நம் கதை

| Sunday, November 19, 2017
ஜூனியர் விகடன் போன்ற சஞ்சிகைகளை எப்பொழுதுமே நான் படித்ததில்லை. தராசு என்றொரு பத்திரிக்கை மிகவும் பிரபலமாக எனது கல்லூரிக் காலத்தில் இருந்ததுண்டு. பிறகு, கோபால் நக்கீரன் துவக்கினார். சலூன் போனால் கூட, காத்திருக்கும் சமயங்களிலும் நக்கீரனோ, ஜூனியர் விகடனோ படிக்கவோ பார்க்கவோ கவர்ந்ததில்லை. ஆனால், வண்ணத்திரை பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. நடுப்பக்க அரை நிர்வாண நடிகைகள் அன்றிரவு கனவில் வருவார்கள். வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டே தூங்கிப் போவேன். ரசக் குறைவான சினிமாப் பத்திரிகைகளுக்கு இருக்கும் அந்தஸ்து கூட இந்த அரசியல் வாராந்தரிகளுக்கு இல்லை என்று தோன்றும்.
இவைகளில் வரும் தனிநபர் துவேஷங்கள் பயமுறுத்துவை. பல சமயங்களில், sponsored / triggered எழுத்துக்கள். கல்லூரி / சர்வகலா சாலை காலங்கள் முழுவதும் இந்தப் பத்திரிகைகளுக்கு எதிராகவே இவைகளின் வாசக நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, இவைகளைப் பற்றிய அக்கறை சிறிதும் என்னிடம் இருக்க எந்த காரணத்தையும் இந்த சஞ்சிகைகள் எனக்கு தந்து விடவில்லை.
ஆனால், விதி ஒன்றுக்கு விலக்கு இருப்பதைப் போலவே இதிலும் உண்டு. "திராவிட(ர்) இயக்கம் நோக்கம் - தாக்கம் - தேக்கம்" நக்கீரனில் பல வாரங்கள் வந்திருந்து அது பின்னர் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பின்னர் வந்த கழகங்கள் ஆகியன பற்றி தொடர்ந்து வாசித்தும் யோசித்தும் வருபவன் என்ற முறையில், மேற்சொன்ன புத்தகம் நண்பன் ஒருவன் வழி எனது கைகளுக்கு வந்த பொழுது, சில நாட்கள் அதைத் தொடவே மனமில்லாமல் இருந்தேன். புரட்டிய பொழுது கண்ணில் பட்ட பக்கங்களில், பேரன் - தாத்தா என்ற பாவனையில் எழுதப் பட்ட புத்தகம் என்பது வேறு எனது அசட்டையை அதிகப்படுத்தியது. பேரன் நிறைய கேள்விகள் கேட்கிறான். தாத்தா பதில் சொல்கிறார். இப்படியான கதையாடலில் என்ன அதிகம் ஆழமாக சொல்லிவிடப் போகிறார் நூலாசிரியர் என்ற நினைப்பு வேறு.
கோவி.லெனின் என்ற சஞ்சிகையாளர் இதன் ஆசிரியர். இருநூறு உரூபா விலை கொண்டது. முன்னூற்று இருபத்தேழு பக்கங்களில் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் பின்னணிக் காலங்களில் தொடங்கி அதன் இன்றைய தேக்க நிலை மற்றும் எதிர்காலம் வரை மிகவும் தெளிவாக ஆவண ஆதாரங்களுடன் நம்பவே முடியாத எளிமையுடன் உரைநடைப் பாங்கில் வடித்துள்ளார். இவ்வளவு விரைவாகப் படிக்கும் வண்ணம் ஒரு கடினமான வரலாற்றுப் பயணத்தை ஒருவர் சொல்ல முடியுமானால், எடுத்துக்கொண்ட விடயத்தில் அவருக்கு இருக்கும் தேர்ச்சியும் பயிற்சியும் விளங்குகிறது.
திராவிட அரசியலால் விளைந்த கேடுகள் என்று பலவற்றை ஒருவர் பட்டியிலிட முடியும். சர்க்காரியா கமிஷன், சொத்துக் குவிப்பு வழக்குகள், டு ஜி, காரில் வலம் வரும் சட்டமன்றங்கள், வார்டுகள், ஒன்றியங்கள், வளர்ப்பு மகன் கல்யாணம், குடும்ப அரசியல், காலில் விழும் கர்மங்கள் என்று எவ்வளவோ நினைவுக்கு வர நியாயம் உண்டு. இவைகள் எல்லாமுமே திராவிட அரசியலால் வந்தவை. சந்தேகமேயில்லை.
ஆனால், திராவிட அரசியலுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பெண்களுக்கு சொத்துரிமை, 69% சதவிகித இட ஒதுக்கீடு, தமிழர் மொழி இன உரிமை மற்றும் உணர்வு, மொழிச் சீர்திருத்தம், சமச்சீர் கல்வி, கடவுளர் எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம், நில உச்ச வரம்புச் சட்டம், பார்ப்பனரிடமிருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களைக் கைப்பற்றி பிற்படுத்தப் பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் வசம் அளித்தல், பார்ப்பனீய எதிர்ப்பு, சுய மரியாதை, அனைவரும் ஆலயப் பிரவேசம், ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், இந்து அறநிலையத் துறை, வகுப்பு வாரி உரிமை, தேவதாசி ஒழிப்பு, சட்ட எரிப்புப் போர், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பெண் கல்வி, விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம், விதவைகள் மறுமண நிதியுதவி, கலப்புத் திருமண தம்பதிகளுக்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள், குதிரைப் பந்தயம் ஒழிப்பு, சத்துணவு, சமத்துவபுரங்கள் ஆகியனவும் நினைவுக்கு வர நியாயம் உண்டு. நினைவுக்கு வர வேண்டும். காமாலை மனது இல்லாமலிருந்தால் இரண்டுமே நினைவுக்கு வரும்.
1920 முதல் 1937 வரை பதினெட்டு ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆகப் பெரிய சமுதாய மாற்றங்கள் இந்த மண்ணில் துவங்கியது இந்தப் பதினெட்டு ஆண்டுகளில்தான். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்கும் மசோதாவை முதல் அமைச்சர் பனகல் அரசர் 16-8-1921ம் நாள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த வரலாறு தெரியாத TRB நடத்திய பரீட்சைகளில் பொட்டுவைத்து வாத்திகள் ஆன விசிலடிச்சான் குஞ்சுகள் திராவிட இயக்கங்களை விமரிசித்து மீம்ஸ் பகடி சமூக வலைத்தளங்களில் செய்வதைப் பார்க்கும் போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் சகிப்புத் தன்மையின் மீதும் மரியாதை மேலெழுகிறது. அன்றைய நிலையில் கல்லூரிகளின் விடுதிகளில் பிராமணர் அல்லாதோர் பிள்ளைகள் சேர முடியாது. அனைவரையும் விடுதிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாணையை இதே ஆண்டில்தான் பனகல் அரசர் பிறப்பித்தார். பஞ்சமர் - பள்ளர் - பறையர் போன்ற வார்த்தைகளை அரசுப் பதிவேடுகள் எதுலும் பயன்படுத்துதல் ஆகாது; ஆதி திராவிடர் என்ற பதத்தையே பயன்படுத்துதல் வேண்டும் என்ற தீர்மானம் நீதிக் கட்சி ஆட்சியில் 25-3-1922 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இதே கால கட்டத்தில் நாட்டிலேயே முதன்முறையாக தாழ்த்தப் பட்டோருக்கென்று தனியாக அமைச்சகத்தை தோற்றுவித்தது நீதிக்கட்சி அரசு. இதே ஆண்டில், தாழ்த்தப் பட்ட மாணவருக்கான எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக் கட்டணத்தை ரத்து செய்தது அரசு. பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் என்று அறிவித்ததும் இந்த அரசுதான். தனது முதலாவது அமைச்சரவையில், இவை தவிர, தொழிலாளர் நலனுக்கான ஆணையங்கள், தாழ்த்தப் பட்ட மக்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் போன்றவையை 1920-1923 இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றியது நீதிக் கட்சி அரசு.
சென்னை மாகாண அரசால் வெளியிடப்படும் அரசாணைகள் ஒவ்வொன்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில், எம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கப் பட்டது. ஆந்திரப் பல்கலைக் கழகம் இப்போதுதான் தோற்றுவிக்கப் பட்டது. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோன்ற இந்தக் காலகட்டத்தில்தான் வழிவகுக்கப் பட்டது. அற நிலையைப் பாதுகாப்பு மசோதா 1925ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. இதன் மூலம் தனியார் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தது தடுக்கப் பட்டது.
மேலே சொன்னவையை மறந்து விட்டுத்தான் திராவிட இயக்கங்களையும் தலைவர்களையும் தூற்ற வாயெடுக்க முடியும். ஊழல் இல்லையா என்று கேட்பவர்களிடம் ஊழல் இருந்தது என்று சொல்வேன். தயக்கமே இல்லை. ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் மூவாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டது போல இங்கு எதுவும் நடந்து விடவில்லை என்றும் சொல்வேன். குஜராத் சம்பவங்கள் போல எதுவும் இங்கு நடக்கவில்லை என்றும் சொல்வேன். இங்கு நடந்திருக்கும் ஊழல் இந்தியாவில் வேறெங்கும் நடந்திருப்பவையை விட ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றும் சொல்வேன்.
இந்தச் சிறு கட்டுரையைப் படிக்கும் நண்பர்களிடம் ஒன்று சொல்லிக் கொள்வேன். நாம் இந்த இயக்கத்தின் கனிகள். விதைகள் நம் பாட்டன்கள். மரத்தை வெட்ட முனைவோருக்கு வரலாறு தெரியாமல் வக்காலத்து வாங்க வேண்டாம். வானத்தைப் பார்த்துப் படுத்து மேலே எச்சில் துப்பும் கதையாகி விடும். வரலாறு முக்கியம். நமக்கெல்லாம், திராவிடர் இயக்க வரலாறு முக்கியம். எங்கிருந்து துவங்குவது என்றா கேட்கிறீர்கள்? "திராவிட(ர்) இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்" - கோவி.லெனின், நக்கீரன் வெளியீடு, விலை இருநூறு உரூபாக்கள்.