பழிக்குப் பழி

| Saturday, April 28, 2018

நேற்றைய (27-4-2018) டைம்ஸ் ஆப் இண்டியாவில் வெளிவந்திருக்கிற இரண்டு தலையங்கங்களில் முதலாவதான Nurture Institutions இந்திய நீதித் துறையில் தற்போது பரபரப்பாகியிருக்கும் இரண்டு விடயங்களைப் பற்றி பேசுகிறது. உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கும் பொருட்டு ராஜ்ய சபையில் காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் செயல் சரியானதுதான் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தீர்மானமானது நீதித் துறையின் சுயசார்பை குலைப்பதாக உள்ளது என்றும், நீதித்துறையின் சுதந்திரத்தைக் குலைக்க முயற்சிப்பது வேறு ஆபத்துகளில் முடியும் என்றும் அபிப்பிராயப்பட்டு, வெங்கைய நாயுடு தீர்மானத்தை ஏற்க மறுத்தது சரிதான் என்று வாதிடும் இந்தத் தலையங்கம், 26-4-2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் கொலிஜியம் பரிந்துரைத்த இரண்டு நீதிபதிகளில் - இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம்.ஜோசப் - இந்து மல்ஹோத்ராவின் நியமனத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பின்னவரின் நியமனத்தை ஏற்க மறுத்தது மத்திய அரசின் பாரபட்சமான, கண்டிக்கத் தக்க செயல் என்று கூறுகிறது.

கே.எம்.ஜோசப் தற்போது உத்தரகண்ட் மாநில உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர்.  உச்ச நீதி மன்றத்திற்குய் இவரைப் பரிந்துரைத்த கொலீஜியத்தின் தீர்மானம் "எல்லா வகையிலும் மற்றவர்களை விட தகுதியும் பொருத்தமும் மிக்கவர்" (more deserving and suitable in all respects) எனச் சொல்லியிருப்பதை நடுவண் அரசு ஏன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை? இதற்கான காரணங்களாக, அதாவது ஜோசப் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான, நடுவண் அரசு சொல்லியிருப்பாது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.  நீதித்துறையின் உயர்நிலைகளில் கேரளாவின் பிரதிநிதித்துவம் ஏற்கனவே அதிகம் இருப்பதாலும் (நீதிபதி ஜோசப் கேரளாவைச் சேர்ந்தவர்), நாட்டின் உயர்நீதி மன்றங்களில் நீதிபதி ஜோசப்பை விட பதினோரு மூத்த நீதிபதிகள் இருப்பதாலும், இந்தியாவின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறப்பானது என்பதாலும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முறையான பிரதிநிதித்துவம் கொடுத்தாக வேண்டும் என்பதாலும், நீதிபதி ஜோசப் அவர்களின் பெயர் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் கூட நடுவண் அரசால் ஏற்றுக்கொள்ளப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.  ஆனால் இவைதானா உண்மைக் காரணங்கள்?

உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளின் நியமனத்திலும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் நியமனத்திலும் பணி மூப்பு என்பது ஒரு அளவுகோலாக கருதப்படுவதில்லை.  பணிமூப்பை விட தகுதி என்பது முக்கியம்.  இதுநாள் வரை இப்படித்தான் இருந்தும் வந்திருக்கிறது.  பிரதேச பங்களிப்புகளைப் பொறுத்தவரை, ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள், மிக அதிக எண்ணிக்கையிலானோர், மும்பை அல்லது தில்லி உயர்நீதி மன்றங்களில் தங்களது வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தவர்கள்.  அப்போதெல்லாம், இந்தப் பிரதேச விகிதாச்சாரக் கோட்பாடு நடுவண் அரசின் ஆட்சேபத்திற்கு ஏன் உள்ளாகவில்லை?

ஆனால், இவைகளில் எதுவும் நடப்பு சர்ச்சைக்கு காரணமாக இருக்கவில்லை. ஊடகங்களில் பரவலாக என்ன கதைக்கப்படுகிறதென்றால், 2016ம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது நீதிபதி கே.எம்.ஜோசப்.  அதற்காக இப்போது அவர் பழி தீர்க்கப்பட்டுள்ளார் என்பதாக எழுந்துள்ள சர்ச்சைகள் எளிதில் அடங்காதவை என்பது அனைவருக்கும் தெரியும்.

நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டாலும் உச்ச நீதி மன்றத்தில் இன்னும் ஐந்து காலியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இன்னும் ஆறு நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.  ஆயிரக்கணக்கில் வழக்குகள் முடிக்கப்படாமல் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதிகள் நியமன விடயத்தில் சுணக்கம் காட்டப்படுவது வேதனையானது.  நீதிபதிகள் நியமனத்தில் காங்கிரசும் பாஜக-வும் நீதித்துறையின் தன்னாட்சியையும், சுயசார்பையும் முறிக்க முயற்சிக்காமல் இருப்பது நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கே உகந்தது என்றும் இந்தத் தலையங்கம் பேசுகிறது.

தேசிய நீதித்துறை பணிநியமனக் குழு (National Judicial Appointments Commission) நீக்கறவு செய்யப்பட்டு விட்டதால், அரசுக்கு ஏற்பட்டிருக்கும் ஆற்றாமையின், சினத்தின் விளைவுதான் இத்தகைய நியமனத் தடங்கல்கள் என்று சந்தேகிக்க இடமுள்ளது என்று தொடரும் இந்தத் தலையங்கம், கொலீஜிய நியமன முறையில் உள்ள சீரழிவுகளை சரி செய்ய வேறு முறைகளைப் பின்பற்றுமாறு, கொலீஜிய அமைப்புக்குள்ளேயே, நடுவண் அரசு பரிந்துரைக்கலாம் என்றும், தேசிய நீதித்துறை பணிநியமனக் குழுவிற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டாலும் குழுவில் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதையும், பாரபட்சமின்றி செயல்படுவதையும், வெளிப்படைத் தன்மை அதிகரிப்பதையும் உறுதி செய்து கொண்டால் தற்போது ஏற்பட்டிருக்கும் "இயங்கா நிலையை" போக்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கிறது.

நீதித்துறையின் சுதந்திரம் எதற்காகவும் சமரசம் செய்யப்படக் கூடாதது. நீதித்துறையின் நியமன விவகாரங்களில் அரசு தலையிடுவது அப்படியான சுதந்திரத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியாகவே கருதப்படும்.