களில் இருந்து வேறுபட்டது.  1920-களில் ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த பச்சைக்கல் என்ற தனிமனிதனின் கதையாக தொடங்கும் புனைவு, அக்காலத்திய பெண்களின் துயர் சொல்லும் கதையாக வளர்ந்து, அந்நாளைய கல்வி, சமூக வாழ்க்கைமுறை, மெல்ல வேகம் எடுத்துக்கொண்டிருந்த   தேசிய விடுதலைப் போராட்டத்தின் கதையாக கனிந்து, ஒரு குடும்பத்தின் பரிணாமத்தில் முடிகிறது.

ஸ்ரீரங்கத்து பிராமணர்களின் கதையுமாகும் இது. விதவிதமான பிராமணர்கள்.  தாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றி சுரத்தையில்லாமல், மற்ற எல்லாவற்றையும் கணித்துக்கொண்டிருக்கும் அந்த திண்ணை பிராமணர்கள், யாரையும் தங்கள் பேச்சுக்களால் நொறுக்கிப் போட முடியும்.  தாங்கள் விளையாடும் சீட்டை குலுக்கிப் போடுவதைப்போல, எவரின் வாழ்க்கையையும் குலுக்கி நொறுக்கிவிட முடியும் என்ற இறுமாப்பில், திண்ணை பேச்சுக்களால் ஸ்ரீரங்கத்தையே இவர்கள் நிரப்பியிருந்தனர்.  


பச்சைக்கல் நல்லவரா கெட்டவரா என்று நாவலின் வாசகன் மட்டுமல்ல, அவராலேயே தீர்மானித்துவிட முடியாத மனிதர்.  எல்லோரையும் கட்டுப்படுத்த நினைத்து யாரையுமே கட்டுப்படுத்த முடியாமல் போனவர்.  மிக அபூர்வமான நற்குணங்களும் தன் முரட்டு சுபாவத்தில் இருக்கக் கொண்டவர்.  முதல் மனைவி உயிரோடு இருக்கையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுப்பது, குழந்தை வேண்டுமென்பதற்காகவோ, ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காகவோ அல்ல, பெண் குழந்தை வேண்டுமென்பதற்காகத்தான் என்று அறிய வரும் வாசகன், அவரை எப்படி எடை போடுவது என்று திகைத்துப் போகிறான்.  இந்த நாவல் களனாக கொண்ட காலங்களில் ஆண் எவ்வளவு அதிகாரம் படைத்தவனாக குடும்பம் என்ற அமைப்பில் விளங்கியிருக்கிறான் என்று அறியவரும் இன்றைய இளைன் பிரமித்துப் போகிறான். குடும்ப சொத்துக்கு வாரிசு என்ற நிலை அக்குடும்பத்தின் மூத்த ஆணுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கிவிடுகிறது.  முதல் மனைவியிடம் தான் இன்னொரு கல்யாணம் செய்ய இருப்பதை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் அறிவிக்கமுடிகிற இந்த பச்சைக்கல், அந்தக்கால காவிரிக்கரை பிரபுத்துவ பிரதிநிதி.  தன்னைவிட முப்பது வயது குறைவான பெண்ணை திருமணம் செய்யும் ஆசை இருந்தாலும், முக்கியமான காரணம், குடும்ப ஜோதிடர் பெண்குழந்தைக்கான சாத்தியம் பற்றி கணித்திருக்கிற ஆருடம்தான் அவரை இயக்குகிறது.  தன் மனைவிகளிடம் பணிவைத் தவிர வேறு எதையும் விரும்புவதோ எதிபார்ப்பதோ இல்லாத இந்த பச்சைக்கல், பெண் பித்தர் அல்லர்.  அவரின் துர்குணமாக நாவலில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பது, அவரின் கோபம்தான்.  எல்லோரையும்போல, அவருடைய இயலாமையும் கோபம் என்ற வடிகாலையே தேடுகிறது எப்பொழுதும். 

 தன்னுடைய இளம் மனைவி படித்திருக்கிறாள் என்பதிலிருந்து தொடங்குகிறது அவரின் துன்பம்.  செல்லத்திற்கு பச்சைக்கல்லை எதிர்க்க நேரும் சமயங்களிலெல்லாம், அதை மிகச் சரியாக செய்கிறாள்.  அவரின் பணம் மற்றும் செல்வாக்கு இவளை சற்றும் பாதிக்கவில்லை என்பது அந்நாளைய பள்ளிக்கூட கல்வியைப் பற்றி வாசகனுக்குள் பெரிய மரியாதையை ஏற்படுத்துகிறது. பச்சைக்கல்லின் முதல் மனைவி அலமேலு வாசகனை கண்மூடி சிந்திக்கவைக்கும் பாத்திரம். உண்மையில், பச்சைக்கல்லை நன்கு அறிந்த ஒரே மனுஷி அவள்தான்.  பச்சைக்கல் நேசித்த ஒரே மனுஷியும் அவள்தான்.  பச்சைக்கல்லை அவள் தூஷிப்பதில்லை; மாறாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள்.  தனது கணவரின் இரண்டாவது மனைவியாக அந்த பிரம்மாண்டமான வீட்டிற்குள் நுழைந்திருக்கும் செல்லத்தை தனது மகள் போலவே நடத்தும் இவள், பச்சைக்கல் பிராமணரின் ஒரே பலம். இவள் நோய்மைக்குப் பலியாகிற தருணம்தான், பச்சைக்கல்லின் போதாத காலத்தின் தொடக்கம்.  பெண்பிள்ளை பெறுவதற்காக மணந்து கொண்டவளுக்கு ஆண் பிள்ளையும், ஏற்கனவே இரண்டு ஆண்குழந்தைகளை பெற்றுத்தந்த முதல் மனைவிக்கு பெண் குழந்தையும் பிறப்பது  வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்றுதானே?  இரண்டாவது மனைவியாக ஒரு சிறுமி வாய்த்தும், தன முதல் மனைவி மீதான காதல் தீரவில்லை பச்சைக்கல் பிராமணருக்கு. இரண்டு பத்தினிகளும் ஏக காலத்தில் கர்ப்பம் சுமக்கிறார்கள்.  மிகக் குரூரமாக நம்மால் பார்க்க முடிந்தால், பச்சைக்கல்லின் அன்பை இதில் புரிந்து கொள்ள முடியும்.  தன் இரண்டாவது மனைவியை இவர் அணுகுவது பெண் குழந்தைக்காக; முதல் மனைவி எப்போதுமே இவரின் அன்புக்கு பாத்திரமாயிருக்கிறாள் என்பது, அக்கால வெளிச்சத்தில், இந்த ஏக காலத்து கர்ப்பங்களால் விளங்குகிறது.  பெண்ணானவள் குழந்தை பெற்றுத்தள்ளும் இயந்திரம் அல்ல என்ற பெண்ணீய குரல்கள் கிளம்பியிருக்காத அந்தக் காலங்களில் பச்சைக்கல் மாதிரியான மனுஷன்களும், அலமேலு மாதிரியான மனுஷிகளும் தங்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் வலிமையை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில்தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மூன்றாவது குழந்தை பிறந்த  இரண்டு மாதங்களுக்குள் நோய்மைக்குப் பலியான அலமுலுவின் குழந்தை வேதவல்லிக்கும் சேர்த்து பாலன்னம் தரும் செல்லத்துக்கு, பச்சைக்கல்லின் ஆதிக்கத் திமிர் சுமக்க முடியாத பாரமாகிறது.  இவள் சிந்தனை, அறிவால்  உருப்பெற்றது.  எந்த சூழ்நிலையையும் ஆராய்ந்த பின்னரே புரிந்து கொள்கிறாள்  பெண்ணுரிமைப் பற்றி பேசத் தொடங்கியிருக்காத காலங்களிலேயே அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் செல்லம், பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்புவள்.  ஒன்றை பெறுவதற்காக, மற்றொன்றை இழக்கத் தயாரானவள்.  தன்னுடைய குழந்தை கோபாலனையும் பச்சைக்கல்லிடமே விட்டு விட்டு, திருச்சினாப்பள்ளி வழியாக பட்டணம் சேரும் இவளை, வாழ்க்கை சமூக சேவகியாக கனிய வைக்கிறது.

பச்சைக்கல்லின் குழந்தைகள் நால்வருமே தங்களுடைய வாழ்க்கையில் முற்றுமுதலாக செய்வது, பச்சைக்கல் தங்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கு எதிர்வினை செய்வதே.  உப்பிலி படிக்காதவன்.  தந்தையார் தன்னை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்பதாலேயே, சீட்டாடப்போய் கெட்டுப்போனவன்.  உண்மையில், இவன்தான் பச்சைக்கல்லை அச்சு அசலாக தோற்றத்தில் உரித்து வைத்திருக்கிறான்.  அப்பாவைப் போலவே இவனும் கருப்பு.  தன்னுடைய சகோதரி மீதும், சகோதரர்கள் மீதும் பொறாமை கொண்டவன்.  அவர்களைப் பற்றி புறம் சொல்லியே பழகியவன்.  தன்னுடைய முப்பதுகளின் ஆரம்பத்தில், தன் தாயாரின் புகைப்படத்தின் முன்னின்று கலங்கி அழுது, இனிமேல் சீட்டாடமாட்டேன் என்று சத்தியம் செய்து, உபகாரியாக திடீரென்று மாறுகிறான்.  வாழ்க்கை எப்பொழுதும் நமக்கான ஆச்சர்யங்களை மறைத்து வைத்திருக்கிறதல்லவா? உப்பிலியின் சகோதரன் சாரங்கன் ஒரு பிறவி சைத்ரீகன். தந்தையாருக்கு பயந்து சிறுவயதில் எங்கேயோ ஓடிப்போய், சைத்ரீக கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று, பம்பாயில் மராத்தியப் பெண் சந்தியாவை கல்யாணம் செய்துகொண்டு, தெருக்களில் படம் வரைந்து, ஏழ்மையில் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிற ஒரு இல்லற யோகியாக பரிமளித்துவிடுகிறான். 
அப்பாவின் குழப்பமான பயமுறுத்தும் ஆளுமைக்கு இவன் செய்யும் எதிர்வினை இது. பச்சைக்கல்லுக்கும் செல்லத்துக்கும் பிறந்த அவரின் மூன்றாவது மகனான கோபாலன் இந்த நாவலில் பச்சைக்கல்லுக்கு அடுத்ததான பிரதான பாத்திரம்.  அப்பாவிடம் எப்படியோ அனுமதிபெற்று பட்டணத்திற்கு படிக்க கிளம்பும் கோபாலன், தேசிய விடுதலை போராட்டத்தின் தீவிரவாத குழுக்களால் கவரப்பட்டு, பாலங்களை நாசமாக்கவும், ஆங்கிலேய தண்டவாளங்களை தகர்க்கவும் முனைகிறான்.  ஆனால் சுற்றியிருக்கும் கந்தியவாதிகளிடம் தொடர்ந்து நட்பில் இருக்கும் அவன் காந்தீயத்தின் வலிமையை உணரும் நிமிடம், தன் இயலாமையை புரிந்துகொள்கிறான்.  விடுதலை போராட்டத்தில் பங்குபெற்றாலுங்கூட, தன்னுடைய குடும்பத்தோடு தொடர்ந்து உறவாடுகிறான்.  தன்னுடைய தங்கை வேதவல்லியின் திருமணத்தில் நடந்த சீட்டாட்ட குளறுபடிகளால், அவள் வாழாவெட்டியாக வீட்டிலிருப்பதைச் சகிக்காத கோபாலன், அப்பாவுக்கு தெரியாமல் தங்கையை கடத்திச்சென்று சம்மந்தி வீட்டில் சமத்காரமாகப் பேசி, தங்கையை வாழ வைக்கிறான்.  அவனுடைய புரட்சி இப்படியாக அப்பாவை எதிர்த்தே தொடங்குகிறது.  பச்சைக்கல்லின் நான்காவது குழந்தையான வேதவல்லி, அலமேலுவுக்குப்பின் அவருக்கிருக்கும் ஒரே நல்ல ஆறுதல். அவளிடம் மிகுந்த பரிவைக் காட்டுகிறார் பச்சைக்கல்.  அவளுடைய திருமணம் சுபமாக முடியாமல் அமங்களமாக தொடர்வதில் பெரும் கவலை அவருக்கிருந்தாலும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுத்து சம்மந்தி வீட்டாரிடம் பேச அவர் தயாரில்லை.  வேதவல்லியின் ஆளுமை நன்கு புலனாவது அவள் புக்ககம் போய்ச்சேர்ந்த பின்தான்.  தன்னுடைய கணவனும், மாமனாரும் கெட்டவர்களில்லை என்று உடனடியாக புரிந்துகொள்ளும் வேதவல்லி, அங்கே ஒரு நல்ல மந்தியாகிறாள்.

இந்த நாவல் நமக்கு திரும்பத் திரும்ப சொல்வது மனிதர்கள் முழுக்க நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை என்பதுதான்.  ஒரு மனிதன் ஒரே சமயத்தில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருப்பதுகூட சாத்தியம்.  அவன் நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ முடிவு செய்யப்படுவதற்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  அப்படிப்பட்ட எந்தவொரு முடிவும் மாறுதலுக்குட்பட்டதே.  காலவெள்ளத்தால் மனிதன் மற்றும் அவன் வாழும் சமூகத்தின் தோற்றம், விழுமியங்கள், அறம் போன்ற எல்லாமே மாறுதலுக்குட்பட்டாலும் - மனிதன் - அவனுடைய அடிப்படை சாராம்சத்தில் - எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறான். 

இந்த நாவலில் வரும் மற்ற கதாபாத்திரங்களான வீரராகவாச்சரியார், ரெங்கு  அய்யர், பத்மா, துரைராஜ், ராஜாராமன், திவான் பகதூர் உள்ளிட்டோர் ஒவ்வொருவரும் தனித்த குணங்களுடன் சித்தரிக்கப்படுகின்றனர்.  இப்புதினத்தின் மூலம் சமூகத்தில் ஒரு காலகட்டத்தை ஒரு தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கட்டியெழுப்புகிறார்  இ.பா.  கதையின் பெரும்பான்மை பகுதிகள், இ.பா.வின் பிந்தைய நாவல்களைப்போல தொடர் சம்பாஷணைகளால் ஆனது.  பேசிப்பேசியே மானுடக்கதை வளர்கிறது.  கேட்கும் மனிதன் பேசுகிறான்.  பேசும் மனிதன் கதை சொல்கிறான்.  சொல்லப்போனால், இந்த உலகமே கதைகளால் ஆனது.  சொல்லப்பட்ட கதைகளும், சொல்ல மறந்த கதைகளும், கதையின் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்தியபடியே நகர்கின்றன.  தன் சொந்த கதையின் கனம் தாங்க முடியாமல், மனம் பேதலித்து எங்கோ ஓரிடத்தை வெறித்து நோக்கிய வண்ணம் நாற்காலியில் அமர்த்தப்பட்டிருக்கும் பச்சைக்கல், காலவெள்ளத்தால் அடித்துச்செல்லப்படவே முடியாத மானுடத்தின் பெருங்கதையை தனது பேதலித்துப்போன மௌனத்தால் சொல்லத் தொடங்கும்பொழுது, நாவல் முடிகிறது. 

சில நேரங்களில் சில புத்தகங்கள்

| Saturday, September 14, 2013
ஜெயமோகனின் "இரவு" நாவல் அண்மையில் படிக்கக் கிடைத்தது. இவரின் வழக்கமான கதை களனில் இருந்து சற்று விலகி, ஒரு இரவு நேர கல்ட் குழு ஒன்றின் செயல்பாடுகள் மற்றும் அது ஒரு தனி மனிதனின் மேல் உருவாக்கும் தாக்கம் பற்றி, இவருக்கே உரித்தான நடையில் இருந்து மாறுபட்டு எளிய நடை ஒன்றை உருவாக்கி எழுதியிருக்கும் புனைவு. பெரிய பாதிப்பை இது ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும், சும்மாயிருக்கையில் நிச்சயமாக வாசிக்கத் தகுந்த படைப்பு.
---------
ச.மாடசாமி அவர்களின் "ஆளுக்கொரு கிணறு " என்ற கல்வி சார் கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில் படிக்க நேர்ந்தது. இதைப்போல் பதிப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம் சமீப காலங்களில் வெளிவரவில்லை. ஒவ்வொருவரும் படிக்க நிச்சயமாக பரிந்துரை செய்யலாம்.
-------
இந்திரா பார்தசாரதியின் கால வெள்ளம் அண்மையில் படித்தேன். இவரின் முதல் படைப்பு இது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. அந்தக்கால பிராமண சமூக வழக்கங்களை, அவர்களின் நம்பிக்கைகளை இன்றைய வாசகன் இந்த பிரதியின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ள ஏதுவாகிறது. அவசியம் படிக்க வேண்டிய புனை கதை இது.
 --------
  "எனக்குரிய இடம் எங்கே?" - ச.மாடசாமியின் மாஸ்டர்பீஸ். சந்தேகமேயில்லை. அமைப்பு சார் கல்வி முறைகளில் மாணவன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். ஆனால் அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனை மிரட்டியும் தண்டித்தும் ஆசிரியர் தனது மேலான இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். அவனுக்கான கல்வியை அளிக்காது, அரசு தனக்கு சௌகர்யமான பாடங்களை அவன் படிக்குமாறு வற்புறுத்துகிறது. 35 வருடங்களுக்கு மேலாக கல்லூரியிலும் அறிவொளி இயக்கத்திலும் பணியாற்றிய இந்தப் பேராசிரியர், எல்லா நிலை ஆசிரியர்களின் மனசாட்சியையும் உலுக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, இனிமேல்தான் மாணவர்களோடு சேர்ந்து படிப்பை கத்துக்கணும்.                                                                      அருவி மாலை, மதுரை வெளியீடு. ரூபாய் 60.
--------
எஸ்.வி.ராஜதுரை அவர்களின் "பார்வையிழத்தலும் பார்த்தலும்" படித்து வருகிறேன். அரசியல், புத்தக மதிப்பீடு, சமூக நிகழ்வுகளின் எதிரொலிகள், இலக்கிய மறுவாசிப்புகள் என்ற அகன்ற தளத்தில் தான் எழுதிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். "ஆர்டில்லெரிகளுக்கிடையே ஒரு வெண் புறா" - என்ற தலைப்பிட்ட கட்டுரையில் சீறிலங்காவின் நாடக, திரைப்பட கலைஞர்களில் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக நடுநிலையாளர்களால் கருதப்படுபவரும், பெளத்த பேரினவாத சக்திகளால் 'குறிவைக்கப்பட்டுள்ளவருமான' தர்மஸ்ரீ பண்டாரனயகெ அவர்கள் மறுவாசிப்புடன் மேடையேற்றிய "ட்ரோஜன் கந்தாவோ" நாடகத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளது சிறப்பானது. தர்மஸ்ரீ பண்டாரனயகெ விடுதலைப் புலிகளை ஆதரிப்பவரல்லர். ஆனால் சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர் என்று மதிப்பிடும் எஸ்.வி.ரா. அரசி ஹெக்கெபெயின் மகளும் அப்போலோ கடவுளுக்குத் திருப்பணி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்திருந்தவளுமான காஸ்ஸண்ட்ரா மற்றும் கிரேக்க மன்னன் மெலனொசின் மனைவியும் காவியத்தின் ஆகப்பெரிய கதாபாத்திரமுமான ஹெலன் ஆகியோரை பரிவுடன் அணுகுகிறார். இவர்களைப்பற்றிய தர்மஸ்ரீ பண்டாரனயகெவின் அணுகுதலை எஸ்.வி.ரா. இப்படிக் குறிப்பிடுகிறார்: "உடலுறவு இன்பமேதும் அனுபவிக்க முடியாமல் தடை செய்யப்பட்டிருந்த காஸ்ஸண்ட்ராவைப் போலவே, உடல் இன்பத்தை நாடியதன் காரணமாகவே பேரழிவுகளை உருவாக்கியவளாகக் குற்றம் சாட்டப்படும் ஹெலனுக்கும்கூட மானுட கெளரவம் மறுக்கப்படுவதில்லை. அன்பும் காதலும் இல்லாத திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருந்த அவள் தனக்குக் கிட்டாத சுகங்களைத் தேடி ட்ரோய் நகரத்திற்குச் சென்றதில் தவறில்லை என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறார் தர்மஸ்ரீ." ["பார்வையிழத்தலும் பார்த்தலும்" - எஸ்.வி.ராஜதுரை, சந்தியா பதிப்பகம், சென்னை, உரூபா 200/-]
----------
 

CLASSROOM COMMUNICATION – A TOOL FOR ENHANCING LANGUAGE SKILLS IN ENGLISH

| Sunday, September 8, 2013
  • Parrots, mynas and even ravens can be trained to speak.  They speak what is forced upon them.  As teachers of English, we seem to be bent on reducing our clients into performing parrots mouthing words they do not understand.

  • Balancing the art of providing holistic education and meeting the demands of the system that measures success in terms of marks garnered by students in Summative Examinations is a tightrope walk. Most of us succumb to the institutional, societal, and peer group pressure and condition our students to write responses without ever allowing them the joy of learning to communicate.

  • For example, in the teaching of poetry, the aim is to allow the students to discover the music of the language and respond to the sensibilities expressed in the poem in the most artistic and appealing way possible.

  • When it comes to the teaching of prose, the aim is to enable the student to decipher the content laid before him.  In addition, he/she is to make positive responses amounting to comprehension of the given text.

  • When the students are encouraged to express in their own words what has been grasped out of the given reading task, the resultant factor is their creative ability in the use of language.  The task of the teacher is to fine-tune the expressions that are manifest and encourage his/her clients to critically respond to all the texts that they do encounter.

  • Creative use of language is a clear indication of independent use of language. 

  • A good listener is an active listener in the sense that he/she reacts to what is heard.  The teacher is successful in enhancing the listening skill of the pupils when he/she uses language within the linguistic and worldly experience of the pupils.  The teacher, then, gradually steps up his language to expose to the students abstract ideas and he also helps them on how to achieve the abstractness in the language. 

  • As far as Listening Skill is concerned, “the human connectivity” is more important than any electronic apparatus or otherwise. It is only the teacher who is on ‘ground zero’ and only he can assess, grade, and upgrade the language experience of his/her students.

  • The teacher achieves Speaking Skill by making use of different language activities including role play, debates, elocution competitions, and so on.  The activities designed could be creative while urging the students to give voice to their ideas.  A democratic set-up inside the classroom is essential.  The teacher could deploy ‘pedagogical psychology’ in prodding pupils to react.

  • Reading Skill has been much debated these days.  Efforts are on to ascertain who a speed-reader is.  But at the secondary and higher secondary level, the teacher should pay attention to cultivate scores and scores of ‘purposeful readers’ rather than ‘speed-readers’.  Studies have shown that a reader could speed-read if he could read. If he cannot read, then he cannot speed-read too.  Materials that are sliced into intensive and extensive do expose to the students two different purposes of reading – for content and for enjoyment.

  • At last, the apex level of Writing Skill. By ‘writing skill’ is generally meant ‘mechanics of writing’.  What is to be stressed is ‘creative writing’.  Creative writing rests on responding to a given situation.  The teacher should ensure that the students come forward to put their ideas into paper.  ‘Grammar’ element need not be given any undue emphasis in the beginning.   Theoretically, one’s written language is perfected as it is practiced.  In other words, ‘grammar’ should be internalized over a period of time and it is not picked up in ‘hit-and-run’ fashion.

  • In the words of N.S.Prabhu, formerly Professor of English in CIEFL, Hyderabad, “the teacher is the method.”  The trick lies in the resourcefulness and creativity of the teacher.  The teacher, if he is warped in the perfect mould, affects not only the thinking and creative faculty of his students but also affects the behavioral, emotional, social, cultural, professional and even political composure of a personality.

THE HELP

| Saturday, September 7, 2013



ஆங்கில திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பது என்பது கிட்டத்தட்ட தினசரி வேளைகளில் ஒன்று  என்று ஆகிவிட்டிருந்து சில வருடங்கள் முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு "The Help"  எனும் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த படத்தை சென்னையோ, பாண்டிச்சேரியோ சென்றபொழுது பல படங்களுடன் சேர்ந்து வாங்கியிருந்திருக்கிறேன். அடிக்கடி இதன் DVD கண்ணில் படும். ஏனோ இதைப் பார்க்கத் தோன்றியதில்லை. தொண்டைக்குழியை அடைக்கும் சோகமான படங்கள் என்று தெரிந்தால், அதை நான் தள்ளி போடுவது வழக்கம். GANDHI படத்தை 25 வருடங்கள் கழித்துத்தான் பார்த்தேன். தொண்டைக்குழியை அடைக்கும் படம் என்று நினைத்திருந்தது என்னுடைய தவறுதான். இதற்கு பென் கிங்ஸ்லியோ, ரிச்சர்ட் அட்டென்பரோவோ பொறுப்பேற்க முடியாது.

திடீரென்று ஏதோ தோன்ற, இப்படத்தைப் பார்த்தேன்.  தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் பார்த்து முடித்த பிறகு, இவ்வளவு பாதிக்கும் படிக்கு ஒரு படத்தை சமீப காலங்களில் பார்க்கவில்லை என்று தோன்றியது. ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் இன்னும் அழுத்தமாக சமூகத் தளத்தில் நின்று அமெரிக்காவை ஆட்டிப்படைத்த நிறவெறி ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திலும் ஊடுபாவாக எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்பதை அறிய நேரும் என்னைப்போன்ற இந்தியனுக்கு, சாதி இந்து - ஆதி திராவிட அதே காலத்திய சமூக உறவை ஒப்பிட முடிகிறது.

வெள்ளை குடும்பத்திற்கு கருப்பன்களும், கருப்பிச்சிகளும் தேவை.   சமையல் கூடத்திலிருந்து படுக்கை அறையை தயார் செய்து வைப்பது வரை வெள்ளைக் குடும்பங்கள் கறுப்பர்களையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளைக் குழந்தைகள் ஒவ்வொருவரும் கறுப்புத் தாதிகளாலேயே வளர்க்கப்படுகின்றன.  தன்னுடைய குழந்தைகளை விதியின் கையில் விட்டுவிட்டு, வெள்ளைக்காரிகளின் குழந்தைகளை  12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை பராமரித்து வளர்த்தெடுக்கும் பணியில் வாழ்நாளை அழித்தொழித்த கறுப்பிகளின் கதை உலகின் வேறெந்த இடத்திலும் நடந்து முடிந்த சோகத்திற்கு சற்றும் குறைந்தததல்ல.

இந்தப் படத்தின் நாயகியும் - ஒரு கறுப்பி - தன்னுடைய மகனை இழந்தவள். நடைப்பிணமாக தன் வாழ்நாளை ஓட்டிவரும் இவள் தன்னுடைய வாழ்வாதார தேவைகளுக்காக ஒரு வெள்ளைக் குடும்பத்து தாதியாக இருக்கிறாள்.  அந்த கிராமத்து வெள்ளைக் குடும்பத்து பெண்மணிகள் மிகவும் நாசூக்கானவர்கள்.  கறுப்பிகளின் ரத்தத்தை வலி தெரியாமல் உறிஞ்சி எடுக்கும் வித்தை அவர்களுக்கு இயல்பாக தெரிந்திருந்தது.  படத்தில் வரும் கருப்பு வேலைக்காரிகள் பெரும்பாலும் தம்மேல் நிகழ்த்தப்படும் சமூக அவலங்களை மௌனிகளாகவே எதிர்கொள்கிறார்கள்.  அவர்களுக்கு இருக்கும் ஒரே ஜீவாதாரத்தையும் இழந்துவிட யாரும் முன்வர மாட்டார்கள்.  இவர்களுக்கிடையில் ஒரு வெள்ளைக்கார யுவதி மாறுபட்டு நிற்கிறாள்.  இப்படியான சமூகம் அவளுக்கு சம்மதமில்லாத ஒன்று.  அரும்பி வருகிற ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தன்னுடைய முதலாளியம்மாவிடம் பரபரப்பான தொடர் எழுதுவதாக சொல்லியிருக்கிற இந்த சிவப்பு யுவதி, கருப்பு தாதிகளின் அவலத்தை, அனுபவத்தை தொடராக சொல்வதாக உறுதிகொள்கிறாள்.

முதலிலே கதாநாயகியை அணுகும் பத்திரிக்கையாளருக்கு மறுப்புதான் பதிலாக கிடைக்கிறது.  தன்னுடைய அனுபவங்களை சொல்லும் பட்சத்தில், அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, பெரிய பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு உள்ளதால், கதாநாயகி தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மறுக்கிறாள்.  ஆனால், தன் தோழிக்கு நேரிடும் அவலத்தை செவியுறும் கணத்தில், தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறாள்.  இத்திரைப்படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் கதாநாயகியின் தோழி.  பல குழந்தைகளுக்கு தாயான இக்கருப்பி, தன்னளவிலே, ஒரு போராளி.  வெள்ளைக்காரிகளின் வீட்டு கழிவறைகளை கருப்பு வேலைக்காரிகள் பயன்படுத்துதல் மிகப் பெரிய குற்றம் என்று தெரிந்திருந்தும் கூட, அதை சகஜமாக மீறுபவள் மட்டுமல்லாது, மீறுவதிலே ஒரு சுகத்தையும், நியாயத்தையும்  காண்பவள்.  தான் வேலை இழந்ததையும் பொருட்படுத்தாதவள்.  தான் சமைக்கும் ஒரு பதார்த்தத்தை மிகவும் விரும்பும் கொடுமைக்கார வெள்ளைக்கார எஜமானியம்மாளுக்கு தன் மலத்தை தான் தயாரித்த பதார்த்தத்தில் கலந்து கொடுத்து, முதலாளியம்மாள் அதை சாப்பிட்ட பிறகு, "நீ இப்பொழுது சாப்பிட்டது எனது மலம்" என்று சகஜமாக அறிவித்துவிட்டு வெளியேறும் இவள் தீவிரமான சமூக சீர்திருத்தவாதி.

வெள்ளைக்கார யுவதியின் கறுப்பிகள் பற்றிய தொடர் மிகவும் பரபரப்பான விஷயமாகிறது. புத்தகமாகவும் வெளியாகும் இத்தொடர், பல சமூக அலைகளுக்கு காரணமாகிறது. கருப்பு வேலைக்காரிகளின் வாழ்வு அவலம் மாறுவதற்கான சூழல் மெல்ல மெல்ல உருவாகிறது. வெள்ளைக்காரிகளின் மத்தியிலோ, வெளியான புத்தகத்தில் பெயர் குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருப்பியின் மலத்தை தின்ற வெள்ளைக்கார எஜமானி தங்களில் யார் என்ற விவாதம் பரபரப்பான விஷமாகிறது.  மலத்தை தின்றவளோ தன் ஜன்மசாபல்யத்திற்கு என்ன செய்வது என்றறியாது திக்பிரமை பிடித்து நிற்கிறாள்.

மெல்ல சமூகம் மாறப் போவதற்கான நம்பிக்கை தெரிய, இத்திரைப்படம் நிறைவடைகிறது. மையக்கருத்திலிருந்து எந்தவொரு காட்சியிலும் விட்டு விலகாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்கிற இப்படம் முடிகிற தருணத்தில் கனத்துப்போன நெஞ்சுடன், இதேபோன்ற அவலங்கள் நமது சமூகத்திலும், நம்மைச் சுற்றியும் இருப்பதும், நாம் கருப்பிகளாகவோ, சிவப்பிகளாகவோ தொடர்வதும், சமூக மாற்றத்திற்கான நிஜமான அறிகுறி எதுவும் தென்படாதா என்று தவிக்கிற வேளையில், டீக்கடைகளிலும், தெருச் சுவற்றின் மீதும், திவ்யாவின் தோளின்மீது கைபோட்டு, சாவடிக்கப்படப்போவது தெரியாமல் தர்மபுரி இளவரசன் சிரிக்கிறான்.

A STREET CAR NAMED DESIRE

|

          
அமெரிக்க நாடக உலகில் கடந்த நூற்றாண்டின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்து, மாறிக்கொண்டு வந்த அமெரிக்க விழுமியங்களில் விளைந்துவந்த கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் டென்னிசி வில்லியம்ஸ். தொழில்மயமாக்கப்பட்டு வந்த அமெரிக்க சமூகம் தனது அத்தனை அறம் சார்ந்த விழுமியங்களையும் மாற்ற வேண்டி வந்தது. தொழிற்புரட்சி முதலில் சிதைத்துப் போட்டது குடும்பம் என்ற அமைப்பைத்தான். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் வரலாற்றில் முன்னெப்போதும்  இல்லாத பரிமாணங்களைத் தொட்டதும் இக்காலத்தில்தான். முதலாளிக்கென்று ஒரு தனி சமூக விழுமியமும், அவனிடம் வேலை செய்யும் தொழிலாளிக்கென்று தனி சமூக விழுமியம் ஒன்று தோன்றி நிலைபெற்றதும் இப்போதுதான். செவ்வியல் இலக்கியங்கள் தாங்கிப் பிடிக்கிற வாழ்வியல் நெறிகளை இரண்டாம் தொழிற்புரட்சி முற்றிலும் புரட்டிப் போட்டு விட்டது. குடும்பங்கள் இரண்டாக, நான்காக சிதைந்தன. தந்தை ஒரு புறமும், தனயன் வேறு எங்காணும் வாழ வேண்டிய கட்டாயம். அக்காவும், தங்கையும் கண்டத்தின் இரு கரைகளில். ஒருவனை அவனது சிறு வயது ஞாபகம் மட்டுமே அவனுடைய குடும்பத்தோடு பிணைத்து வைக்கும் பரிதாபம்.

எனது எம்.ஏ. தேர்வுகளுக்காக அமெரிக்க இலக்கியத்தின் சில பிரதிகளை படிக்க வேண்டிய கட்டாயத்தில் முதன்முதலாக டென்னிசி வில்லியம்சின் A Street Car Named Desire படிக்க நேர்கையில், நாடகத்தில் இடம்பெறும் பல வசனங்களை ஜீரணிக்க முடியாத வயதும், காலமும். உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் இந்தியாவை தீண்டியிராத அந்த அற்புத பொழுதுகளில் எனக்குத் தெரிந்த கலாசாரத்தின் வழியாக நோக்கையில் மிகவும் அன்னியமாக தெரிந்த இந்தப் படைப்பை, இப்போது திரைப்படமாக பார்க்க நேர்ந்தது. Marlon Barndo மற்றும் Gone With The Wind படத்தின் நாயகி Vivien Leigh ஆகியோர் தங்களது நடிப்புத் தேர்ச்சியை தாம் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். 


மிகக் கவனமாக வருடக்கணக்கில் தான் படித்த செவ்வியல் இலக்கியங்களிலிருந்தும், தன்னுடைய பெருங்கனவுகளில் இருந்தும் கட்டி எழுப்பப்பட்டு, தன்னால் உண்மை என்று நம்பப்பட்டு வந்தும், மற்றவர்களை நம்ப வைத்தும் வந்த ஒரு பெரிய பொய்ச்சித்திரம் தன்னுடைய தங்கையின் கணவனால் தூளாக்கப்படுவது கண்டு, பெருந்துயர் கொண்டு, செய்வதறியாது, தன்னை பீடித்துவந்த மன உளைச்சல் நோய்க்கு தன்னை முழுவதுமாக இரையாக்கிக்கொள்ளும் பெண்ணாக Blanche Du Bois எனும் பாத்திரத்தில் Vivien Leigh பிரமிக்க வைக்கிறார்.  30 வயதைத் தாண்டிய, ஆனால் அதை எப்பாடுபட்டவாது மறைத்து, ஒரு ஆண் துணையை தேடிக் கொண்டாக வேண்டிய மனச் சிக்கல்கள் மிகுந்த பெண்ணாக அற்புதமான முகபாவங்களை வெளிப்படுத்தியிருக்கும் இந்த நடிகை ஹாலிவுட் வரலாற்றில் ஒரு மைல்கல். தன்னுடைய சொந்த ஊரான Auriol-ல் தன் குடும்ப சொத்தை முழுவதுமாக இழந்தபிறகு, நிறைய ஆடவர்களுடன் சற்றித் திரிந்ததால் பெயர் முழுவதும் கெட்டுப்போய், பணிபுரிந்த பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட Blanche Du Bois, New Orleans-ல் உள்ள தங்கை ஸ்டெல்லாவின் வீட்டிற்கு தன்னுடைய எல்லா ரகசியங்களையும் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்ட நம்பிக்கையில் வருகிறாள். தன்னுடைய ஆளுமையாக தங்கையின் மனதில் பதிக்க விரும்பும் பிம்பம் தங்கையின் கணவனால் உடைக்கப்படுகிறது. தான் படித்த இலக்கியங்களும், தான் ஆசிரியையாக பணிபுரிந்ததும், தான் பின்பற்றுவதாக மற்றவர்களை நம்ப வைக்கும் நாகரீக செயல்களையும், பேச்சுக்களையும் யாரும் உடைத்தெறிந்துவிட முடியாது என்று நம்பிக்கொண்டிருக்கும்  Blanche Du Bois, தன்னுடைய பளிங்கு நாகரீகத்தின்மீது சரேலென்று வீசப்பட்டிருக்கும் அமிலமாக தங்கையின் கணவனைக் காண்கிறாள். 

 Stanley Kowalski ஒரு அற்புதமான பாத்திரப் படைப்பு.  நவீன உலகின் மேட்டுக்குடி நாகரீகம் தன் மீது படரவில்லையே என்ற ஏக்கமோ , ஏன் பிரக்ஞையோ இல்லாதவன். ஒரு தொழிலாளி. ஒவ்வொரு இரவும் அனுபவிக்கத்தான் என்ற நம்பிக்கை கொண்டவன். விலங்கு மாதிரியான சக்தி கொண்டவன். தன் மனைவியைக் காதலிப்பதிலும், கட்டிப்பிடிப்பதிலும், எட்டி உதைப்பதிலும், மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும் உண்மையானவன். தன் மனைவிக்கும், தனக்குமான நெருக்கத்தில் தடங்கலென வந்து நிற்கும் Blanche உடனடியாக தனது வீட்டை விட்டு துரத்தப்பட வேன்டும் என்று விரும்புவன். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவன்.   Blanche அவள் காட்டிக் கொள்வது போல் நவநாகரீக பண்பாட்டிற்கு சொந்தக்காரி அல்ல என்று பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளும் Stanley எந்தவித பாசாங்கும் இல்லாமல் வாழ்பவன். மாலைப்பொழுதுகளை சீட்டாட்டமும், குடியும் இன்னபிற சூதாட்டங்களும் நிறைந்த நேரங்களாக மாற்றிக்கொண்டவன். இவனை உயிராக, உடம்பாக காதலிப்பவள் இவனது மனைவி ஸ்டெல்லா.  தனது அக்காவைப்போல் இவள் ஒரு பாசாங்குக்காரி அல்ல. தானே மறந்துபோயிருந்த  தனது இளமைக்கால விழுமியங்களை தனது அக்காவின் வருகை இவளுக்கு நினைவுபடுத்துகிறது. அக்காவின் பரிதாபமான நிலையை உணரும் ஸ்டெல்லா, அக்கா வாழவிரும்பும் வாழ்க்கைக்கும், வாழ்ந்துவருகிற வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்தவளாக இருக்கிறாள்.

தமது வீட்டில் நிகழ்ந்த தொடர் சாவுகளாலும், அதையொட்டிய பொருளாதார பின்னடைவுகளாலும் வீட்டை முற்று முழுவதுமாக கடனில் தொலைத்துவிட்டு, தன் இளமை காய்ந்து போவதுற்குள் ஒரு கணவனை அடைந்துவிட வேண்டும் என்ற தேடலில் பலருடன் சுற்றித் திரிந்து, அவர்கள் அனைவராலும் கையாளப்பட்டு, கைவிடப்பட்டு, குடிகாரியாகி, நரம்புத் தளர்வு நோய்க்கு ஆட்பட்டு, வைராக்கியமேபோல் பொய் மேல் பொய் சொல்லி ஒரு கனவுலகத்தை அவளுக்காகவும், பிறருக்காகவும் உருவாக்கி, அதை யாரும் கல்லெறிந்து உடைத்துவிடாமல் பாதுகாக்க பாடுபடும் பரிதாப அபலையாக Blanche, ஏனோ பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் நமது இன்றைய நவீன யுவதிகளை நினைவுபடுத்துகிறாள்.

இந்நாடகத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் Mitchell. ஸ்டான்லியின் சக தொழிலாளியும் நண்பனும் ஆன Mitchell நடுத்தர வயதுடையவன்.  நல்ல பயில்வான்.  குடும்பத்தில் தன் தாயைத்தவிர வேறு யாரும் இல்லாதவன். நோய்வாய்ப்பட்ட தாயைக் கவனித்துக் கொல்வதிலேயே திருமணம் செய்ய மறந்தவன்.  நண்பனின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கும் Blanche-யின் நடை, உடை, மற்றும் பாவனை அவனுக்குள் இருக்கும் ஒரு காதல் ததும்பும் ஆணை வெளிப்படுத்துகின்றன. Blanche-யின் கறைபடியாத பிம்பம் அவனைக் கவர்கிறது. திருமணம் செய்து கொள்வதாக அவளிடம் உறுதியளிக்கும் Mitchell, தன் நண்பன் கூறும் செய்திகளைக் கேட்டு உடைந்துபோகிறான்.  நீ திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கும் எனது மனைவியின் அக்கா நீ நினைப்பதுபோல எவ்வித மாசும் படராத பளிங்குச் சிலை அல்ல, பலர் பயன்படுத்திய ஆசை ஊர்தி என்று ஆதாரங்களோடு ஸ்டான்லி அவனிடம் சொல்லும்பொழுது, உடைந்து சுக்கு நூறாய்ப்போவது Mitchell-லின் காதல் மட்டுமல்ல, Blanche-யின் பலத்த பொய்க்காவலில் இருக்கும் அவளின் பிம்பமும்தான்.

தன்னுடைய கடைசி ஆசையும் நிர்மூலமாய்ப்போன அதிர்ச்சியில் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு முழுவதுமாக ஆளாகிறாள் Blanche.  மீண்டும் ஒரு கற்பனைக் காதலனை ஏற்படுத்திக் கொள்ளும் அவளை அங்கே யாரும் நம்பவில்லை. தன்னுடைய அக்காவிற்காக ஒரு கடைசி உதவியை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டெல்லா மனநோய் மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவரையும் தாதியையும் அழைக்கிறாள்.  தன்னுடைய கற்பனைக் காதலன் தன்னை தேனிலவிற்கு கூட்டிச்செல்ல வருவான் என்ற நினைப்பில் அதீத ஒப்பனைகளுடன் முன் அறைக்கு வரும் Blanche, ஒரு வயதான நபர் தன்னை அழைப்பது கண்டு குழப்பமடைகிறாள்.  ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை.  காதலனாக அந்த டாக்டரை மனதிலே வரித்துக்கொண்ட Blanche தன்னுடைய கடைசி வசனமாக சொல்லுகிறாள்: "Whoever you are, I have always depended on the kindness of strangers."

நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் நம்மை வஞ்சிப்பவர்களாகவே மாறும் உண்மை நமக்கு உரைக்கும் ஒரு பொழுதில் நம்மை Blanche Du Bois-ஆக உணர முடியும்.  இப்படத்தில், மூல நாடகத்தில் வரும் வசனங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  நாடகத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாத எளிதாக இல்லாத பல உணர்வு சூட்சுமங்கள் இயல்பாக பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.  திரைப்படங்கள் பார்ப்பதை ஒரு முக்கியமான வாழ்வு கடமையாக கொண்ட அனைவரும் பார்த்து உய்க்க வேண்டிய நல்ல படம் இது.  ஈவு இரக்கமின்றி வணிகமயமாகி வரும் நமது இன்றைய சமூகச் சூழலில் நம்மில் பலர் Blanche Du Bois-களாக மாறி வருகிறோம் என்று உணருகிறபொழுது, மற்றவர்கள் நம்புவதற்காக நாம் கட்டி வரும் பொய் மாளிகை என்று வேரறுந்து விழுமோ என்ற பயம் மெல்ல உள்ளே பரவுகிறது.