ஐம்பது காசு அறிவு

| Saturday, September 17, 2016
"ஐம்பது காசுக்கு ஒண்ணு"
எங்களது பள்ளிப் பருவத்தில் ஒளியச்சு நகல் (photocopying) வசதி இல்லை.  ஒருநாள் பள்ளிக்கூடம் போகாவிட்டால், அன்று நடந்த பாடங்களை நண்பனிடம் நோட்டு கடன் வாங்கி விடிய விடிய எழுதித் தள்ள வேண்டியிருந்தது. “எப்ப பாத்தாலுமே எழுதிக் கிட்டே இருக்கான். படிக்கவே மாட்டேங்கிறான்” என்று அம்மா அடிக்கடி அப்பாவிடம் புகார் சொல்லி, அவர், கேப்டன் விஜயகாந்த் தன் கட்சிக்காரர்களை நாக்கை மடித்து அடிப்பது போலவே, என்னை அடித்து ஹீரோ பட்டம் வாங்கியதும் உண்டு.  ஆனாலும், பட்டப்படிப்பு - முதுகலை வரையே கூட, ஒளியச்சு நகல் வசதி பிரபலமாகாமல் இருந்தது எங்களது நல்லூழ் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.  கையெழுத்துப் பயிற்சியும், தட்டச்சு பயிற்சியும் கூடி வந்த யோகம் இந்த ஒளியச்சு வசதி இல்லாததால்தான். இன்று மாணவர்கள் எதையும் எழுதுவதேயில்லை.  எப்போதாவது குறிப்புகளை ஆசிரியர் வகுப்பில் கொடுத்தால் கூட, பெண் பிள்ளைகள் எழுத, பையன்கள் அவர்களை உற்சாகப்படுத்திய படியே தாங்கள் எழுதாமல் இருக்கிறார்கள்.  “நம்ம ஊரிலும் ஐம்பது காசு ஜெராக்ஸ் வந்திடுச்சி, சார்!” என்று அவர்கள் சொல்லும்பொழுது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகமாகிறது.
 
எனது முனைவர் பட்ட ஆய்வின் போதெல்லாம் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜெராக்ஸ் கடைகள் மாரியம்மன் கோவில் பூக்கடைகள் போல காணுமிடமெல்லாம் முளைத்திருந்தன.  முதலில் பக்கத்திற்கு இரண்டு ரூபாய் இருந்தது நாளாக ஆக முப்பத்தைந்து காசு என்று இறங்கிற்று.  27 காசுக்குக் கூட ஜெராக்ஸ் போட்ட ஞாபகம்.  எழுதுவது என்பதே குறைந்து போய், கையெழுத்துப் போடுவதற்கு மட்டும்தான் பேனா பிடிப்பது என்ற நிலையில் பயம் வந்து, பிறகு எழுதியாக வேண்டும் என்பதினாலேயே, டைரி வாங்கி தினந்தோறும் அன்றைய குறிப்புகளைப் பதிந்து வந்த ஆண்டுகள் நினைவுக்கு வருகின்றன.

குடியிருந்த தெரு விடலைப் பையன்கள்தான் எனக்கு இணையத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  வலைப்பக்கத்தையும் முகநூல் கணக்கையும் துவக்கித் தந்தார்கள். அதிலே பத்தி எழுத ஆரம்பித்த நாட்களில் மீண்டும் பேய் வேகத்தில் பேனா பிடித்து எழுதி ரொம்பவும் சீக்கிரமாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியாகி விட்டது.  இப்போதெல்லாம், அலுவலகத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு ஆவணத்தையும் முதலில் கையால் எழுதி, தட்டச்சு செய்கிறேன்.  நானே எழுதி தட்டச்சு செய்யும் பொழுது, பிழை திருத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.  முதல் படிக்கும் இரண்டாம் படிக்கும் உள்ள வித்தியாசம், சில சமயங்களில், தெரு கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் உள்ளதைப் போல அமைவது அதிர்ஷ்டமல்ல.

கடந்த இருபது வருடங்களாக கல்விப் புலத்தில் ஒளியச்சுப் பிரதிகளின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.  எந்த அரிதான புத்தகங்களும் உடனடியாக ஜெராக்ஸ் செய்யப்படுகின்றன. ஜெராக்ஸ் செய்யும் செலவு புத்தகங்களின் விலையை விட மிகவும் குறைவாகவே பெரும்பாலும் இருக்கிறது.  முக்கியமாக, இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக படித்து வரும் இளைஞர்கள் தங்களது மொத்த தயாரிப்பின் கணிசமான அளவை ஜெராக்ஸ் பிரதிகளின் அடிப்படையிலேயே அமைக்கிறார்கள்.  தில்லி பல்கலைகழகத்தருகே ஜெராக்ஸ் செய்யப்பட்ட புத்தகங்களுக்கென்றே ஒரு பஜார் இருக்கிறது.


இப்படி ஜெராக்ஸ் செய்யப்பட்ட புத்தகங்கள் ஒருவரின் அறிவுசார் காப்புரிமையை மீறியதா என்ற கேள்வி என்னுள் எழுந்ததுண்டு.  ஆனால், வெளிநாட்டுப் புத்தகங்கள் அரிதாகவே கிடைக்கக்கூடிய சூழலில், கிடைப்பினும் விலை அதிகமாக இருக்கின்ற நிலையில் இன்னும் வேலைக்குப் போகாத மாணவர் சமுதாயம் எப்படி விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியும்? இன்னொரு பக்கம் பார்த்தால், ஒருவரின் அறிவுசார் உரிமையைத் திருடுவது தவறல்லவா என்றும் தோன்றுகிறது. 
 
இது குறித்து எழுந்த தாவாவில், தில்லி உயர் நீதி மன்றம் நேற்று (16-9-2016) தீர்ப்பளித்துள்ளது.  தில்லிப் பல்கலைக்கழக வளாகத்தில் தடை செய்யப்பட்டிருந்த ஜெராக்ஸ் கடைகளில் உரிமத்தை புதுப்பித்து அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், “இலக்கியம் மற்றும் அறிவுசார் விடயங்களில் காப்புரிமை என்பதை முழுமையாக ஏற்க முடியாது என்றும், பொது மக்களின் அறிவை விருத்தி செய்வதற்கும், தூண்டி விடுவதற்கும் பயன்படுவதான இத்தகைய ஒளியச்சுப் பிரதிகள் தேவையானவை என்றும், இவ்வாறு ஒளியச்சு செய்வது காப்புரிமைச் சட்டத்தின் படி, காப்புரிமையை மீறுவது ஆகாது என்றும்” தீர்ப்பளித்து சர்ச்சையை, தற்காலிகமாகவேனும், முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

நீதிமன்றமே சொல்லியாகி விட்டது.  அறிவின் விலையும் ஐம்பது காசுதான்.  ஜெராக்ஸ் கடைகளில் இனி நீண்ட மக்கள் வரிசையை எதிர்பார்க்கலாம், ரிலையன்ஸ் ஜியோ வாங்க நின்ற மக்களைப் போலவே.  அவர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் உருவாகும் என்றும் நம்பலாம்.