சாவுங்கடா!

| Thursday, March 16, 2017
"முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்" என்ற கட்டுரையை ஆழி செந்தில்நாதன் இன்றைய தமிழ் ஹிந்துவில் (16-3-2017) எழுதியிருக்கிறார். 

நம்மில் பல பேருக்கு முத்துகிருஷ்ணன்களை கொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.  உண்மையில் முத்துகிருஷ்ணனை கொன்று இருபதாண்டுகள் முடிந்து விட்டது. அரசுப் பள்ளிகள் அனைவருக்குமான பள்ளிகள் அல்ல என்று எந்த நிமிடம் முடிவானதோ அந்த நிமிடத்தில்தான் நாம் முத்துகிருஷ்ணனைக் கொன்றோம். 

இது பற்றி நிறைய வே.வசந்திதேவி முதற்கொண்டு பலர் பேசியாகி விட்டது; எழுதியாயிற்று.  நிறையப் படித்துமாகி விட்டது.  ஆழி செந்தில்நாதன் முத்துகிருஷ்ணன்களை கொல்ல வேண்டி வந்த காரணங்களை பட்டியலிடுகிறார்.  ஒவ்வொன்றும் உண்மை.  நாம்தான் அரசுப் பள்ளிகளின் தரத்தைத் தாழ்த்தினோம்.  தனியார் பள்ளிகளைத் துவக்க அனுமதி கொடுத்த போதே அரசுப் பள்ளிகளைக் கொன்று விட்டோம்.  அப்புறம், அதில் படிக்கும் முத்துகிருஷ்ணன்கள் சாகாமலா இருப்பார்கள்?  School is a community.  It has in it all elements of the society.  நமது குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலிருந்து எடுத்ததுமே, அரசுப் பள்ளிகள் ஒரு holistic community என்ற தன்மையை இழந்து விட்டன. 

என்னோடு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாவது படித்த நண்பன் ஒருவனின் பெயர் பிரேம் ஆனந்த்.  அவன் பக்கத்தில் இருந்த மின்சாரத் தேக்கு நிலையத்தின் அதி உயர் அதிகாரியான செயற்பொறியாளரின் மகன். இன்ஸ்பெக்டரின் மகளும் என்னோடுதான் படித்தாள்.  பக்கத்து வீட்டு ஐயரு பையன் கிருஷ்ணமூர்த்தியும் நானும் ஒன்று முதல் ஆறு வரை வகுப்புத் தோழர்கள்.  கவுண்டர்கள் மட்டுமே வசித்து வந்த வெள்ளாளத் தெரு பையன்கள் - பொண்ணுகள் எல்லோரும் இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து அந்தப் பள்ளிக்கு வருவார்கள்.  ஐயரு முதல் ஆதிதிராவிடன் வரை அங்கிருந்தோம்.  அரசு அதிகாரி முதல் அன்றாடங்காய்ச்சி வரை தங்களின் குழந்தைகளை பஞ்சாயத்து பள்ளிக் கூடத்திற்குத்தான் அனுப்பி வைத்தார்கள்.  முத்து வாத்தியார்தான் எல்லோருக்கும் நல்லதங்காள் கதையைச் சொன்னார்.  கம்யூனிசம் அங்கே இயல்பாகவே இருந்தது.  

எல்லாம் கெட்டுப் போனது எழுபதுகளுக்குப் பின்னால் பட்டம் பெற்று 'பெரிய ஆளா' ஆனவங்களோட கைங்கர்யம்தான்.  அப்புறம் எம்ஜியார் காலத்தில் தனியார் பள்ளிக்கூடங்கள் - பாலிடெக்னிக்குகள் - கல்லூரிகள் புற்றீசல் போலக் கிளம்பின.  இங்கிலீசு தேவைப் பட்டது எல்லோருக்கும். இந்த இங்கிலீசு பற்றிய உண்மை எனக்குத் தெரியும்.  இந்த இங்கிலீசுப் பள்ளிக்கூடங்களில் படித்த - படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் எவருடைய இங்கிலீசும் குறைந்தபட்ச தரத்துடன் கூட இல்லை.  ஒரு ஐநூறு வார்த்தைகளை வைத்துக் கொண்டே சல்லியடிக்கிறார்கள் இந்தப் பெண்டுகளும் பிள்ளைகளும்.  இவர்களிடம் writing skill என்பது கொஞ்சமும் இல்லை.  ஒரு சில விலக்குகள் இருந்தாலும் அதற்கும் இந்த இங்கிலீசு கல்விக்கூடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அந்த மாணவனுடைய தனி ஆர்வம் - திறமை மற்றும் வீட்டு சூழல் மட்டுமே காரணமாக அமைகின்றன.  

நான் பஞ்சாயத்து பள்ளியில்தான் படித்தவன். பனிரெண்டாவது வரைக்குமே தமிழ் வழிதான்.  ஆங்கில இலக்கியத்தில் இளநிலை ஆய்வர் பட்டமும், மொழியியலில் முனைவர் பட்டமும் பெறுவதற்கு பஞ்சாயத்து பள்ளியில் சொல்லிக்கொடுத்த வாத்தியார்களும் கூடப் படித்த பசங்களும் பொண்ணுகளும்தான் காரணம். இதில் சந்தேகமேயில்லை.  எல்லோரின் நிலையும் இதுதான். முப்பத்தைந்து வருடங்களாக விடாமல், உண்மையிலேயே, தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பழக்கம் எனக்கு வந்தது நான் படித்த பஞ்சாயத்து பள்ளியால்தான்.  அப்பாவும் அந்தப் பள்ளியில்தான் வாத்தியார்.  வாத்தியார்களும் வாத்திச்சிகளும் (அம்மாவும் அவரில் ஒருவர்) பொழுதன்னிக்கும் புத்தகம் படித்தவாறே இருப்பார்கள்.  நாங்கள் அதை அப்படியே காப்பியடித்தோம்.  அந்த வாத்திகளுக்கு உடம்பை செருப்பாக்கிப் போட்டாலும் கடன் கட்டி முடியாது.

நாம் இன்றிருக்கும் நிலைக்கு கல்வி தவிர்த்த நிறைய காரணங்கள் உண்டு. சில சாதியினரின் பிள்ளைகளுடன் நம்முடைய பிள்ளைகள் படிப்பதை நாம் விரும்பவில்லை.  ஏனென்றால், நாம் புதுப்பணக்காரர்கள் போல, புதுசாதீயர்கள்.  என்னுடைய பையன் இங்கிலீசு பேசா விட்டாலும் பரவாயில்லை; இங்கிலீசு பள்ளிக்கூடத்திற்கு போனால் போதும்.  வீட்டிற்கு முன்னால் நவீனமான பேருந்து வந்து நின்று பையனை அள்ளிக்கொண்டு போனால் போதும். 

கவர்ன்மென்டு நினைத்தால் இதற்கு ஒரே நாளில் முடிவு கட்டி விட முடியும்.  முத்துகிருஷ்ணன்கள் கொல்லப்பட மாட்டார்கள்.  அனைத்து சுயநிதிப் பள்ளிகள் - கல்லூரிகள் அரசுடமையாகிறது என்ற ஒரே உத்தரவில், தரமான கல்வியை ஐயரு - கவுண்டர் - சாயபு - ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு உத்தரவாதம் செய்துவிட முடியும்.  ஆனால் அரசு செய்யாது.  செய்ய விட மாட்டோம்.  இதற்குக் கல்வி சார்ந்த காரணங்களே இல்லை.  இது அரசுக்குத் தெரியும்.  அரசுக்குத்தான் முதலில் தெரியும்.  ஆனாலும் அரசுப் பள்ளிகளில் தரத்தை உயர்த்த கட்டிடங்கள் கட்டப்படும்.  வாத்தியார்கள் நிரப்பப்படும். இலவசங்கள் கொடுக்கப்படும். அரசுப் பள்ளிகளுக்கு சேரி பிள்ளைகள் மட்டும் படிக்கும் நிறுவன அந்தஸ்து கவனமாகப் பாதுகாக்கப்படும். எல்லாம் நாசமாக்கப்படும்.


சாவுங்கடா!

முலக்காரம்

| Saturday, March 11, 2017
திருவிதாங்கூர் பெண்களும் இத்தாலிய தூதனும் 

கேரளாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது பாலக்காடு மாவட்டத்தில் நவம்பர் - திசம்பர் மாதங்களில் இரவு நேரங்களில் தொடங்கி அதிகாலையில் முடியும் கிறித்துவ தெருக்கூத்துக்களைத் தொடர்ந்துப் பார்த்து வந்திருக்கிறேன்.  பாரதியார் சர்வகலா சாலையில் எனது அறைக்கு பக்கத்து அறையில் ரவிக்குமார் என்ற தமிழ்த்துறை ஆய்வாளர் இந்தக் கூத்துக்களைப் பற்றி ஆய்வு செய்து வந்தார்.  அவரிடம் கேரள கூத்துக்களைப் பற்றிய கருத்தியல் ரீதியான விவாதங்கள் வேறு. கேரள கூத்துக் கலைஞர்கள் விசேஷமானவர்கள்.  இந்தக் கலைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.  அந்தக் கூத்துக்களை ரசிக்க இரவு முழுவதும் அமர்ந்திருப்பவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது கேரளா கலை - பண்பாட்டு செழுமையை பறைசாற்றி நிற்கிறது.  தமிழ்நாட்டில் நல்லதங்காள் கதையைப் போலவே, எல்லா நிலப் பிரதேசங்களிலும் ஒரு பெண்மணி ஆணின் வேஷத்தை வெட்டிச் சாய்த்துவிட்டு கூத்துக்களின் - கதைகளின் - பாடல்களின் நாயகியாக விளங்கிக் கொண்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.  கேரள கலா ரசிகர் மட்டுமன்றி, தெருப் பெண்கள், மூதாட்டிகளும் கூட நஞ்சலியைப் பற்றி பிரமிப்பான தொனியில் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  மன்னரை எதிர்த்தவள்; அமைப்பை கேள்விக்குள்ளாக்கியவள்; அதிகாரத்தை நொறுக்கியவள்; ஆணாதிக்க பார்வையின் மீது உக்கிரமான விமர்சனம் ஒன்றை உமிழ்ந்தவள்.

நஞ்சலியின் கதையை மலையாளத்தில்தான் கேட்க வேண்டும்.  அவளின் கதையைச் சொல்லுவதற்கென்றே அந்த மொழி ஒரு பிரத்தியேகமான வார்த்தைத் தொகுப்பை இரண்டு நூற்றாண்டுக் கதையாடல்களின் வழி உருவாக்கி வந்திருக்கிறது என்றே எனது தமிழ்க் காதுகளுக்குத் தோன்றும். ஓசை ஒழுங்கு மிகுந்த, மந்திரமே என்று கேட்பார் உணரும், வடமொழியும் ஆதித் தமிழும் கலந்த கவிதையின் மிடுக்கு சபையில் எழுந்து நின்று சுழன்று ஆடுவதைப் போன்ற பிம்பம் மனதில் நஞ்சலியைப் பற்றி மலையாளிகள் சொல்லிக் கேட்கும் பொழுது தோன்றித் தோன்றித் தணிந்தவாறு இருக்கும். தனது எதிர்ப்பான செயல் ஒன்றால் மொத்த அமைப்பின் முகம் மொத்தம் மறைந்து முழுகுமாறு எச்சில் துப்பி அவமானப் படுத்த சில மாமனிதர்களால் மட்டுமே முடியும்.  நஞ்சலி மாமனுஷி.

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் அண்மையில் தனது வடிவமைப்பிலும் உள்ளீட்டிலும் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளதாக எனக்கு நண்பர்களால் சொல்லப்பட்டிருந்தும், அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சமும் ஏற்படவில்லை.  திரு.என்.ராம் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ஏனோ அதைப் படிக்கத் தோன்றுவதில்லை.  எனக்கு டாக்டர் பட்டம் பெற்றுத் தந்த நாளிதழ்.  முப்பத்தைந்து வருடங்களாக காலைப்பொழுதுகள் ஹிந்து தினசரியுடன்தான் துவங்கும்.  கடந்த இரண்டு வருடங்களாக அதைப் பார்ப்பதில்லை.  அந்தக் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ் ஹிந்து வீட்டிற்கு வரவழைக்கப் பட்டாலும், ஆங்கில நாளிதழின் தத்துவச் சார்பு ஜீரணிக்க முடியாமல் நிறுத்தி விட்டேன்.

நண்பர் ஒருவரின் கடையில் பெப்ரவரி 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டிருந்த பொழுது புதிய தி ஹிந்து எனக்கு தரப்பட்டது.  பனிரெண்டு ரூபாய் தினசரி ஒன்றின் விலை என்பதை ஒப்ப முடியவில்லை.  புரட்டிக் கொண்டிருந்த பொழுது மனு.எஸ்.பிள்ளை-யின் கட்டுரை கண்ணில் பட்டு முதல் பத்தி நொடிப் பொழுதில் உள்வாங்க முடிய, ஆர்வம் காரணமாய் முழுக்கட்டுரையையும் நின்றவாறே படித்து முடித்தேன். The Woman Who Cut Off Her Breasts.  நஞ்சலியின் கதை.  எனக்கு மலையாள மூதாட்டிகளால் எண்ணற்ற முறைகள் சொல்லப்பட்ட கதை.  இன்னொரு முறை மனு.எஸ்.பிள்ளை எழுதிப் படிக்க வாய்த்தது.  எனக்குப் பிடித்த மனுஷியின் கதை.  தனி ஒருத்தி அரசுக்கு எதிராக கலகம் செய்த கதை. சாதியத்தை, அமைப்பை, அதிகாரத்தை, ஆண் வர்க்கத்தை, பிரபுத்துவத்தை ஒரே வீச்சில் அறுத்தெறிந்தவளின் கதை.

இந்தக் கட்டுரையை மொழி பெயர்ப்பது கட்டாயமாகி விட்டது.  இதை மொழி பெயர்ப்பு என்று கூட சொல்ல முடியாது. அந்தக் கட்டுரையைப் படித்ததால் அதையொட்டி எழுந்த கட்டுரை இது. மூலத்தின் எதிரொலி.  இடையிடையே எனது மை என்னென்னவோ எழுதியிருக்கிறது.  நஞ்சலியை இன்று மொத்த கேரளுமுமே கொண்டாடுகிறது.  ஆனால் அவள் அவர்கள் அனைவருக்கும் சொந்தமானவள் அல்ல.  எளியவர்களின், கொத்தடிமைகளின், சாதியக் கட்டில் கீழ் நிலையில் நின்று மறுகுபவர்களின், குரல் எழுப்பி பேச முடியாதவர்களின், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப் பட்டவர்களின், அடக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதி அவள்.  வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் நஞ்சலியின் நினவு வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது.  

வருமானவரி அதிகாரிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்கேனும் நஞ்சலிகள் வரிகட்டத் தயாராக இருக்கலாம்.

அன்புடன்,

முனைவர் மு பிரபு.
 ------


முலக்காரம்

-முனைவர் மு பிரபு

நம்மை ஆளும் அரசு அமைப்புகள் நம்மிடமிருந்து விசித்திரமாக வசூலிக்கும் வரிகளின் மூலமாகவே வாழ்கின்றன; வாழ்விக்கின்றன என்ற பிம்பத்தையும் கட்டமைக்கின்றன.  சாதாரணன் அமைப்பை நம்பிச் செலுத்துகின்ற வரியில்தான் சாலைகள் அமைக்கப் படுகின்றன.  சில சாலைகள் கூவத்தூர் விடுதிகள் நோக்கி செல்கின்றன என்றாலுங்கூட, எல்லாச் சாலைகளும் வரியால்தான்.  கட்டபொம்மு முதல் நஞ்சலி வரை வரியை எதிர்த்துப் போராடியவர்களால் நிரம்பியிருக்கிறது இந்திய அரசியல் வரலாறு.

கேரள கடற்கரையில் செர்தலா என்ற சிற்றூரில் வாழ்ந்தவள் நஞ்சலி. அவள் இறந்த ஆண்டு 1803; ஆனால் இன்று வரை கேரள அரசியல் வரலாற்றில் அவளது பெயர் அசைக்க முடியாமல் பதிவாகியிருக்கிறது.  வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு எல்லாம் - அமைப்பின் சுமையில் நசுக்கப்பட்டு வாழ்வதா வேண்டாமா என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் - நஞ்சலி எங்கோ காற்றில் அலைந்தவாறே நம்பிக்கைப் பாலை வற்றாத தன் முலைகளிலிருந்து ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.

நஞ்சலியும் அவளது காதல் கணவன் சிறுக்கண்டனும் ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தச் சமூகம் தாழ்த்தப் பட்டதல்ல என்றாலும் நம்பூதிரிகள் - நாயர்கள் - ஈழவர்கள் - தாழ்த்தப் பட்டவர்கள் என்ற அடுக்கில் மூன்றாவதாக இழிநிலைப் பட்டுத்தான் இருந்தது.  ஈழவர்கள் மரமேறிகள். நஞ்சலிக்கும் சிறுக்கண்டனுக்கும் குழந்தைகள் இல்லை. தினசரி வாழ்வாதாரத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டிய சமூக நிர்பந்தம், சுற்றுப்புறத்தில் வாழ்ந்தாரைப் போலவே, அவர்களுக்கும் இருந்தது. வயிற்றையும் வாயையும் ஒட்டவைக்க பெரும்பாடு. சாதியக் கட்டுமானத்தின் கொடுமைகள் ஈழவர்கள் மீது முழுமையாக படர்ந்திருந்த காலத்தில் வாழ நேர்ந்ததுதான் நஞ்சலி - சிறுக்கண்டன் ஆகியோரின் பிழை.  நம்பூதிரிகள் - நாயர்களை எதிர்த்து ஈழவ சமூகம் எதுவுமே செய்ய முடியாத காலம்.  எதிர்ப்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.  நஞ்சலிதான் முதலில் ஈழவர்கள் மரியாதையோடு வாழ விரும்புகிறார்கள் என்று அறிவித்தவள்; அப்படியான காரியம் தன்னுடைய சாவின் மூலமாகத்தான் முடியும் என்ற போதிலும் அதைத்தான் நஞ்சலி தேர்ந்தெடுத்தாள். இன்று கேரளாவில் நம்பூதிரிகளும் நாயர்களுமே நஞ்சலியை தங்களுக்குமான பெருமைமிகு சின்னமாக கொண்டாடுவது காலத்தின் விந்தையன்றி வேறென்ன? ஒரு சம்பவம் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இளையராஜாவின் இசை வீரியத்தை முதலில் கடுமையாக எதிர்த்து வந்த மேட்டிமைப் பண்டிதர்கள், அவரின் இசை ஞானம் தங்களால் எதிர்கொள்ள முடியாதது என்று தெரிந்ததும் தங்களது பிதாமகர் மூலமாக ஒரு அறிக்கை விட்டனராம். "இளையராஜா நம்மாளு. நம்ம ஆளு ஒருவனை பகவான் அந்த சமூகத்தில் பிறக்க வைத்திருக்கிறான்." இதே வெட்கக்கேடான தப்பிப்புதான் நஞ்சலியின் விடயத்திலும். யாரை எதிர்த்து, யார் தங்கள் மேல் விதித்த அநியாய வரிகளை கட்டவொண்ணாமல், அதை எதிர்க்கும் வண்ணம் தனது முலைகளை அறுவாளால் அரிந்து வாழை இலையில் வைத்துக் கொடுத்தாளோ, அவர்களே நஞ்சலியை தங்களின் பெருமைமிகு சின்னமாகக் கொண்டாடுவதை இன்னும் மேட்டிமைச் சமூகங்கள் விட்டுவிடவில்லை என்பதைத்தான் இளையராஜா சம்பவத்திலிருந்து புரிந்து கொள்கிறேன். நஞ்சலி இன்று ஒட்டுமொத்த கேரள சமூகத்தின் மானமிகு சின்னமாகப் போற்றப்படுகிறாள். உண்மையில், நம்பூதிரிகளையும் நாயர்களையும் எதிர்த்து நின்றவள் நஞ்சலி.  குரூரமாகத் தண்டித்தவளும் கூட. யாரை எதிர்த்து தன்னை மாய்த்தாளோ, அவர்களின் பிரதிநிதியாகவே அவளை ஆக்கிவிட்டது மேட்டிமைச் சமூகத்தின் தந்திரம்.

கேரளா முரண்பாடுகள் நிறைந்தது.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய கேரளம் பழமைவாதத்தின் இருப்பிடம்.  திருவாங்கூர் சமஸ்தானத்தில் செர்தலா, நஞ்சலியின் சம்பவத்திற்கு முன், வெளியில் அதிகம் அறியப்படாத சிற்றூர். திருவாங்கூர் மன்னர் தன் நாட்டை நிர்வகிக்கத் தேவையான நிதியை வெவ்வேறு வழிகளில் மக்களிடமிருந்து கறக்க வேண்டிய நிலை. நில வரி போதுமானதாக இல்லை.  புதுப்புது உபாயங்கள் தேவைப்பட்டன.  நிலமில்லாத மீனவர்களிடம் அவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளின் அளவைப் பொறுத்து வரி கறக்கப்பட்டது. கொத்தடிமைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் முதலாளியிடமிருந்து வரி கறக்கப்பட்டது. சிறுக்கண்டனும் நஞ்சலியும் தங்கள் மேல் விதிக்கப்பட்ட வரியை பயபக்தியோடு செலுத்தி வந்தவர்கள்தான், அந்தப் புதிய வரி அறிமுகப்படுத்தப் பட்ட வரை; அந்த வரியை வசூலிக்க அதிகாரிகள் வீட்டு வாசலில் நின்றபோதுதான் நஞ்சலி முடிவெடுத்தாள். "போதும். இதற்கு முடிவு கட்டியாக வேண்டும்."

திருவாங்கூர் ராஜாதான் அந்த வரியைப் போட்டவர். பெண்கள் முலைகளின் அளவிற்கேற்ப வரி.  நம்பூதிரி - நாயர் சமூகங்கள் தவிர்த்த மற்ற சாதிப் பெண்களின் முலைகள் ராஜாவின் வரிவரம்பின் கீழ் வந்தன.  அவற்றின் அளவிற்கேற்ப வரி செலுத்தப்பட்டாக வேண்டும். அந்த வரியையும் நஞ்சலியும் அவளது கணவனும் சில வருடங்கள் செலுத்தி வந்ததாகவும், அந்த வருடம் (1803) கடும் வறுமையின் காரனாகவே நஞ்சலி அப்படியான ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தாள் என்றும் கதையாடல்கள் இருக்கின்றன.  1803ம் ஆண்டு அவளது வாசலில் "முலக்காரம்" வசூலிக்க திருவிதாங்கூர் ராஜாவின் சேவகர்கள் வந்து நின்ற பொழுது, அமைதியாக குடிசையின் உள் பகுதிக்குள் போன நஞ்சலி அறுவாளை எடுத்து தனது முலைகளை அரிந்து வாழை இலையில் வைத்து தண்டம் வாங்க வந்த அதிகாரிகளிடம் வரியாக கொடுத்த நிலையில், மயங்கிச் சாய்ந்து உயிரை விட்டாள் என்கின்றன கதையாடல்கள்.  இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் நஞ்சலியை எரித்த தீயில் விழுந்து அவளது கணவனும் தன்னை மாய்த்துக் கொண்டான்.  இனி நஞ்சலி முலக்காரம் செலுத்த மாட்டாள்.  விட்டு விடுதலையான குருவி கூண்டின் பக்கம் மீண்டும் பறக்குமா என்ன?

நஞ்சலியின் சமகால வரலாறு நமக்கு பயத்தைத் தந்தவாறே இருக்கிறது.  கீழ்சாதிப் பெண்களுக்கு தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ள அனுமதியில்லை.  அப்படியான ஆசை வந்தால், அதாவது மார்பகங்களை மாற்றானின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ள, முலக்காரம் கட்டியாக வேண்டும்.  பணம் இருப்பவருக்கே மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை உண்டு என்று சட்டம் போடும் அரசு என்ன மாதிரியான அரசு? நஞ்சலி அப்படியான பேரத்தை விரும்பவில்லை.  மானமா பணமா என்ற கேள்வியில் மானம்தான் என்று பதில் சொல்லிவிட்டாள் நஞ்சலி.  அவளின் தியாகம் திருவிதாங்கூர் நிலப்பரப்பில் ஈழவ - தாழ்த்தப்பட்ட மக்களை கொந்தளிக்கச் செய்தது. மன்னர் அடிபணிய வேண்டியதாயிற்று. முலக்காரம் விலக்கிக் கொள்ளப்பட்டது.                    

கேரள நிலப்பரப்பில் எந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணுமே, போர்ச்சுக்கீசிய வாணியர்கள் வரும் வரைக்குமே, தங்களது மார்பகங்களை மறைத்துக் கொண்டதில்லை.  கேரளாவிற்கு பதினேழாம் நூற்றாண்டில் தனது பிரதிநிதியாக அமைச்சர் ஒருவரை அனுப்பியது இத்தாலிய அரசு. திருவிதாங்கூர் அரசவையில் நின்ற அவரைப் பார்த்து ராஜாவின் பெண்கள் சிரித்தனர். "இவ்வளவு உஷ்ணத்தில் ஏன் தலை முதல் கால் வரை அடுக்கடுக்காய் துணிகளைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் இவர்?" மொத்த இந்திய நிலப் பரப்பிலேயே ஆணாதிக்க சமூகம் இல்லாத நிலப்பரப்பாக கேரளா அன்று இருந்தது.  பொருளாதாரம் மற்றும் பாலுறவுத் தேர்வு போன்ற விடயங்களில் பெண்களுக்கும் முழு தன்னதிகாரம் நிலைத்திருந்த சமூகம் அது.  கணவன் இறப்பது பெரிய துக்ககரமான விஷயமாக இருக்கவில்லை. உடனே இன்னொரு ஆணை புருஷனாகத் தேர்வு செய்து கொண்டனர்.  ஈழவ புரட்சி வீராங்கனைகளைப் பற்றிய நாட்டுப் பாடல்கள் நிறைய உண்டு.  வடக்கு மலபாரின் உன்னியக்கா, அட்டிங்கல் உமயம்மா போன்றவர்களெல்லாம் நஞ்சலிக்கு பெரிய ஆதர்சனங்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய நிலை பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்திலும் மாறத் துவங்கியது. அன்றைய பெண்களின் மூடப்படாத மார்பு அவர்களுக்கு அன்றிருந்த அதிகாரத்தின் சாட்சி. அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பிறகு மார்பை மூட வேண்டியதாயிற்று.

ஆணாதிக்க சமூகத்தில் ஒழுக்கம் என்பதைப் பற்றிய சட்டங்கள் வேறு. இந்தியாவை ஆள நேர்ந்த பிற நாட்டவர்களுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்த ஆணாதிக்க சமூகங்களுக்கும் உண்டான விதிகள் கேரள நிலப்பரப்பிலும் உறுதியானது.  இதை நன்றாக நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.  பல தார மணம் ஆண்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த சமயத்தில், பெண்களுக்கும் அதுவே உரிமை என்றிருந்த நிலம் கேரளம்.  பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது.  வீட்டுச் சொத்துக்களைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பும் சக்தியும் பெண்களுக்கு அன்று இருந்தது.  வெறும் பிள்ளை பெறும் மெஷின்களாக கேரளப் பெண்கள் நஞ்சலி காலத்திற்கு முன்பு இல்லை.  ஆனால், இது எல்லாப் பெண்களுக்குமான நிலையா என்றால், இல்லை.  நம்பூதிரி - நாயர் இனப் பெண்களுக்கே இது சாத்தியமாகியிருந்தது. நஞ்சலியின் சமூகப் பெண்களுக்கு இத்தகைய அதிகாரம் தரப்படவேயில்லை.  நஞ்சலி வரி கட்ட தேர்ந்தெடுத்த வழியால்தான் எண்ணற்ற கதைப்பாடல்களுக்கு தலைவியாக முடிந்தது.  நஞ்சலியின் கதையை முடித்தவர்களின் சந்ததியினரும் அவளுக்கு உரிமை கொண்டாடி நிற்பது வரலாற்றின் அபத்தமேயாகும்.

இந்திய நிலப்பரப்பில் பிரிட்டிஷாரின் வருகை என்பது வெறும் புதிய அரசியல் போக்கு என்ற அளவில் நின்று விட வில்லை. கேரளாவிற்கு முற்றிலும் அந்நியமான ஒரு ஒழுக்கச் சட்டகத்தை ஆங்கிலேயர் அங்கே அறிமுகப்படுத்தி வைத்தனர்.  உள்ளே நுழைந்த பாதிரிகள் மூலமாகவே அறிமுகமும் பெற்று நிலைக்கவும் செய்தன ஆணாதிக்கச் சட்டங்கள்.  பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது பாவச் செயல் என்று போதிக்கப் பட்டது.  பெண்கள் தங்களின் ஒழுக்கத்தை "ஒருவனை மட்டுமே திருமணம் செய்து கொள்வதின் மூலமாகவே" நிரூபிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது.  பெண்கள் கற்பு நெறியில் நிற்க வேண்டும் என்றும், அதன் முதல் படி, அவர்களின் திறந்த மார்புகள் மறைக்கப்பட்டாக வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.  மறைக்கப் பட்டதாலேயே, விக்டோரியன் மனோபாவத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆண்கள், பெண்களின் மார்புகளை நோட்டமிடத் துவங்கினர். அன்றைய கேரளாவில், கோவிலுக்குள் நுழையும் போது ஆண்களும் பெண்களும் மேலாடை இல்லாமல்தான் நுழைய வேண்டும்.  விக்டோரிய ஒழுக்கம் பெண்களை மேலாடை போட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதித்தது.  இது ஆண்களின் விதி. பெண்களின் விருப்பமல்ல. கடவுளின் பார்வையில் இரண்டாம் தர விசுவாசியாக்கப் பட்டாள். 1920களின் துவக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள் மேலாடை அணிந்தபோது, அந்தச் சமூகத்தின் சம்பிரதாயவாதிகள் அவர்களை சாதி நீக்கம் செய்தனர். மேலாடை அணிந்த பெண்கள் 'ஜெசபெல்களாக' பார்க்கப் பட்டனர். 'மேலாடை அணிந்த பெண்கள் விலைமாதராக ஆசைப்பட்டவர்' என்ற கருத்தாக்கமும் பரப்பப் பட்டது. ஆண்கள் விரும்பியதால் மேலாடை அணிய நிர்ப்பந்திக்கப் பட்ட பெண்கள், உண்மையில் தங்களை 'கடைப்பொருள்களாக' மாற்றிக்கொள்ள சம்மதித்தனர்.  ஆனால், விக்டோரிய மனோபாவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு மேலாடை அவசியம் என்று சாதித்து வென்றும் காட்டினார்கள்.

கிறித்துவ மதத்திற்கு மாறிய கீழ் சாதியினர் தங்கள் உடலின் மேல் பகுதியை மூடத் துவங்கியபோது, தாங்க முடியாத நம்பூதிரி - நாயர் சமூகங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.  மேல்துண்டு அணிவது நம்பூதிரி - நாயர்களுக்கு மட்டுமே உரித்தான கௌரவம் என்று இருந்ததால் வந்த ஆத்திரம் அது.  மார்பகத்திற்கும் வெட்கத்திற்கும் சம்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியதே, வெற்று மார்பகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்று நிலைநிறுத்தியதே, விக்டோரிய ஆணாதிக்க மனோபாவம்தான். பெண் வெறும் நுகர்வுப் பண்டம் என்று நிலைநிறுத்தப் பட்டதை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றபடி நடப்பதே பெண்மையின் லட்சணம்; அடிபணிவதில்தான் பெண்மையின் கௌரவம் இருக்கிறது என்பதாக பெண் தொடர்ந்து சொல்லப்பட்டாள். முதல் தலைமுறையாக கல்லூரியில் பயில வந்த கேரள ஆண்கள் இங்கிலாந்து ஆசிரியர்களால் பரிகசிக்கப் பட்டார்கள்.  திறந்த மார்பகங்களுடன் திரியும் இவர்களின் அம்மாக்கள் பல தார மணத்தில் இருப்பதால் அப்பாக்களை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? இத்தகைய பரிகாசத்தால் அவமானப்பட்டுப் போன கேரள மாணவர்கள் வீடு திரும்பி விக்டோரிய ஆணாதிக்க ஒழுக்கச் சட்டகங்களை தங்கள் பெண்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள்.  பெண்களும் மேற்கத்தியக் கல்வி பயிலத் துவங்கிய பொழுது விக்டோரிய ஒழுக்க நெறிகள் கேரளப் பிரதேசத்தின் ஒழுக்க நெறியாக ஆகிப் போனது.  1892-ல் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக துவக்கப்பட்ட சஞ்சிகை ஒன்று "இந்தப் பத்திரிகையில்  அரசியல் விஷயங்கள் எடுத்துக் கொள்ளப் படாது. சமையல் குறிப்புகள், பெண்களுக்கு உதவும் விஷயங்கள், லட்சியப் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதான யோசனைகள் மற்றும் இவை போன்ற 'மேன்மையான விஷயங்கள் மட்டுமே' பிரசுரிக்கப் படும் என்பதை தனது கொள்கையாக அறிவித்தது. வீட்டில் நல்ல அம்மாவாகவும், விசுவாசமான மனைவியாகவும் இருக்க கேரளத்துப் பெண் வலியுறுத்தப் பட்டாள். வேல்துண்டு இல்லாமல் திறந்த மார்புடன் பல கணவர்களுடன் வாழ்வது "அவுசாரித்தனம்" என்று திரும்பத் திரும்ப அவளது உளவியலில் ஏற்றப்பட்டது.  விவாகத்தை முறித்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு மறுக்கப்பட்டது.  அந்த சஞ்ஞிகையின் பிரதானமான கொள்கையாக, 'பெண்களின் உயரிய பணி வீட்டைப் பராமரித்தலும் கணவனுக்குத் தொண்டு செய்வதுமே ஆகும்" என்று அறிவிக்கப் பட்டது.

இதன் அடுத்த காலகட்டத்தில் கேரள நிலப்பரப்பில் வரலாற்றை மாற்றிப் போட்டு எழுதும் மோசடி நடந்தேறியது.  புரட்சிப் பெண்கள், உமையம்மா அட்டிங்கல் போன்ற சிம்ம சொப்பனப் பெண்கள், ஆண்களின் தயவை நாடி நின்ற பதிவிரதைகளாக ஜே.பரமேஸ்வரன் போன்றோரின் கவிதைகளில் சித்தரிக்கப் பட்டனர்.  பலதார மணத்தின் வீரதீரப் பிரதிநிதிகளாக பல ஆண்களுடன் மணம் புரிந்து வாழ்ந்து சிறந்த உமயம்மா அட்டிங்கல் பின்னாட்களில் "ஒழுக்க நெறியில் சிறந்து நின்ற பதிவிரதைத் தெய்வமாக" போற்றப்பட்டது வரலாற்றை அரசியல் எவ்விதம் களங்கப்படுத்த முடியும் என்பதற்கான சாட்சி.               
இந்தப் புரட்டுப் பொய்யர்கள் நஞ்சலியின் கதையையும் மாற்றிப் போட்டார்கள்.  நஞ்சலியின் புரட்சி வெறும் முலைகளுக்கானது அல்ல. அவைகள்தான் வரியின் நோக்கம் என்பதும் அல்ல.  வேறு எந்தக் காரணம் கொண்டும் வரிவிதிக்க முடியாத பராரிகளையும் வரிகட்ட வைக்க வேண்டும் என்ற அயோக்கியத்தனத்தை எதிர்க்கத் துணிவின்றி மற்ற ஈழவப் பெண்கள் 'முலக்காரம்' கட்டியபோது, வெட்டிய முலைகளை இலையில் வைத்து தண்டம் பிடுங்க வந்த அதிகாரிகளிடம் கொடுத்த நஞ்சலி உண்மையில் அமைப்பின் மீதே காறித் துப்பியிருக்கிறாள். ஆணுக்கு 'தலக்காரம்'; தலைக்கு வரி.  பெண்ணுக்கு 'முலக்காரம்'; முலைகளுக்கு வரி.  ஏன் பெண்ணுக்கும் 'தலக்காரம்' என்ற வரியையே வைத்திருக்கலாமே என்பதற்கு பிரபுத்துவ வரலாற்றில் பதில் இல்லை.  ஆண்கள் உலகத்தின் வக்கிர மனோபாவத்தில் இதற்கான பதில் இருக்கலாம்.  எது ஆண் கட்டிய வரி, எது பெண் கட்டிய வரி என்று பிரித்துப் பார்ப்பதற்கு தலக்காரம் - முலக்காரம் என்ற வரிகளின் பெயர்கள் உதவியிருக்கின்றன என்பதுதான் அமைப்பின் பதில்.

சாதாரண மனிதனைப் பிழிந்தெடுக்கும் இந்த சமூக அமைப்பின் குரூரத்தைத் தாங்கமுடியாமல் கொதித்தெழுந்த ஒற்றைப் பெண்ணின் புரட்சிதான் நஞ்சலியுடையது. மனிதனை மனிதனாகப் பார்க்க மறுக்கும் பிரபுத்துவ சமூகத்திற்கும், கீழ்ப்படியாதோரை தூசாக காலில் போட்டு மிதிக்கும் சாதீயத்திற்கும் எதிராக எழுந்த குரல் நஞ்சலியுடையது. ஏழைகளின் - பலஹீனர்களின் கதைத் தலைவி நஞ்சலி.  வரலாற்றுப் புரட்டர்கள் இடையில் செய்துவிட்டதைப் போன்று நடுத்தர வர்க்க - மேட்டுக்குடிப் பெண்களின் கதாநாயகி அல்ல அவள்.  ஆனால் அமைப்பு நயவஞ்சகமானது.  நஞ்சலியை தனதாக்கிக் கொண்டது.  "அவள் மாரைச் சுற்றி மாராப்பு போட விரும்பியவள்; அரசு மறுத்ததால் எதிர்த்துப் போராடியவள். அவளது எதிர்ப்பு சாதியத்திற்கும், நிலவுடமை சமூகத்திற்கும் எதிரானது அல்ல" என்பதாக அமைப்பு பிரச்சாரம் செய்வது மட்டுமன்றி கேரள நடுத்தர - மேட்டுக்குடிப் பெண்களின் ஆதர்சன கதாநாயகியாக நஞ்சலியை கட்டமைக்க முயல்கிறது.  நஞ்சலி தனது மாரைப் பற்றி அக்கறை கொண்டவளல்ல.  அமைப்பை ஆவேசமாகத் தாக்கியவள்.  அவளின் தாக்குதலால் படுகாயமடைந்த அமைப்பு இருநூறு ஆண்டுகளாக பொய்களைக் கட்டமைத்து தனது சேதாரங்களை மறைக்க முயன்று கொண்டேயிருக்கிறது.