ராதிகாவின் காதலர்கள்

| Sunday, January 21, 2018
நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கையை பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர் வேலுசாமி அவர்கள் எழுதி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாஹித்ய அகாடெமி பதிப்பித்துள்ளது. வாசிக்கத் துவங்கியுள்ளேன்.
மற்றபடிக்கு, கடந்த ஆறு மாதமாக சேதன் பகத்-தின், இதுவரை வெளிவந்துள்ளவைகளில், கடைசி நாவலான One Indian Girl எனது அறையில் சீந்துவாரன்றி கிடந்தது. அப்பா இருந்திருந்தால் எத்தனை நாட்கள் படிக்காமல் ஒரு புத்தகம், அவருக்கு முன்னூறு உரூபாக்கள், வீணாகக் கிடந்தது என்று அம்மாவிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்திருப்பார்.
இந்த எண்ணம்தான் அதை தொடத் தோன்றியது. ஆங்கிலத்தில் சொல்வார்களே un-put-down-able என்று, அப்படியெல்லாம் இல்லை. அப்பாவிற்குப் பயந்துதான் தொட்டேன். சேதன் பகத் எந்த இடத்தில் என்ன சொல்வார் எந்த வார்த்தைகளை என்ன மாதிரியான expressions உபயோகப்படுத்துவார் என்பதைக் கூட சரியாக அனுமானிக்க முடிவது எனது தோல்வியா அவரது தோல்வியா தெரியவில்லை.
ஒன்று மட்டும் தெரிகிறது. பகத் நாவல்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார். ஹிந்தி சினிமாக்களாக தனது கதைகள் எடுக்கப்பட வேண்டும், அதற்காக தமக்கு பெரும் பணம் கொடுக்கப்பட வேண்டும், அப்படி ஒன்று நிகழ வேண்டுமானால் எழுதப்படும் கதை சின்னஞ்சிறுசுகள் மத்தியில் பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்ற clear plan பின்னணியில் செயல்படுகிறார். தவறில்லை. என்னென்னவோ செய்து பிழைக்கிறோம். சேத்தனுக்கு இது. அதை வெற்றிகரமாக இந்தக் கதையில் செய்துள்ளார் என்றே நினைக்கிறேன். ரொம்பவுமே சினிமாட்டிக்காக இருக்கிறது. கிட்டத்தட்ட screenplay செய்துவிட்டார். Screenplay writing அனுபவமுள்ள கில்லாடிகள் இதை இந்திமொழியில் பெரிய வெற்றிப்படமாக எளிதில் செய்துவிட முடியும். சின்னப்பையன்கள் இந்தி சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். கதையின் நாயகி ராதிகா நிறைய முறை இரண்டு பேர்களுடன் adults only செய்கிறாள். குற்ற உணர்வு எதுவும் அவளுக்கு தேவையில்லை. ஆனால், இந்திய அறம் அப்படியான மனநிலைக்கு எதிரானது என்பதால், ராதிகா தனக்குப் பிடித்த இரண்டு காதலர்களையும் கழற்றிவிட்டு விட்டு, அம்மாவின் சம்மதத்தோடு தன்னுடைய ஜாதியிலேயே ஒரு பையனைப் பார்த்துக் கல்யாணம் வரை வந்து, முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, கல்யாணத்தைக் கேன்சல் செய்துவிட்டு, ஒரு மூன்று மாதங்கள் கழித்து அதே தனது மணவாளனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். சினிமாடிக்காகவும் அதே சமயம் அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா வகையறாக்கள் தவறு ஏதும் கண்டு பிடிக்கா வண்ணமும், IIT மற்றும் IIM-ல் படித்த சேதன் பகத் கதையை கலர் கலராக எழுதியுள்ளார். அமெரிக்கா, ஹாங்காங், தெற்காசியத் தீவுக் கூட்டங்கள், லண்டன், மற்றும் கோவா போன்ற ஊர்களில் கதை நடப்பது காமிராக்காரருக்கு உதவும். காமிராவிற்கு உகந்த island resort பின்னணியில் காதல் பாட்டு இன்னும் இந்திய சினிமாவிற்கானதே.
மற்றபடி, இந்தப் புத்தகத்தை யாருக்கேனும் பரிந்துரை செய்ய முடியுமா? சங்ககிரி, சேலம், ஓமலூர், கொமரபாளையம் போன்ற சிற்றூர்களில் ஓங்கி வளர்ந்திருக்கும் பொறியியல் கல்லூரி ஏதேனும் ஒன்றில் படித்துக் கொண்டு, பெங்களூரு -ஹைதராபாத் - சென்னை போன்ற நகரங்களில் உள்ள கணினிக் கம்பெனிகளில் தேசக்கடமை ஆற்ற செல்லவிருக்கும் பெண்டு பிள்ளைகள் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது அவசியம். அதற்கு எதையாவது அந்த பாஷையில் படித்துத் தொலைத்திருக்க வேண்டும்.
அப்படியொன்றைத் தொலைக்க, அவர்களுக்கு சேதன் பகத்தின் One Indian Girl பயன்படக்கூடும்.

முகேஷ் அம்பானியும் மல்லாங்கிணறு ராமகிருஷ்ணனும்

|
ரிலையன்ஸ் ஜியோ நிறைய பேர்களை நிறைய விதங்களில் பாதித்திருக்கிறது. நல்லதும் கெட்டதும் உண்டு. ஒரே மனிதனைக் கூட இரண்டு விதமாகவும் பாதித்திருக்கும்.
ராத்திரி நேரங்களை ரொம்பவும் ரசிக்கும் நேரங்களாக ஜியோ மாற்றியிருக்கிறது. இரவு பத்து மணி அளவில் ஆரம்பித்து YouTube-ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பொழிவுகளை தூக்கம் வரும் வரை கேட்டுக்கொண்டிருப்பது என்பதை முகேஷ் அம்பானி அன்பளித்திருக்கிறார். பெருந்தகை இந்த வசதியைத் தொடர்ந்து எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை இதன் வழியாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
Series of Lectures on World Literature என்ற பெயரில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பொழிவுகள் இங்கு காணக் கிடைக்கின்றன. நேற்று இரவு ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியரின் Macbeth நாடகத்தைப் பற்றி ஏறக்குறைய தொண்ணூறு நிமிடங்கள் பேசுகிறார். எஸ்ரா பல்வேறு பார்வைகளின் வழியாக இந்த நாடகத்தை அணுகுகிறார். முதலில், எஸ்ராவின் குரலையும் அதன் தொனியையும் பற்றி சொல்ல வேண்டும். அமைதியான பேச்சு. எந்த இடத்திலும் நாடகப் பாங்கான தொனியை கேட்கவே முடியவில்லை. பொழிவு முழுவதும் மக்களின் மொழியில்தான் பேசுகிறார். ஒரு செவ்வியல் பிரதியைப் பற்றி மக்களின் மொழியில், ஆனாலும் கொஞ்சமும் ஆய்வின் தன்மையை மலினப்படுத்திவிடாமல், மலையிலிருந்து இறங்கி வந்த நதியின் அமைதியோடு பேசுகிறார்.
நாடகத்தின் ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும் அதை எழுதப்பட்டவாறே சொல்லிவிட்டு, அதன் பின்புலம் - அதை ஆய்வாளர்கள் அணுகிய விதம் என்பதை ஒரு யோகியின் குரலோடு எஸ்ரா சொல்ல முடிவது நமது பாக்கியம். இவரது குரலின் தொனி ஏனோ அசோகமித்திரனின் எழுத்தை நினைவுபடுத்துகிறது. எனது இந்த analogy சரியா என்பதை நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த நாடகத்தைப் பற்றி நான் இதுவரை படித்திராத தகவல்களை நிறைய சொல்கிறார். ஷேக்ஸ்பியரின் காலம் இரண்டு அரசுத் தலைமைகளை சந்தித்தது. அரசி எலிசபெத் மற்றும் அரசர் ஜேம்ஸ். இந்த ஜேம்ஸ் அரசர்தான் முதன்முதலாக பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். King James Version (KJV) என்ற பதிப்பு இந்த ஜேம்ஸ் அரசரைத்தான் சுட்டுகிறது. இதன் மொழிபெயர்ப்புக் குழுவில் ஷேக்ஸ்பியரும் இருந்திருக்கலாம் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப்படுகின்றனர் என்பதை எஸ்ரா வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் பொழிவிற்காக எஸ்ரா கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நாடகம் உலகின் வெவ்வேறு இடங்களில் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது என்பதையும் அவைகளில் நான்கு திரைப்படங்கள் முக்கியமானவை என்பதையும் எஸ்ரா சொல்கிறார். ஜப்பானிய மொழியில் அகிரா குருசேவா இந்த நாடகத்தைத் திரைப்படமாக்கியிருக்கிறார் - அவருக்கே உரிய பாங்கில். போரில் வென்று ஊருக்கு திரும்பும் மாக்பெத், அவனது நண்பன் பாங்கோ இருவரும் மூன்று சூன்யக் கிழவிகளை சந்திக்கின்றனர். ஷேக்ஸ்பியரின் கிழவிகளும் குருசோவாவின் கிழவிகளும் வேறு வேறானவர்கள். ஜப்பானியக் கிழவிகள் அழகானவர்கள்; மாக்பெத் சந்திக்கும்பொழுது சிலைகளை போலவே, அவர்கள் ராட்டை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில், இந்த சூன்யக்காரக் கிழவிகள் ஏதோ மாயமந்திரம் செய்பவர்கள் அல்லர் என்றும், இவர்கள் அந்தக்கால மருத்துவச்சிகள் என்றும், இவர்களைத் தவறாகப் புரிந்து கொண்ட அந்த சமூகம், சூன்யக்காரிகள் என்று பெயரிட்டு, ஆயிரக்கணக்கானோரை கொளுத்திப்போட்டது. இந்தக் கைங்கர்யத்திற்கு ஜேம்ஸ் அரசரின் ஆதரவும், ஏன் உத்தரவுமே இருந்தது. பின்னாட்களில், இந்தப் பாவகரமான செயலின் பின்னூட்டமாக பெரும் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் அரசர், கடவுளிடம் பாவமன்னிப்பு இறைஞ்சும் விதமாகத்தான் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்றும் சொல்கிறார் எஸ்ரா.
தமிழ் மேடைகளில் ஒருவர் கேட்கும் இரைச்சலைப் போன்றதல்ல இந்தப் பொழிவு. ஒரு சிறந்த சர்வகலா சாலையில் முதலாண்டு பட்ட மாணவர்களுக்காக பேரறிஞர் ஒருவர் முக்கியமான பிரதி ஒன்றைப் பற்றி எளிமையாகக் கொண்டு சேர்க்கிற பாங்கில் இந்தப் பொழிவு அமைந்தது அருமையான செவிநுகர் கனியாக உருக்கொண்டிருக்கிறது.

இதுவல்ல பாலா

|
சாகித்ய அகாடெமி "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் வெளியிட்டிருக்கும் "கவிஞர் பாலா" என்ற நூலை அவரின் நண்பரும் பேராசிரியருமான சேதுபதி எழுதி அளித்துள்ளார். சற்றே ஏமாற்றமாக இருக்கிறது. கவிஞர் பாலா-வைப் பற்றி நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன். மிகவும் குறைவான தகவல்கள் என்பது மட்டுமன்றி, இரைச்சலான வார்த்தைகளுடன், எந்த விதமான கருத்துக் கட்டுமானமும் இன்றி ஏனோதானோ என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
பாலாவின் புத்தகங்கள், அவற்றில் அவர் எழுதியுள்ளவை அனைத்தும் அவருடைய புத்தகங்களிலேயே உள்ளன. பாலா யார்? என்பதற்கு ஒரு வாசகனாக நான் இந்தப் புத்தகத்தில் நிறைய எதிர்பார்த்தேன். அவரது சர்ரியலிசம், புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாரதியும் கீட்சும் போன்ற சில நூல்களிலிருந்தும், பாலாவைப் பற்றி அவரது நண்பர்களும், சக கவிஞர்களும் சொல்லியிருப்பதைக் கூட முழுமையாகத் தராமல், அந்த பெரிய ஆளுமையின் வீரியத்தை வாசகன் அறிய முடியாத வண்ணம் "கடமைக்குச் செய்தல்" என்பதாக எழுதப்பட்டிருப்பதை ஏன் சாஹித்ய அகாடமி கண்டுகொள்ளவில்லை? கைப்பிரதி அல்லது தட்டச்சு பிரதி வந்து சேர்ந்ததும் அதை ஒரு வல்லுநர் குழுவிடம் கொடுத்து கருத்து கேட்பது மாதிரியான செயல் வடிவம் எதுவும் அகாடமியிடம் இல்லையா என்ன?
பாலா என்ற பேராசியரை, மொழியியல் அறிஞனை, இலக்கிய விமர்சகனை, கவிஞனை, மொழிபெயர்ப்பாளனை, தேர்ந்த சொற்பொழிவாளனை, பதிப்பாளனை சரியாக வரலாற்றில் சரியான விதத்தில் நட்டு வைக்க வேண்டாமா? இந்த இடத்தில் நான் இன்னொரு biography-யை நினைத்துப் பார்க்கிறேன். முப்பதே நாட்களில் அவசரமாக எழுதப்பட்டது. இன்று அது ஒரு செவ்வியல் பிரதி ஒன்றுக்கு இணையாக மதிக்கப் பெறுகிறது. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை அவரது நண்பனும் எழுத்தாளருமான தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் "புதுமைப்பித்தன் வரலாறு" என்ற பெயரில் எழுதியது இன்றளவும் இலக்கிய ஆர்வலர் பலராலும் பிரமிக்கப் படுகிறது. புதுமைப்பித்தனின் ஆளுமையை வாசகன் நேரிலே காண்கிற மாதிரியான எழுத்து. ரகுநாதனும் ஒரு சிறந்த எழுத்துக்காரர் என்பதாலோ, அல்லது பித்தனின் நெருங்கிய நண்பர் என்பதாலோ, அந்த ஆளுமையின் சிறந்த குணங்களை வியந்து, சிற்சில குணக்கேடுகளையும் படிப்போர் கவனத்திற்கு கொண்டு வந்து, எப்படி அந்தக் கெடுக்கலாம் மாபெரும் கலைஞன் ஒருவன் வீழ்ந்து மடிந்தான் என்பதை ஒரு காவியம் போல ஆக்கிக்காட்டியிருப்பார். நான் எப்பொழுதுமே சொல்வதுண்டு. தமிழ் சுயசரிதம் என்பதில் நாமக்கல் கவிஞரின் "என் கதை" நூலுக்கு தன்னிகரற்ற இடம் உண்டு. அதே போல, biography என்று பார்த்தோமானால், ரகுநாதனின் "புதுமைப்பித்தன் வரலாறு" இன்னும் சில நூறு ஆண்டுகள் இந்த இலக்கிய வகைமைக்கு உதாரணமாக விளங்க வல்லது.
ரகுநாதன் புதுமைப்பித்தனின் வரலாற்றை bildungsroman என்ற வகைமைப்படி எழுதியிருக்கவில்லை. பெரிய ஆளுமை ஒன்றின் வரலாற்றை பிறப்பு முதல் இறப்பு ஈறான படிக்கு எழுதுவது, வாசகன் அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்ந்த காலத்தின் தன்மையை குழப்பம் ஏதும் இல்லாதபடிக்கு புரிந்து கொள்வது மட்டுமன்றி, அவரைப் பற்றி தான் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் தகவல்களை சரியான இடத்தில் பொருத்திப் பார்க்கவும் உதவும். கணித அறிஞர் ராமானுஜத்தின் வாழ்க்கையை The Man Who Knew Infinity என்ற அற்புதமான சிறு புத்தகத்தில் Robert Kanigel இப்படியான உத்தியில்தான் எழுதியிருக்கிறார். படிக்க எடுத்தவர் கீழே வைக்க முடியாதபடிக்கு எழுதப்பட்ட புத்தகம் அது. ரகுநாதனின் புத்தகத்தைப் போல. ஒன்றின் மீது இரண்டு, இரண்டின் மீது மூன்று என்று ஆண்டு வாரியாக நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டு போவது மாதிரியான எழுத்துக் குறிப்பொன்றில், சரிதத்தை எழுதுபவர் எழுதப்படும் ஆளுமையைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற கேள்விக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களுமே தக்க பதில்கள்.
மீண்டும் சேதுபதியின் புத்தகத்திற்கு வருவோம். காலக்கிரயம் இல்லை. பாலாவின் கருத்து விழுந்து, முளைத்து, விருட்சமான கதை இல்லை. பாலாவின் நட்புகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் விவரமாக இல்லை. அவரின் குடும்பம், பிறப்பு, ஆரம்ப வருடங்களின் போராட்டங்கள், தாயாரின் அசம்பாவிதமான முடிவு, தொடர்ந்த இடப்பெயர்வுகள், உயிரான உறவுகள் என்ற விவரங்கள் இதைப்போன்ற ஆளுமை வரலாறுக்கு அதிமுக்கியமானவை. இதில் எதுவும் சேதுபதியால் சிறப்பாக சொல்லப்படவில்லை.
பாலாவின் வரலாற்றை சேலம் தமிழ்நாடன் அல்லது அகரம் மீ.ராஜேந்திரன் ஆகியோர் இன்னும் பலபடிகள் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். யார் முன்னே, யார் பின்னே என்ற விவரம் தெரியாமல்தான் இந்த வரியை எழுதுகிறேன். சொல்ல வருவது என்னவென்றால், தமிழ்நாடன், ராஜேந்திரன் மாதிரியான எழுத்து வன்மை கொண்ட, பாலாவிடம் நெருங்கிப் பழகி அந்த ஆளுமையின் சிறப்பை சில தசாப்தங்கள் விரும்பிப் பருகியவர் யாரேனும் இந்த கைங்கர்யத்தை செய்திருக்கலாம். அல்லது, சேதுபதியே கூட, நேரம் எடுத்து இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
புதுக்கவிதையின் வரலாறை நுணுகி நுணுகி எழுதியவரின் வாழ்வை இப்படி சிரத்தையின்றி அணுகியிருக்க வேண்டாம் என்றுதான் இந்தப் புத்தகத்தை படித்து முடித்த நிலையில் தோன்றுகிறது.
சேதுபதியும் இதை உணர்ந்திருப்பார் என்றுதான் உள்மனம் சொல்கிறது.