பருவமே.. புதிய பாடல் பாடு!

| Friday, September 25, 2015
HOW TO NAME IT?
என்னுடைய நண்பர் ஒருவர் மனநல மருத்துவராக இருக்கிறார்.  இன்னொருவர் மனநல ஆலோசகராக இருக்கிறார்.  இருவரிடமும் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த பொழுது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது தவிர வேறென்ன செய்து வந்தால் குணமடைய ஏதுவாக இருக்கும் என்று வினவிய பொழுது, இரண்டு பேருமே ஒரே மாதிரியாக, “பாதிக்கப் பட்டவருக்கு பிடித்த இசை வடிவம் எதுவாக இருந்தாலும், அதைக் கேட்டு வர வேண்டும். இது மிகவும் பயன் தரக் கூடியது” என்றார்கள். 
 
உண்மையாக இருக்க வேண்டும்.  இசை ஒருவனோடு அந்தரங்கமாக உறவாடுகிறது.  ஒருவன் அல்லது ஒருத்தி வாழ விரும்புகிற, ஆனால் வாழ முடியாத வாழ்க்கையாக இசை விரிகிறது. அதனுடைய மிகைத் தன்மைதான் அதனுடைய பலம்.  நம்முள் ஒரு பாடகனும் பாடகியும் எப்பொழுதும் இருக்கிறார்கள்.  பாடுகிற பொழுது யாதார்த்தத்தில் இருந்து விடுபடுகிறோம்.  இந்த மிகை யதார்த்தம் காரணமாக, பாடுகிற பொழுது, பாட்டைக் கேட்கிற பொழுது வேறு எதுவுமே பொருட்படுத்த தேவையில்லை என்றாகி விடுகிறது.  

சினிமா இசை மட்டுமே எனக்குப் பரிச்சயமான இசை வடிவம்.  இது தவிர பாரம்பரிய இசை வடிவங்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள இரண்டு முறை வாய்ப்பிருந்தும் தவற விட்ட பேரறிவாளன் நான்.  பள்ளிப் பிராயத்தில் எனக்கு இரண்டு பிராமண குடும்பங்களோடு நல்ல கொடுக்கல் வாங்கல்.  அந்த வீட்டு பிராமணப் பையன், கிருஷ்ணமூர்த்தி என்று ஞாபகம், என்னுடைய ஆத்மார்த்த சிநேகிதன். எங்கு போனாலும் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டேதான் போவேன்.  ஒருமுறை சண்டை போட்டுக்கொண்டு சுமார் ஒரு வருட காலம் பேசாமல் இருந்தோம்.  அப்புறம், ஆடி மாத மாரியம்மன் பண்டிகைக்கு குகைப் பகுதியில் நடந்த பாட்டுக் கச்சேரிக்கு தூறிக் கொண்டேயிருந்த ஒரு முன் இரவில் கூட்டமாக நடந்து போன போது, முறைத்துக் கொண்டே அவன் கையைப் பற்றிக் கொண்டதை இப்பொழுது நினைத்தாலும் நட்பின் அடர்த்தியால் கண்கள் ஈரமாகின்றன.  அவனுடைய அம்மாவும் அக்காளும் பெரிய பாடகிகள்.  வீட்டிற்குள் நடக்கும் போதும் பாட்டுதான். பூ கட்டும்போதும் பாட்டுதான்.  வீட்டு ஆண்கள் அவர்களுடைய பாட்டுக்கு விமரிசனம் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.  சில நேரம் பாட்டின் பொருட்டே அவர்களுக்குள் சண்டை வந்து விடும்.  ஆச்சர்யமாக என்னுடைய அம்மாவிடம் சொல்லும்பொழுது, சிரித்துக் கொண்டே “ஐயருங்களுக்கு எதுக்கு சண்டை போடறதுன்னே ஒரு விவஸ்தை கிடையாது தெரிஞ்சுக்கோ” என்பதாக சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. 
 
இரண்டாவது வாய்ப்பு, நடுவண் அரசு பள்ளியில் கேரளாவில் பணி புரிந்த பொழுது கிடைத்தது.  ஆசிரியர் அறையில் எப்பொழுதும் பாட்டுக் கச்சேரிதான்.  ஆசிரியர்களிலே பெரும்பாலானோர் பிராமணர்கள்.  பாடிக்கொண்டே பேப்பர்களை திருத்துவார்கள்.  ஒருவர் பாடுவதை இன்னொருவர் திருத்தி பாடிக் காட்டுவார்.  சனிக்கிழமைகளில் சுதி ரொம்பவுமே கூடும்.  ஒருமுறை ஒரு சக ஆசிரியை பாடிய பாட்டை நான் பாட முயன்ற போது, அவர்கள் என்னுடைய காலரைப் பிடிக்காத குறைதான்.  “இது சாமியை குத்தம் பண்றதாக்கும், இந்தப் தப்பு மறுக்க செய்யாதிங்கோ” என்று ஒரு பிடி பிடித்து விட்டார்.  பாரம்பரிய சங்கீதம் பக்கம் மறுபடியும் தலை வைக்க நினைப்பதேயில்லை.

பள்ளிப் பருவம் எழுபதுகளில் என்பதால் இரண்டு லாபங்கள்.  திரு.ராமமூர்த்தியிடம் இருந்து பிரிந்த பிறகு, திரு. விஸ்வநாதன் அவர்கள் தன்னுடைய அதி பெரும் பிரபல பாடல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தது இந்தக் காலத்தில்தான்.  அவரைவிடவும் மென்மையாக பாடல்களைக் கொடுத்த திரு.வி.குமார் அவர்களின் பிரபல்யமான பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்ததும் இச்சமயத்தில்தான்.  ஏழரை மணியிலிருந்து எட்டு மணி வரை திருச்சி வானொலியும், எட்டு இருபதிலிருந்து ஒன்பது மணி வரை கோவை வானொலியும் சினிமாப் பாடல்களை ஒலி பரப்பும்.  இதைக் கேட்காமல் பள்ளிக்கூடத்திற்கு போனதில்லை.  கேட்ட பாடல்களைப் பற்றித்தான் அன்று நண்பர்களிடம் பேச்சு. 
 
இந்த சமயத்தில்தான் “அன்னக்கிளி” வந்தது. SSLC, PUC மற்றும் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த அண்ணன்கள், அக்காக்களிடம் ஒரு பெரிய மாறுதல்.  ‘மச்சானைப் பார்த்தீங்களா?’ பாட்டு எல்லா டீக்கடைகளிலும் தூள் பரத்திக் கொண்டிருந்தது.  இளையராஜா என்ற பெயரை அனைவரும் மிரட்சியோடு பார்த்தார்கள்.  ஒரு முறை குமுதம் அரசு கேள்வி பதில் பகுதியில், “விஸ்வநாதன் – இளையராஜா இடையில் என்ன வித்தியாசம்?” என்ற கேள்விக்கு “மெல்லிசை மன்னர் – டப்பாங்குத்து மன்னர்” என்ற பதில் போட்டிருந்தார்கள்.  இது குறித்து இரண்டு அண்ணன்களிடையே பெரிய குத்து வெட்டு சண்டையே வந்து தெருவே களேபரம் ஆனதில், இளையராஜா எங்களிடையே இன்னும் பிபலமாகிப் போனார்.
   
எழுபதுகளில் வந்த ஒவ்வொரு இளையராஜா பாடலும் அவரின் படைப்பாளுமைக்கு சரியான சாட்சிகள்.  நண்டு, எனக்காக காத்திரு, அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள், மூன்றாம் பிறை, நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களின் பாடல்கள் எங்களது தூக்கத்தை மாதக் கணக்கில் கெடுத்திருக்கின்றன.  பெரிய தொப்பையுடன் சிவாஜி கணேசன் அவர்கள் ஜெயசுதாவை மிரட்டலோடு கட்டிப் பிடித்துக் கொண்டு பாடும் “எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”  இளையராஜாவின் கொடுமுடி.  அந்தப் பாடலை தொப்பை சிவாஜிக்கு கொடுத்ததற்காக ராஜாவின் மேல் எங்களுக்கு அடங்காத கோபம்.  ரஜினியோ கமலஹாசனோ அந்தப் பாடலுக்கு அபிநயம் பிடித்திருந்தால் அந்தப் பாடல் எங்கேயோ போயிருக்கும். 
 
இந்த வருடம் ஏப்ரல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தேனியில் இருக்க வேண்டி வந்தது.  காலைச் சிற்றுண்டிக்காக வரவேற்பறை வழியாக நடந்த பொழுது, தி ஹிந்து தமிழ் பதிப்பின் ஒரு பக்கம் கவனத்தை ஈர்க்க, படிக்கத் தொடங்கினேன்.  வெ.சந்திரமோகன் இளையராஜாவின் பாரியமான பாடல்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து அந்தப் பாடல்களின் சிறப்புக்களை விளக்குவதாக ஒரு தொடரை அன்று துவங்கியிருந்தார்.  “காற்றில் கலந்த இசை” என்ற தலைப்பில் இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சந்திரமோஹனை எப்படிப் பாராட்டினாலும் தகும்.  இருபத்து மூன்று வாரங்களைத் தாண்டி இந்தத் தொடர் வந்து கொண்டிருக்கிறது.  இன்றைய எந்தப் பாடலுமே புரியாமல், வீட்டு சின்னஞ்சிறுசுகளிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், இளையராஜாவின் எழுபதுகளின் பாடல்களை கேட்டாலே மனம் லேசாகி, புன்னகை உதடுகளில் தவழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அதிலும் மலேசியா வாசுதேவன் அவர்கள் ராஜாவிற்காக பாடிய பாடல்கள்! ராசாவினாலும் மறுபடி அப்படி மெட்டுக்களைத் தரமுடியாது.  பாடித்தர வாசுவும் இங்கில்லை. 
 
திரும்பத் திரும்ப அதே பாடல்களைக் கேட்டுக்கொண்டே போய் சேர வேண்டியதுதான்! இந்த வரமே போதும்!   
  

சர்ச்சையின் காதலன் நெரூடா [1904-1971]

| Wednesday, September 23, 2015
PABLO NERUDA
[இன்று செப்டம்பர் 23, பாப்லோ நெரூடாவின் நினைவு தினம்]
 
தென் அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்ட பூமி.  சர்வாதிகாரம் அங்கிருக்கும் பல நாடுகளில் தலைவிரித்தாடியது.  புரட்சிக்காரர்களும் பஞ்சமில்லாமல் தோன்றிய வண்ணமே இருந்தார்கள்.  வீரியமிக்க படைப்பாளிகளும் கவிஞர்களும் புரட்சியாளர்களுடன் கைகோத்துக் கொண்ட கதைகள் இந்தப் பூமியில் ஏராளம்.  Magical Realism என்ற நவ கதை சொல்லும் முறை உலக இலக்கியப் போக்கையே புரட்டிப் போட்டது.  அது வேர் பிடித்து கிளைத்தது இங்கிருந்துதான்.  அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அரசியல் பிரதேசத்திலிருந்துதான் சுதந்திரத்தின் தீ நாக்குகள் எழுந்து எங்கெங்கும் அலைபாய்கின்றன.

யார் இந்த நெரூடா?
பிறந்தது 1904; மரித்தது 1973 - இடையில் கவிதைகள் எழுதினார்; அரசுப் பதவிகளில் இருந்தார் என்று இரண்டு வரிகளுக்குள் பாப்லோ நெருடாவை அடக்கிவிட முடியாது.  ஜூலை 12, 1904-ல் சிலி நாட்டில் பிறந்தவர் நெரூடா.  ஜோசப் ஸ்டாலின், பாடிஸ்டா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரை துணிந்து தன் எழுத்துக்களில் புகழ்ந்ததால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வந்தவர்.  1971-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.  இரண்டு வருடங்கள் கழித்து, மிகவும் சந்தேகத்திற்கான முறையில் தன் உயிரை விட நேர்ந்தது, தன் பிரபல்யத்திற்காக கொடுக்க வேண்டிய விலை.

சிறு வயது நெரூடா
ரிகார்டோ எலிசர் நேட்டாலி பசால்டோ - இதுதான் இவரது இயற்பெயர்.  அப்பா ரயில்வேயிலும் அம்மா ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர்.  நெரூடா பிறந்தவுடனேயே அம்மா மரித்துப் போனார்.  பாப்லோ தனது 13 வயதிலேயே கவிதைகள் எழுதி அவைகள் பிரசுரிக்கவும் பட்டன.  தனக்கு 20 வயது ஆன நிலையில், ஏற்கனவே இலக்கியப் பரப்பில் தெரிந்த முகமாக ஆகியிருந்தாலும், செக் நாட்டுக் கவிஞர் ஜான் நெருடாவின் நினைவாக, பாப்லோ நெரூடா என்ற புனைப் பெயரில் எழுதத் துவங்கினார்.

அந்திப் பொழுதின் கதை [Book of Twilight, 1923], தோல்வியின் கீதமும் இருபது பாடல்களும் [Twenty Love Poems and A Song of Despair, 1924] ஆகியவை இவரது ஆரம்ப கால படைப்புக்களில் பிரசித்திப் பெற்றவை.
லத்தீன் அமெரிக்கப் பாரம்பரியப் படி, கவிஞரான இவருக்கு சிலி நாட்டின் தூதராகப் பணி புரிய அழைப்பு வந்தது.  1927ல் துவங்கிய இவரது அயல் நாட்டுப் பணி உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளுவதாக அமைந்தது.  1935ல் நடைபெற்ற ஸ்பானிஷ் குடிமைப் போரின் அட்டூழியங்களை தனது படைப்புக்களின் பின்புலமாக கொண்ட நெருடாவை, இந்தப் போரில் ஈடுபட்டு பலியான தனது நண்பனின் சாவு மிகவும் மோசமாக பாதித்தது.  இதைத் தொடர்ந்த பத்து வருடங்கள், நெரூடாவின் வாழ்வில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். சிலியை விட்டு வெளியேறுவதும் உட்புகுவதுமாகவே இருந்தார்.  சிலி நாட்டுத் தூதுவராக மெக்சிகோவில் சில காலம், சிலி நாடாளுமன்ற உறுப்பினராக கொஞ்சகாலம் என்று பரமபதம் ஆடிவந்த நெரூடா இடது சாரித் தத்துவத்தின் முகமாக மாறிப்போனது இக்கால கட்டத்தில்தான்.

கம்யூனிஸ்ட் கட்சி
சிலி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக 1945ல் தன்னை இணைத்துக் கொண்ட நெரூடா, 1948ல் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக தன் குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது.  இடது சாரி கவிஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விதித்திருந்த நெருக்கடியை அரசு 1951ல் விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, அதே ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினார்.

படைப்பூக்கம்
1952லிருந்து தொடர்ந்த 21 வருடங்கள் பாப்லோவின் படைப்புக்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.  1951ல் இவரது கவிதைகள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்ட போது, அதன் பக்கங்கள் 459.  ஆனால் 1968ல் இவரது கவிதைகள் இரு தொகுப்புகளாக வெளியான போது, மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை 3237.  இந்த இரு தசாப்தங்களின் ஊடாக, இவருக்கு சர்வதேசத்திலிருந்து பரிசுகள் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே இருந்தன.  சர்வதேச அமைதிப் பரிசு [1950], லெனின் அமைதிப் பரிசு, ஸ்டாலின் அமைதிப் பரிசு [1953] மற்றும் இலக்கியத்திற்கான நொபல் பரிசு [1971] ஆகியவை ஒரு சிலவே.

மறைந்து தோன்றிய நெரூடா
நொபல் பரிசு வழங்கப்பட்ட இரண்டு வருடங்கள் கழித்து, செப்டம்பர் 23,1973ந் திகதி மரணமெய்திய நெரூடா, கேன்சர் நோயால் முடிவெய்தினார் என்று அப்பொழுது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டாலும், விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியும் பரவிய வண்ணமே இருந்தது.  1973ல் சிலி நாட்டின் சர்வாதிகாரியான அகஸ்டோ பினோசெட்டின் [Augusto Pinochet] அரசியல் எதிரியை நெரூடா புகழ்ந்து எழுதியதே இதற்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது.

திரை விலகிய மர்மம்
பாப்லோவின் காரோட்டியாக இருந்தவர், 2011ல் சர்வதேச ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், மருத்துவ மனையில் தனக்கு போடப்பட்ட ஊசிக்குப் பிறகு தனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டதாக தன்னிடம் பாப்லோ கூறினார் என்று சொன்னது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  2013ல் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.  விஷம் வைத்து கொல்லப் பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிய மருத்துவர் குழுவின் முடிவு அரசால் ஏற்றுக்கொள்ளப் படாமல், மீண்டும் ஒரு தடய பரிசோதனை நிபுணர் குழு அமைக்கப்பட்டது.  நெரூடாவின் உடலில் வேண்டாத உலோகங்களின் தடயங்கள் இருப்பதாக கூறிய அந்த நிபுணர் குழு, அவரது இறப்பில் நாற்பது வருடங்களாக தொடர்ந்த மர்மத்தை அவிழ்த்தது. நீதிமன்ற உத்தரவுப் படி, இரண்டு வருடங்களுக்கு முன் தோண்டியெடுக்கப்பட்ட பாப்லோ, 2015 ஏப்ரலில் மறு அடக்கம் செய்யப்பட்டார். 

இவர் கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் பாப்லோவை மீட்டெடுத்த வண்ணமே உள்ளனர்.  மகா கவிஞர்கள் மரிப்பதில்லை.

ஆடுகளம்

| Wednesday, September 9, 2015
“விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால்...”
கடந்த இரண்டு நாட்களாக இந்த வலைத் தளத்தில் எனது பதிவுகள், தமிழிலும் ஆங்கிலத்திலும், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தைப் பற்றியும், அது குறித்து முன்னாள் அன்னை தெரசா மகளிர் சர்வகலா சாலை துணைவேந்தர் வே.வசந்தி தேவி அவர்களின் எதிர்வினையாற்றலை தொடர்ந்தும் இருந்தன.  இதன் தொடர்ச்சியாக இன்னுமொரு செய்தி.  இன்று [09-09-2015] Times of India நாளிதழில் Education World India என்ற அரசு சாரா அமைப்பின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை சுட்டிக்காட்டி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. [20 SCHOOLS IN STATE AMONG BEST IN COUNTRY] இந்தியாவின் சிறந்த பள்ளிகள் என்று பல பிரிவுகளில் கல்வி நிறுவனங்களை இந்த நிறுவனம் அடையாளப் படுத்தியுள்ளது.  மேட்டிமை இருபாலர் பள்ளிகள், மேட்டிமை உண்டு உறைவிடப் பள்ளிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கான இரு பாலர் பள்ளிகள், சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என்ற பல பிரிவுகளில் இந்தியாவின் சிறந்த பள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. 

அடையாளம் காட்டப்பட்டுள்ள பள்ளிகள் குறித்தோ, அவைகளின் தகுதிகள் குறித்தோ நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.  Education World India தனது ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை காமாலைக் கண்கள் கொண்டு தயாரித்துள்ளது என்று புறந்தள்ளவும் நமக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.  இந்த அறிக்கை முழுமையும் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

நமது பிரச்சினை என்னவென்றால், வசந்தி தேவி அவர்கள் தொடர்ந்து சொல்லி வருவதைப் போலவே, ஏன் மாநில அரசுப் பள்ளிகள் எதுவுமே இந்த “அடையாளம் காட்டலில்” இடம் பெற முடியவில்லை.  அரசுப் பள்ளிகள் பிரிவில், தமிழகத்தைப் பொறுத்தவரை, இரண்டு பள்ளிகள் இடம் பெற்றுள்ளன.  இரண்டுமே நடுவண் அரசு நடத்தும் கேந்திரீய வித்யாலயாக்கள். Kendriya Vidyalaya – IIT Madras மற்றும் Kendriya Vidyalaya – Tambaram என்ற இரண்டு பள்ளிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.  இந்த இரண்டுமே கூட, சாதாரணன் தனது குழந்தையை சேர்த்துவிட முடியாத பள்ளிகள்.  நடுவண் பள்ளிகளில் பத்து வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணி செய்தவன் என்ற முறையில், அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இரண்டு நடுவண் அரசுப் பள்ளிகளைப் பற்றி கொஞ்சம் உள்விவரங்கள் தெரியும்.  இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை வளாகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயாவில் படிப்பவர்கள் அனைவருமே அந்நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் குழந்தைகள்.  ஒருவிதமான கல்விசார் மேட்டிமைத் தனம் அங்கு எப்பொழுதும் உலவியவாறே இருக்கும்.  மாணவர்களில் பெரும்பாலோனோரின் அறிவுத் திறன் நம்ப முடியாத தரத்தில் இருக்கும்.  கேந்திரீய வித்யாலயா, தாம்பரமும் அப்படியே.  இந்திய விமானப் படை அதிகாரிகள் மற்றும் அலுவலரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.  அங்கு படிக்கும் மாணவர்கள் பல மொழி வித்தகர்கள்.  ஆறு மொழிகளில் LSRW திறன்களை சாதாரணமாகக் கையாளும் குழந்தைகள் அங்கு நூற்றுக் கணக்கில் உண்டு. 
  
இன்னும் சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து ஒரு ஹிந்தி உபாத்தியாயர் விமானப் படை வளாகம் ஒன்றில் இருக்கும் கேந்திரீய வித்யாலயா ஒன்றில் பணியில் சேர்ந்த பொழுது, அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வராது.  மிகவும் பரிதாபமாகக் காட்சியளிப்பார்.  உத்திரப் பிரதேசத்தின் வடக்கு மூலையில் இருந்து வந்தவர்.  தனது முதல் வருடத்தில் மாணவர்களின் கேலிச் சித்திரம் அவர்தான்.  அவர் ஆங்கிலத்தில் தடுமாறுவதைப் போலவே மாணவர்கள் பேசிக் காண்பிப்பார்கள்.  ஆனால் ஒரு மாயம், கண்ணுக்குத் தெரியாமல், நடந்து கொண்டே இருந்தது.  தன்னை கேலி செய்யும் மாணவர்கள்தான் தனக்கு ஆங்கிலம் கற்பித்து வரும் குருக்கள் என்று அறிந்து வைத்திருந்தார் அந்த கோரக்பூர் உபாத்தியாயர்.  அவர் பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில், பள்ளியின் ஆண்டு விழாவில் தான் நெறியாள்கை செய்த ஒரு ஹிந்தி நாடகத்தைப் பற்றி அவர் மேடையில் ஆற்றிய அறிமுக உரை அற்புதமான ஆங்கிலத்தில் இருந்தது.  தாளில் எழுதி படிக்கவில்லை.  இயல்பாக உள்ளுக்குள் இருந்த தன் எண்ணத்தை ஆற்றொழுக்காக அவர் திறந்து காட்டிய பொழுது, மாணவர்கள் பாராட்டி ஆர்ப்பரித்ததை இன்றளவும் என் கண் முன்னே நிறுத்திப் பார்க்க முடிகிறது.  மாணவர்கள் ஆசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் சூழல் உள்ள அரசுப் பள்ளி மட்டும்தான் Education World India பட்டியலில் இடம் பெற முடியும்.  மற்றவை அல்ல.

பின் எதற்காக மற்ற அரசுப் பள்ளிகள்? நான் வெற்றியாளனாக அறிவிக்கப்பட வேண்டுமென்றால், ஒரு போட்டி தேவை.  ஒரு போட்டி நடத்தப்பட வேண்டுமென்றால், சக வீரர்கள் தேவை.  அவர்களை நான் வென்றாக வேண்டுமென்றால், அவர்கள் சோப்ளாங்கிகளாக இருப்பது மிகவும் அவசியம்.  முட்டாள்களைத் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.  அதற்கு மிகுந்த மதிநுட்பம் தேவை.  அதுவும் லட்சக் கணக்கில் முட்டாள்களைத் தயாரிப்பது எண்ணிப் பார்க்கவே மலைப்பைத் தரும் காரியம்.  அதற்கு அத்துணை பேரின் ஆதரவும் தேவை.  இத்தகைய பெரும் கைங்கர்யத்தில் அமைப்போடு கைகொடுக்கும் அனைவருக்கும் தக்க வெகுமதிகள் உண்டு.  சம்பளம், இதர படிகள், பென்ஷன், மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, மதிய உணவு, பஸ் பாஸ் உட்பட வெகுமதிகள் ஏராளம்.  தயாரிப்புப் பட்டறைகளில் முட்டாள்களின் உற்பத்தி உறுதியானதும், மார்ச்சு மாதம் நடக்கும் பந்தயத்தில், ‘மேட்டிமைப் பள்ளிகள்’ தயாரித்து வழங்கும் ‘அறிவுஜீவிகளோடு’ மோதவிடப் படுவார்கள்.  இரண்டு மாதங்களில் போட்டி முடிவுகள் சமதர்ம உணர்வோடு அறிவிக்கப்பட்டு, வீரர்களும் – சோரர்களும் இனம் பிரிக்கப் பட்டு, வீர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகளுக்கு ‘தகுதியானவர்கள்’ என்பதால் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு, சோரர்கள் அடிமாடுகளின் நிலைக்கலன்களுக்கு தள்ளப்படுவார்கள்.  போட்டி நியாயமாக நடந்த மாதிரியே தோற்றம் உண்டு.  ஏனென்றால், தோற்றவர்கள் தங்களை விட சிறந்தவர்களால்தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்ற நம்ப வேண்டும்.  இந்த ஆட்டத்தில் இது மிகவும் முக்கியமானது.

மீண்டும் வே.வசந்தி தேவி அவர்கள் அடிக்கடி சுட்டும் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது:

“விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம், ஜோயி!”.