NEET படுத்தும் பாடு: சில கோணங்களும் பார்வைகளும்

| Thursday, May 25, 2017

·          கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் மத்தியில் ஆகப் பெரிய பிரச்சினையாக NEET உருவெடுத்துள்ளது.  இரண்டாயிரங்களின் நடுவில் துவங்கி இன்று வரை நீடித்து வந்த நிலை, இன்று மாறிவிடுமோ என்ற கவலை பலரையும் தமிழ்நாட்டில் பிடித்து ஆட்டுகிறது.

·   இதுவரை நீடித்து வந்த நிலை, தமிழ்நாட்டைப் பற்றி மற்றும் சொல்கிறேன், இந்த மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் / உதவி பெறும் பள்ளிகளில் படித்து வந்த ஏழை எளிய கிராமப்புற குழந்தைகளுக்கு உதவியிருக்கிறதா என்றால், கொஞ்சமும் இல்லை.  கடந்த இருபது ஆண்டுகளாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS பட்டப் படிப்பிற்குச் சேர்ந்திருக்கும் அரசு / உதவி பெறும் பள்ளி மாணவர் எத்தனை பேர் என்று எண்ணினால், ஒருவரின் கைகளில் இருக்கும் விரல்களே அதிகம்.  ஏற்கனவே இருந்து வந்த சூழலிலும், மருத்துவப் படிப்பப் பொறுத்த வரை, சமூக நீதி நிலைநாட்டப் படவில்லை என்பது வெட்கக்கேடான  விஷயம்.

·      மாநிலம் முழுக்க தனியார் பள்ளிகளைத் துவக்க அனுமதி தந்த அரசுகள் சமூக நீதியைப் பற்றி எதுவும் வாய் திறக்க முடியாது.  இன்றைய தேதியில், மேல்நிலைப் பள்ளிப் படிப்பிற்காக தன் குழந்தைக்கு ரூபாய் நான்கு லட்சம் செலவு செய்ய ஆயத்தமாக இருக்கும் பெற்றோரே தனது குழந்தையை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சீட்டின் விலை ஒரு கோடி ரூபாய்கள்.  ஒப்பீட்டளவில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நான்கு லட்சத்தை அழுவது விவேகி ஒருவன் செய்யக்கூடிய காரியம்தான்.

·          எந்த அரசு அதிகாரியும், முக்கியமாக பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை.  கவிஞர் அ.வெண்ணிலாவின் குழந்தைகள் இருவர் அரசுப் பள்ளியில் படித்து 1160 மதிப்பெண்கள் பெற்றிருப்பது விலக்கான விடயம்.  தவிரவும், திருமதி வெண்ணிலாவும் அவரது கணவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். குழந்தைகள் மீது தனிக் கவனம் செலுத்தியிருப்பார்கள்.

·          1985-க்குப் பிறகு அரசுப் பள்ளிகள் தலித் மானவர்களுக்கானதாகவும், மற்ற சாதிகளில் பொருளாதாரத்தில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களின் குழந்தைகளுக்கானதாகவும் மாறிவிட்டன.  உதவி பெறும் பள்ளிகளின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.  தனியார் பள்ளிகள் கொழுத்து வளர்க்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியர் முதல் அனைவருக்குமே ஒன்று தெரியும்: இந்தத் துறையைச் சேர்ந்த யாருமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.  சென்னையில் பணிபுரியும் துறை உயர் அலுவலர் குடும்பக் குழந்தைகள் ராசிபுரத்திலோ அல்லது நாமக்கல் நகரிலோதான் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  சில அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் திறன் பெற்றவர்கள்.  அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆந்திராவிற்கும் ராஜஸ்தானுக்கும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பிற்காக அனுப்புகின்றனர்.  ஊருக்கு உபதேசம் என்ற கதை இடைநிலை ஆசிரியர்களுக்கே பொருந்தும் போது, உயர் அலுவலர் ஒருவர் இப்படிச் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே.

·       இதனால் நாம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில், பொது மக்களின் நம்பிக்கையை முற்று முழுவதுமாக இழந்த நிலையை அரசுப் பள்ளிகள் எய்தி இருபத்தைந்து வருடங்களாகி விட்டன.  இதில் இன்னமும் தரம் என்று கதைத்துக் கொண்டிருப்பது வாங்கும் சம்பளத்திற்காக ஊதும் சங்கு என்ற அளவில் சிரித்து ஒதுக்கப்பட வேண்டியது.

·    ஏன் தனியார் பள்ளிகளை அரசு எதிர்க்கவில்லை? ஏன் அந்தப் பள்ளிகளுக்கு அரசு வேண்டிய ஊக்கம் அளிக்கிறது? அவர்கள் அரசுக்கு பல கோடிகள் லஞ்சமாக கொடுக்கிறார்கள், அதனால்தான் அரசு அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்கிற கதையை நான் நம்பவில்லை.  இந்த நிலைக்குப் பின்னால், பணம் - சாதீயம் இரண்டும் இருக்கிறது.  இந்த இரண்டு மட்டுமே இருக்கிறது.  புதிய பணக்காரர்கள் (முதல் தலைமுறை படித்து அரசு மற்றும் நல்ல வேலைக்குப் போனவர்கள்) தங்களின் upward mobility-ன் போது மகன் மகளுக்காக education shopping செய்கிறார்கள்.  இதுவரை என்னிடம் மட்டும் சுமார் ஐயாயிரம் பேர்கள் "எந்தப் பள்ளிக்கூடம் சேலத்தில் தற்போது சூப்பர்?" என்ற கேள்வியை கேட்டிருப்பார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதிலை, ஒரு குடிகாரனின் கிண்டல் மனநிலையில் கூறி வந்திருக்கிறேன்.  "இந்தப் பள்ளியில் சேருங்கள். அங்கு SC/ST மாணவர்களே பெரும்பாலும் இல்லை" என்று அடித்து விட்டிருக்கிறேன்.  கண்ணீர் மல்க, "இதைத்தான் எந்தப் பள்ளி நல்ல பள்ளி என்று சூசகமாகக் கேட்டோம். புரிந்துகொண்டு பதில் சொன்னீர்கள், நன்றி" என்று கரங்களைப் பிடித்துக் கொண்டு பாராட்டுதலை சொன்ன பெற்றோர்களை நிறைய பார்த்தாகி விட்டது. இதுதான் இன்றைய லட்சணம்.  மூடி மறைக்க இதில் ஒரு வெங்காயமும் இல்லை.  அடுத்ததாக, கணவன் மனைவி இருவருமே அரசு வேலையில் இருப்பது இன்று சர்வ சாதாரணம். தங்களுடைய குழந்தைகளை ஒரு "கெத்தான" பள்ளிக்கு அனுப்புவது அவர்களின் அந்தஸ்திற்குத் தகுந்த காரியம்.  இவர்கள் "ராயல் பேமிலிகளா" என்றால் அதுவும் இல்லை.  இவர்கள் புதுப் பணக்காரர்கள்.  அவ்வளவுதான்.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உதவியில் நகருக்கு வெளியே ஒரு வீடு, மனைவிக்கு ஒரு ஸ்கூட்டர், தங்களது அதிகபட்ச சாதனையாக ஒரு மாருதி கார். இவர்களால் ரூபாய் ஒரு கோடி கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிக்கு குழந்தையை அனுப்ப முடியாது.  ஆனால், நான்கு லட்சங்கள் செலவு செய்து தனியார் பள்ளிக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்விக்காக அனுப்ப முடியும்.  கடந்த 25 ஆண்டு கால அரசு மருத்துவக் கல்லூரிகளின் கதையை அணு அணுவாக ஆராய்ந்தால், இந்த உண்மையின் விசுவரூபம் புரியும்.  சமூகத்தின் கடைநிலை மனிதனும், பரம்பரைக் கோடீஸ்வரனும் சமூகத்தை ஒருபொழுதும் சீரழிப்பதில்லை.  நடுவில் இருக்கும் முதல் தலைமுறை கார் ஒனர்கள்தான் அந்தக் கைங்கர்யத்தை எப்பொழுதுமே செய்து வருபவர்கள்.

·          அண்ணாச்சிகளுக்கு NEET பற்றிய நடுவண் அரசின் அறிவிப்பு மரண அடி.  NCERT புத்தகங்களைப் படித்த குழந்தைகள்தான் NEET தேர்வில் வெல்ல முடியும் என்பதான எண்ணம் இவர்களைக் கதற வைக்கிறது.  கல்வி மாநில மற்றும் நடுவண் அரசுப் பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ளதால் நடுவண் அரசு இது விடயத்தில் தமிழ்நாட்டை எப்படி நிர்ப்பந்திக்க முடியும் என்ற கதறலை காணும் இடமெல்லாம் கேட்க முடிகிறது.  2011-ல் ஆரம்பித்த சிக்கல் இது.  ஜெயலலிதா என்ற ஒற்றை அரசியல் தலைமை கடந்த அய்ந்து ஆண்டுகளாக NEET-ஐ தடுத்து வந்தது. இவரின் மறைவிற்குப் பின் அந்த ஆற்றல் அடுத்த தலைமைகள் யாருக்கும் இல்லை.  இதன் விளைவுதான், அரசு ஆணை எண் 100. பதினொன்றாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு.

·   பதினொன்றாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு என்பதால் அரசுப் பள்ளியில் / உதவி பெறும் பள்ளியில் படிப்பவனுக்கு என்ன நன்மை? அவன் எப்பொழுதுமே மருத்துவம் படித்ததில்லை; படிக்கப் போவதுமில்லை. பின் ஏன் இந்த அவசரம்? முதல் தலைமுறை கார் ஓனர்களின் குழந்தைகள், அதாவது ராசிபுரம் - நாமக்கல் போன்ற ஊர்களில் அமையப் பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், NEET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும்.  அவர்களுக்காக மட்டும் அமைப்பை மாற்றுவது ஓட்டுவங்கி அரசியலில் முடியாத காரியம்.  எனவே, ஒரு ஜனநாயக வெளிப்பார்வையோடு அனைத்துக் குழந்தைகளுக்குமாக என்று இது மாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை எத்தனை அரசுப் பள்ளிக் குழந்தைகள் தமிழக அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்திருக்கிறது? 3000 சீட்டுகளும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால்தானே நிரப்பப்படுகின்றன. இதில் அரசுப் பள்ளி மாணவன் எங்கே வந்தான்? பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்று ஆகி விட்டதால், இனிமேல் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பி வழிவார்களா?

·    இனிமேல் என்ன நடக்கும்? தனியார் சுயநிதிப் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பையும் தாங்கள் இதுநாள் வரை பனிரெண்டாம் பகுப்பை நடத்தி வந்த மாதிரியே கொண்டு போவார்கள்.  NEET-ற்கான coaching centers இந்தத் தனியார் பள்ளிகளில் கட்டாயமாக இணைக்கப்படும். இவைகளில் படிக்கும் மாணவர்கள் செத்து சுண்ணாம்பு ஆவார்கள்.

·          திருத்தி அமைக்கப் படும் தேர்வு முறைகளில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பெண்கள் என்றால், எதன் அடிப்படையில் ஆசிரியர் அதனை வழங்குவார்? பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அதிகாரியின் அதட்டலில் இருந்து தப்பிப்பதற்காக மொத்த மதிப்பெண்களையும் வழங்குவார்கள்.  மொழிப்பாடங்களின் நிலை என்ன? மொழிப் பாடத்தின் முதல் தாள் 50 மதிப்பெண்களுக்கா அல்லது 100 மதிப்பெண்களுக்கா? இதே கேள்வியை மொழிப் பாடத்தின் இரண்டாம் தாள் பொருட்டும் கேட்கலாம்.  இருநூறு மதிப்பென்களுக்கு தேர்வு வைத்து அதை நூறு மதிப்பென்களுக்கு கணக்கிடப்படுமா? இதைப் போலவே பனிரெண்டாம் வகுப்பிற்குமா? மேல்நிலைப் பள்ளி படிப்பு முடிவதற்குள் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தமிழையும் (அல்லது தேர்ந்தெடுத்த மொழிப் பாடத்தையும்), இன்னொரு 400 மதிப்பெண்களுக்கு ஆங்கிலத்தையும் ஒரு மாணவர் படிக்க வேண்டுமா? விடைத்தாள் திருத்தும் மையங்களில் எத்தனை வேலை நாட்களுக்கு மொழி ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த வேண்டி வரும்? இப்போது ஏறத்தாழ இருபது வேலை நாட்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரியும் மொழி ஆசிரியர்கள் இனிமேல் நாற்பது வேலை நாட்களுக்கு இந்த மையங்களில் பணிபுரிவார்களா? நாற்பது வேலை நாட்கள் என்பது இரண்டு காலண்டர் மாதங்கள்.  அல்லது, மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு தாள்கள் என்பது ஒரு தாளாக குறைக்கப் படுமா? எதற்கெடுத்தாலும் கேந்திரிய வித்யாலயா, CBSE, NCERT, கேரளா, ஆந்திரா என்று சுட்டிக் காட்டும் பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்கள் அங்கு எங்குமே மொழிப் பாடத்தில் இரண்டு தாள்கள் இல்லை என்பதை அறிவார்களா?

·          அறிவியல் பாடங்களுக்கு செய்முறை வகுப்புகள் பதினொன்றாம் வகுப்பில் நடத்தப்படும்.  அனால், அதற்கான செய்முறைத் தேர்வுகள் பனிரெண்டாம் வகுப்பின் இறுதியில்தான் நடத்தப்படும்; அதுவும் பனிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுடன் இணைந்தபடிக்கு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சொல்கிறது.  மிகவும் வேடிக்கையான, கேலி கிண்டல் இவைகளில் நம்பிக்கையில்லாதவனைக் கூட உசுப்பேற்றும் விஷயம் இது.  ஒன்பதாவது வரை, மாணவன் நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்படுகிறான்; ஆகையால் முப்பருவத் தேர்வு என்று அமைக்கப் பட்டிருக்கிறது.  அடுத்த ஒரு வருடம் கழித்து, இதற்கு நேர் எதிரான நிலையை, அதாவது பதினொன்றாம் வகுப்பின் செய்முறைத் தேர்வுகளை செய்முறை வகுப்புகள் முடிந்து ஒரு வருடம் முழுதாக முடிந்த நிலையில் நடத்திக் கொள்ளலாம் என்பதை பைத்தியக்காரத்தனம் என்று ஒருவர் விமரிசித்தால் அவரை நாம் கோபித்துக் கொள்ள முடியாது.  

·          மாணவனுக்கு பதினொன்றாம் வகுப்பில் அரியர்ஸ் விழுந்தால், அவர் படித்துத் தேற வேண்டிய பனிரெண்டாம் வகுப்பு கற்றல் நிகழ்வுகளில், அவனைப் பொறுத்தவரை சுணக்கம் ஏற்படாதா? தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரு குழந்தையின் மனச் சுமையை அதிகப்படுத்தி, மனஉளைச்சல் நோயிடம் கொண்டு போய் அந்தக் குழந்தையை பத்திரமாகச் சேர்த்த பிறகு, தேர்வுகளில் அரைமணி நேரம் குறைத்திருக்கிறோம் என்பதுதான் இவர்கள் கண்டடைந்த தீர்வா?

·    நான் அறிந்துள்ள வரை, சமூகத் தளத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டத்தைத் தவிர வேறெதுவும் NEET-ஐத் தடுத்து விட முடியாது.  ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சந்துரு அவர்கள் இதைப் பற்றி கருத்து சொல்கிற பொழுது, "தமிழக அரசு NEET தேர்வைத் தவிர்க்க முடியாது. உச்ச நீதி மன்றம் கடந்த ஒரு வருடத்திற்கு மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளித்துள்ளது. மேலும் மருத்துவக் கல்வி என்பது concurrent list-ல் வரவில்லை. மருத்துவக் கல்வி நடுவண் அரசுப் பட்டியலில் 66-வது சேர்க்கையாக (entry) இருப்பதைத் தொடர்ந்து, பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தை உச்ச நீதி மன்ற அமர்வும் உறுதி செய்துள்ளது.  அதன் படிக்கு, 2011-ம் ஆண்டு முதலே மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கு NEET இன்றியமையாததாகும்" என்று கூறியிருப்பது கூர்ந்து கருதத்தக்கது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் இன்னும் பெரிய சவால்கள் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பிரத்தியேக கூறான 69 சதவீத சமூக நீதியும் மருத்துவக் கல்வியைப் பொறுத்த வரையிலும் கேள்விக்குள்ளாக்கப்படும் நாள் தொலைவில் இல்லை.      

·       தற்போதைய முதல்வர் (25-05-2017) நிறைவேற்றப்பட்ட சட்டமன்ற மசோதா ஒன்றை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறார். அதன் படிக்கு, தமிழ்நாடு மாணவர்கள் NEET எழுத வேண்டியதில்லை.  தமிழக அமைச்சர்கள் இருவர் நடுவண் அரசு அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் NEET 2017 நடந்து முடிந்து விட்டது.  காளை மாட்டிற்காக மெரினாவில் கூடிய இளைய தளபதிகள் MBBS படிப்பிற்காக கூடவில்லை.  சமூக நீதி பொருட்டும் கூடவில்லை.  மண்டல், சமூக நீதி, விபி சிங் போன்ற வார்த்தைகள் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.  

·     இதில் இன்னொன்றும் உண்டு.  CBSE மாணவர்கள் NCERT புத்தகங்களை மட்டும் படித்து விட்டு NEET எழுதி ஜெயிக்க முடியுமா என்றால், முடியாது. கோச்சிங் வகுப்பு ஒன்றுக்கு செல்லும் CBSE மாணவனுக்கே அந்த வாய்ப்பு பிரகாசம்.  NEET வேண்டாம் என்று நீதிமன்றங்கள், சட்டமன்றம், மக்கள் அரங்கம், மற்றும் மக்கள் தன்னெழுச்சி வழியாக போராடாமல், பதினொன்றாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு என்று சர்க்கஸ் செய்வதைப் பார்க்கும் பொழுது, கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய பெருந்தகைகளின் மகிமை புரிகிறது.

·          NEET நிரந்தரமானால், கிராமப்புற மாணவனும், ஏழை மாணவனும், தலித் மாணவனும் கல்லூரிப் படிப்பையே தொட முடியாமல் போகலாம்.  முதல் தலைமுறை கார் ஓனர்களின் பையன்கள் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்படும் மாற்றங்கள் எதுவும் எளிய மாணவன் ஒருவனின் எதிர்காலம் பற்றிய கனவை சிதைத்து விடலாகாது. ஏழை மாணவன் மருத்துவப் படிப்பைப் பற்றி எப்பொழுதுமே சிந்தித்தது இல்லை.  இப்போது நடைமுறையில் இருக்கும் முறையிலேயே அவன் மருத்துவன் ஆக  முடிவதில்லை என்பது வேறு விஷயம். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற வெளிப்பூச்சாவது இருக்கிறது இப்போது. இனிமேல் அந்த பாவனையும் இருக்கப் போவதில்லை.  அன்புமணி ராமதாஸ், தொல் திருமாவளவன், ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் தங்களது கட்சிகளின் சார்பாக பொதுநல வழக்குகளை உச்சநீதி மன்றத்தில் தொடுக்க வேண்டும்.  இதை மாநிலத்தின் ஆகப்பெரும் பிரச்சினையாக முன்னெடுத்திட வேண்டும்.  வீதி தோறும் பிரச்சாரங்கள் செய்து இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திட செய்திடல் தகும். அரசுப் பள்ளி / உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இது பற்றிய பிரக்ஞையை தம் மாணாக்கரிடையே ஏற்படுத்திட வேண்டும்.

·          தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மொத்தம் 24. தவிர, பதினாறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. மொத்தம் நாற்பது.  நாற்பதும் நமக்கே என்ற மனநிலை அனைவருக்கும் வர வேண்டும்.  இந்தியத் திருநாட்டிலே இந்த எண்ணிக்கைதான் அதிகம் என்று நினைக்கிறேன். இந்த எண்ணிக்கையில் தவறு இருப்பின், வாசகர்கள் சுட்டிக்காட்டவும்.

·         செய்ய வேண்டியதை எல்லாம் செய்யாமல், பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளை பொதுத் தேர்வுகளாக மாற்றி மட்டும் என்ன புதியதை சாதித்து விடப் போகிறோம்? மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர மற்ற பாடங்களை (வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு போன்றவை) படிக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி மாணவர்களும் பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளை பொதுத் தேர்வுகளாக எழுத வேண்டும் என்று சொல்வதற்கு அரசு வைத்திருக்கும் நியாயமென்ன? Civil Services, TNPSC போன்ற தேர்வுகளை எழுதுவதற்கு இந்த மாற்றியமைக்கப் பட்ட தேர்வு முறை உதவியாக இருக்கும் என்பதே அது.  இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறொன்றும் இருக்க முடியாது.  வேலை வாய்ப்பிற்காக எழுத வேண்டி வரும் எந்த தேர்வுகளுக்குமே, கடந்த பதினைந்து ஆண்டு கால அளவில், ஒரு கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுக்க வேண்டி வருகிறது.  இதைக் கடந்த இருபது ஆண்டுகளில் UPSC, TNPSC தேர்வுகளை வென்று இன்று அதிகாரிகளாக இருக்கும் அனைவரும் அறிவர். புது தில்லி ராஜீந்தர் நகர், சென்னை அண்ணா நகர் ஆகிய ஸ்தலங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியாக நிற்கின்றன.  ராஜஸ்தான் கோட்டா போன்றவைதான் இந்த ஸ்தலங்களும். இதுதான் உண்மை. இதில் உண்மையைத் தவிர வேறில்லை. ஏதேனும் அரிய விலக்குகள் இருந்தால், சுட்டிக் காட்ட வேண்டாம்.  அவை அரியவை. விலக்குகள். நடைமுறையைப் பற்றி மட்டும் பேசுவோம்.

·          மேலே பேசிய அனைத்தையும் விட கேவலமானது எதுவென்றால், அரசுகளே கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்புதான் என்ற நிலைக்கு கீழிறங்கி விட்டதுதான். கல்வியின் நோக்கம் நிச்சயமாக வேலைவாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பு கல்வியின் by-product. கல்வித் துறை நமக்குச் சொல்வதை விடவும் மிகவும் சிறந்ததாகும் கல்வியின் நோக்கம்.

·      தனியார் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்.  டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட இது அவசரமானது. அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகள். இல்லையெனில், அரசு கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் சேர ஒரு மாணவன் அரசுப் பள்ளிகளில் / உதவி பெறும் பள்ளிகளில் படித்தவனாக இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் எட்டு ஆண்டுகள் அரசுப் பள்ளிகளில் / உதவி பெறும் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.  முக்கியமாக கடைசி நான்கு ஆண்டுகள் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில் / உதவி பெறும் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் உட்பட எந்தவித தனியார் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர் கல்வியைத் தொடர தடையில்லை. இதை மட்டும் செய்தால் போதும். சமூக நீதி வரும். அரசுப் பள்ளிகளில் தரம் தானே உருவாகும். ஒவ்வொரு அரசுப் பள்ளியும் ஐஐடி போல தன்னை உரக்க ஊருக்கு சொல்லிக் கொண்டு உயர விளங்கும். சாதி - மத நல்லிணக்கம் வரும். NEET துரத்தப் படும்.


·          தமிழ்நாடு உய்யும்.