சூடான காப்பி

| Thursday, October 23, 2014


பத்திரிக்கைகளில் நம்மைக்  கவரும் புதினமற்ற கட்டுரைகள் நம் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன என்றாலும், அவைகளில் பெரும்பாலானவை ஆசிரியரின் உணர்வுகளின் தொகுப்பாகவே இருக்கின்றன.  அவர் அதில் ஒரு விவாதமோ, விவரிப்போ அல்லது ஒன்றை நினைவு கூறவோ செய்கிறார்.  பெரும்பாலான கட்டுரைகளில் ஒரு சமூக / அரசியல் விமரிசனம் உள்ளது.  முக்கியமாக நடப்பு அரசியலைப் பற்றிச் சொல்வதற்கு அனைவருக்குமே எதோ ஒன்று உள்ளது.  ஆனால் இவைகள் கருத்தாகவோ, உள்ளக் குமுறலாகவோ இருக்கின்றனவேயொழிய, தரவுகளின் அடிப்படையில் பல பரிமாணங்களுடன் சார்பற்ற சொல்லாடலுடன் அமைவதில்லை.  தரவுகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கட்டுரைகளில்கூட, அவைகள் ‘முதல் நிலை’ தரவுகளாக அமைவதில்லை.  “இந்த கணக்கெடுப்பின் படி”, “அண்மையில் UN வெளியிட்டுள்ள தகவலின் படி”, “அமெரிக்காவில் இது குறித்து நடந்த சமீப சர்வேயின்படி” என்றளவாகத்தான் தரவுகளின் லட்சணம் அமைந்துள்ளன.  இவ்வாறானவை விவாதங்களுக்கு உதவலாமே தவிர, தர்க்கவாதத்திற்கு பின்புலமாக இருக்கவொண்ணாதவை.

தமிழக சர்வகலாசாலைகளில் சமர்ப்பிக்கப்பட்டு வரும் ஆய்வேடுகளில் அறுதிப் பெரும்பாலானவை தரவுகளின் அடிப்படையில் எழுதப்படுவதாக நம்பினோம் என்றாலுங்கூட, அவைகள் விவாதமோ தர்க்கமோ செய்வதில்லை.  வெறும் வறட்டுக் குரலாக, கிணற்றிலிருந்து மேலெழும்பாத முனகலாக முடிந்து விடுகின்றன. தரவுகளின் அடிப்படையில், விவாதமொன்றை தீவிரமாக மேலெடுத்துச் செல்லும், தர்க்கத்தில் தோய்ந்த சொல்லாடலோடு, கட்டுரைகள் தமிழில் மிகவும் அரிது.  பழ.அதியமான் அவர்களுடைய “சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” என்ற நூல் உடனடியாக நினைவுக்கு வருகிறது.  மிகுந்த ஆய்வு நோக்கோடு எழுதப்பட்டிருக்கும் நூல்.  தரவுகளே விவாதத்திற்கு அடிப்படை.  தரவுகளை சேகரிப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு பிரயாசைப்பட்டிருப்பார் என்பதை நூலைப் படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.  கடந்து போன நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் தோண்டியெடுத்து, அவைகளை ஆழமாகப் பயின்று, தன்னுடைய விவாதத்திற்கான ஆதரவாக தரவுகளை தேதி வாரியாக அடுக்கி, சரியான இடங்களில் அவைகளை தக்க விதத்தில் மேற்கோள் காட்டி, “சமைக்கப்பட்ட” ஒரு வரலாற்றை கட்டுடைப்பது என்பது, ஒரு தனி மனிதனின் ஆகப்பெரிய சாதனை.  ஆயாசம் ஏற்படுத்தும் காலதாமதங்களை ஆய்வு முனைப்புதான் எதிர்கொள்ள முடியும்.  சில அடிப்படைத் தரவுகள் இருப்பதை நம்புவதற்கான சூழலும், அவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக நம்பினாலும், அவைகள் கைகளில் வந்து சேர பெரும் கால தாமதம் ஏற்படலாம்.  ஒரு தனி மனிதனின் சக்திக்கு மீறிய பொருட்செலவு ஏற்படக்கூடும்.  பழம்பெரும் நூலகங்களின் உறைந்து நிற்கும் பேரடுக்கு அலமாரிகள் ஆய்வாளரை ஏமாற்றக்கூடும்.  மறைக்கப்பட்ட உண்மைகளை உலகின் முன்பு திறந்து காட்ட வேண்டும், ‘சொல்லப்பட்ட’ வரலாறைத் தவிர்த்த ‘நடந்த’ வரலாறை பொதுக்கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற உந்துதல் மட்டும் ஆய்வாளரைச் செலுத்துகிறது.
 
இத்தகைய கட்டுரைகள் புனைவிலக்கியம் அல்ல.  புனைவின் தன்மைகளை அறவே ஒதுக்க விழையும் ஒரு ஆய்வாளனின் தர்க்கம் இது.  மிகுந்த உழைப்புடன் கட்டப்படும் தர்க்கம். இதைப் போன்ற கட்டுரைகள் தாம் எழுதுவதில்லை என்றும், இவைப் போன்றவை தமக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவதாகவும் த.ஜெயகாந்தன் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது.  அவர் சொல்வது உண்மைதான்.  தரவுகளின் அடிப்படையில் ஒரு விவாதத்தைக் கட்டுவதென்பது, கட்டுமானப் பொருட்கள் அரிதாக கிடைக்கும் ஒரு இடத்தில், பெரிய மாளிகையை கட்ட ஆசைப்படுவது போன்றது.  விலக்கான முயற்சியும் ஊக்கமும் தேவைப்படும் விடயம் இது. 

“அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்” என்ற நூலை அண்மையில் படித்ததின் தொடர்பாகவே மேற்கண்டவையை சொல்ல வேண்டி வந்தது.  ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் இந்த நூலை மிகுந்த சிரத்தையோடும், முதல்நிலை தரவுகளை வேண்டிய இடங்களிலெல்லாம் பொருத்தியும், இவைகள் இணைந்த பெரிய விவாதங்களை சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து செய்திருக்கிறார்.  மொத்தம் ஒன்பது கட்டுரைகள்.  பாரதியைப் பற்றி மூன்று.  வ.உ.சி., புதுமைப்பித்தன் ஆகியோரைப் பற்றி தலா ஒரு கட்டுரையும், தமிழில் கலைச் சொல்லாக்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையும், கடைசிக் கட்டுரையாக தமிழிலே பகடி இலக்கிய வரலாறையும் விவாதிக்கும் இந்தப் புத்தகத்தில், முதல் இரண்டு கட்டுரைகள் சூடானதாகவும் சுவையானதாகவும் அமைந்துள்ளன.  தமிழக மக்கள் பானகம், நீராகாரம், கஞ்சி, கூழ் மற்றும் இன்ன பிற பெயர்களால் தங்களுடைய பானங்களை உருவாக்கி வைத்திருந்தார்கள்.  கொஞ்சம் தைரியமானவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளிப்புறம் உள்ள நிலவெளிகளில் பனை மற்றும் தென்னை மரங்களிடம் தஞ்சம் புகுவர்.  இது பெரும்பாலும் ரகசியமான செயற்பாடே.  அமுக்கமாக இந்த விடயத்தை வைக்கத் தெரியாதவன் ‘பொறுக்கி’ என்ற புகழ் பெற்றான்.  ஊர் ஏசி ஒதுக்கும். இந்த நிலையில் தமிழக பண்பாட்டு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மேற்கத்திய சலாச்சாரத்தின் ஆகப்பெரிய அடையாளமான காப்பி தமிழர்களின் நாக்கில் புது ருசி ஒன்றைக் காட்டி மயக்கியது.  காப்பிக்குத் தப்பியவர்கள் கணக்கெடுப்பு ஒன்றை விரைவாக நடத்தி முடித்து விடலாம் என்ற நிலையிலே அதன் அடிமைகளின் எண்ணிக்கை ஏகபோகமாக அதிகரித்துக் கொண்டே வந்தது. 

காப்பி காலனி ஆதிக்கத்தின் தீமையா நல்லதா என்பதான பண்பாட்டு எதிர்வினைகள் ரொம்பவும் ருசிகரமானவை.   திருநெல்வேலி கெசட்டிலிருந்து   தரவொன்றை மேற்கோள் காட்டும் ஆ.இரா.வேங்கடாசலபதி, 1917 வாக்கிலேயே ஏழைக் குடியானவர்கள் மத்தியிலும் கஞ்சிக்குப் பதிலாக காப்பி நுழைந்து விட்டதை குறிப்பிடுகிறார்.  மூத்த தலைமுறையினர் முகஞ்சுளிக்கும் வண்ணம் காப்பி பழக்கம் இருந்தது என்று அந்த கெசட்டு குறிப்பிடுகிறது.  நீராகாரம் இங்கே நீடிக்கும் சீதோசன நிலைக்கும், தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் பணித்தன்மைகளுக்கும் ஏகமாக பொருந்தி வந்திருக்கிறது என்ற நிலையிலும் கூட, அதன் மவுசு காப்பிக்கு முன்னால் காணாமலேயே போய்விட்டது.  நீராகாரம் ஒரு ஆரோக்கிய பானம்; காப்பியோ உற்சாக பானம்.  அந்நாளைய விளம்பரம் ஒன்று “களைப்பு நீக்கும் ஜீவசக்தி காப்பி; ஊக்கமும் உற்சாகமும் தருவது காப்பி” என்று அன்றைய தமிழ் நடுத்தர வர்க்கத்தின் கோட்டைகளை உடைத்து உள்ளே புகுந்து நாளடைவில் அவர்களின் பண்பாட்டுச் சின்னமாகவே மாறிவிட்டது.  காப்பியின் படையெடுப்பு இப்படியாக பண்பாட்டுக் கோட்டைகளை தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பண்பாட்டுக் காவலர்களோ மதுவை விடவும் காப்பி தீமை பயப்பது என்று வாதாடிக் கொண்டிருந்தனர்.  நவசக்தி ‘காப்பி குடிப்பது நாட்டில் சிசு மரணத்தையும், நீரழிவு நோயையும் மற்றும் இன்ன பிற கேவலமான நோய்களையும் நமது சகோதர சகோதரிகளுக்கு கொடுத்து வருவதாக’ கவலைப்பட்டது.  காப்பி குடிப்பதை தமிழர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று உணர்ந்த ராமஸ்வாமி ஐயங்கார் ‘நிறுத்த முடியாவிட்டால், குறைக்கவாவது செய்யுங்கள்’ என்று கெஞ்சினார்.  காந்தி சீடர்கள் காப்பிக்கு ‘குட்டிக் கள்’ என்ற பெயர் சூட்டினர்.  ஸ்த்ரீதர்மா ‘பெண்கள் காப்பிக்கு அடிமையாகக் கூடாது’ என்று அறிவுறித்தியது.  
   
‘பிராமண பெண்களிடம் காப்பி குடிப்பதான மேற்கத்திய தீய பழக்கம் பெருகி அடிமையாகி விட்டார்கள்’ என்று தேசியத் தலைவர் காந்தியிடம் காங்கிரஸ் சார்பான நிருபர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார்.  லோகோபகாரி, தனது 1928 சூன் இதழில் ‘காப்பி குடிப்பதனால்தான் வாலிப ஸ்திரீகள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போனதும்,  புட்டிப்பால் கொடுக்க வேண்டி வந்ததும் ஆன நிலை’ என்று வேதனைப்பட்டது. ‘கஞ்சியும் பழையதும் நீச்சுத் தண்ணியும் இல்லாது ஒழிந்தன.’  மறைமலை அடிகள் ‘காப்பி குடிக்கும் பழக்கம் கல்வி, செல்வம், நாகரீகம் முதலியவற்றில் முன்னேறியிருக்கும் மக்களிடம் அதிகமாக’ இருப்பதாக கவலைப்பட்டார்.

காப்பிக்கு சாதீய படி நிலைகளோடு தொடர்பு ஏற்பட்டதும் சுவாராஸ்யமே. ஹிந்து பிராமண மற்றும் பிற உயர் குடிகள் காபியை தங்கள் பானமாக்கிக் கொள்ள, பாட்டாளி மக்களும், ஏழைகளும், சாதிப் படி நிலைகளில் கீழே இருப்போரும் தேநீரை தங்கள் பானமாக்கிக் கொண்டனர்.  உழைக்கும் வர்க்கத்தோடு தேநீரும், நடுத்தர வர்க்கத்தோடு காப்பியும் ஒன்றிப் போயின.  ‘நீ என்னடா, பார்ப்பான் கடையில் டீ குடிக்கிறவனாக இருக்கிறாயே!’ என்று அடிக்கடி புதுமைப்பித்தன் குறைப்பட்டுக் கொண்டதை கு.அழகிரிசாமி நினைவு கூறுகிறார்.  அய்யர் கடைக்கு காப்பி என்றால், தேநீர் குடிக்க விரும்புவன் எங்குதான் போவது?  கவலைப்பட வேண்டாம்.  சாயபும் நாயரும் தங்கள் கடைகளில் சூடாக தேநீரைப் பரிமாறுவார்கள். 
 
காப்பியின் ஆதிக்கம் பண்பாட்டுத் தளத்திலிருந்து இலக்கியத்திற்குள்ளும் நகர்கிறது.  புதுமைப்பித்தனின் கந்தசாமிப்பிள்ளை கடவுளை ஒரு காப்பி ஓட்டலில்தான் சந்திக்கிறார்.  கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், சிட்டி, ஏ.கே.செட்டியார், ராஜாஜி, சாமிநாத அய்யர், கு.அழகிரிசாமி போன்றோர் காப்பிக்கு தங்களுடைய படைப்புலகத்தில் கணிசமான இடம் கொடுத்து பெருமைப் படுத்தியிருக்கின்றனர். வே.முத்துசாமி அய்யர் காப்பியை கணிகையோடு ஒப்பிட்டு சிலேடை வெண்பாக்களை எழுதியுள்ளார்.  எஸ்.வி.வி. தனது பல நகைச்சுவைக் கட்டுரைகளில் காப்பிக்கு பாரியமான பங்கொன்றை வழங்கியுள்ளார். 

சமூகத் தளத்தில் காப்பி பிரபலமான சினிமா நடிகர்களோடு ஒப்பிடக் கூடிய அளவிலேதான் இருந்தது.  பிராமண ஓட்டல்கள் காப்பி ஓட்டல்கள் என்றே அழைக்கப்பட்டன.  இன்னும் சொல்லப்போனால், தனது அக்டோபர் 1926 இதழில் நவசக்தி காப்பி ஓட்டலை ‘பிராமணரால் ஏற்படுத்தப் பட்ட பகிரங்க கள்ளுக்கடை’ என்றே குறிப்பிடுகிறது.  காப்பி ஓட்டல் என்பதும் பிராமணர் ஓட்டல் என்பதும் ஒன்றுதான்.  பிராமண எதிர்ப்பாளர்களில் ஒருவரான பாரதிதாசன் பிராமணர்களை ‘காப்பிக்கடை முண்டங்கள்’ என்று குறிப்பிடுகிறார்.  இந்த வகையான ஓட்டல்களில் வேலை செய்யும் பிராமணர்கள் ‘காலையில் மூஞ்சி கழுவுவதில்லை; பல் விளக்குவது நடுப்பகலில்தான்.  காப்பியை வாயில் கவ்விக்கொண்டு குடிப்பார்கள். நாற்காலில் சிந்தியிருக்கும் எச்சில் காப்பியை தோளில் இருக்கும் ஒரு கரிப்பிடித்த துண்டை எடுத்து அழுத்தமாக தேய்த்துவிட்டு மீண்டும் தோளில் போட்டுக்கொள்வது வழக்கம்’ என்று அஞ்சாநெஞ்சம் தனது இதழொன்றில் எழுதுகிறது. 

இந்தக் கட்டுரையில் மொத்தம் 76 அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டு, தரவுகள் விவாதத்தின் சீரான போக்கில் அடுக்கப்பட்டு, காப்பி என்பது தமிழ்நாட்டு பண்பாட்டு வரலாற்றின் முக்கிய கூறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதை ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணப்படுத்தியிருக்கும் விதம், நம்மைச் சுற்றியிருக்கும் சிறிய விடயங்களில் கூட பெரிய கலாச்சார பண்பாட்டு அரசியல் நுண்மைகள் புதைந்திருக்கலாம் என்ற உண்மையை நமக்கு அறிவிப்பதாக உள்ளது.  எனக்குத் தெரிந்து காப்பியைப் பற்றி இப்படி ஒரு வீச்சான கட்டுரை தமிழில் எழுதப்பட்டதாக தெரியவில்லை.  காப்பி பல்வேறு தடைகளை உடைத்துக்கொண்டும், தனது ஆளுமையின் தடயங்களை சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் பதித்துக்கொண்டும் நகர்ந்து வந்திருப்பது, காலை சிற்றுண்டியோடு குடிக்கும் காப்பியோடு பில்லை வேகமாக கல்லாவில் எறிந்துவிட்டு நகரும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 
   
இந்தத் தொகுப்பின் இரண்டாவது கட்டுரையான “புகையிலை: பயன்பாடும் பண்பாடும்” முன்னதைப் போலவே ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையே.  இதன் முதல் பகுதி புகையிலை இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்த கதையை தரவுகளின் அடிப்படையில் சொல்கிறது.  புகையிலையின் பணப்பயிர் தன்மை அதன் பண்பாட்டு உட்செரிப்பு நிகழ்வதற்கு பெரிய ஆதாரமாய் இருந்திருக்கிறது.  கர்நாடகத்தின் கீழ்ப்பகுதி, மேல்பகுதி மக்கள் வங்காள நாட்டவரை விட அதிகமாக மூக்குப்பொடியை பயன்படுத்தினார்கள் என்பதாக புக்கானன் தனது 1807ம் ஆண்டைய பயணக்குறிப்பில் தெரிவிக்கிறார்.  இலக்கிய நோக்கில், காப்பிக்குக் கிடைக்காத பெருமை ஒன்று புகையிலைக்கு வந்து சேர்ந்தது.  ‘புகையிலை விடு தூது’ என்ற சிற்றிலக்கியம் புகையிலையின் பெருமையைப் பாடி 58 கண்ணிகள் கொண்டதாக சீனிச் சர்க்கரை புலவரால் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டது.  இதில் ‘காரமும் காயக் கடுமையும் மிக்க’ புகையிலையின் பண்புகள் பெருமையாகச் சொல்லப்படுகின்றன.  மொத்தம் 47 அடிக்குறிப்புகள் கொண்டு இக்கட்டுரை, தமிழரின் கடந்த இரண்டு நூற்றாண்டில் வளர்ந்து வரும் சமூக, பண்பாடு மற்றும் கலாச்சார கூறுகளை விசாரிக்கிறது.   கட்டுரையில் ஒழுக்கவியல் நோக்கு தென்படாதது இதன் தனிச்சிறப்பு.  புகையிலைத் தொடர்பான பல்வேறு மனவியல் சிக்கல்களும், உடலியல் ரீதியான ரோகங்களும் பெருமளவில் வியாபித்திருப்பினும், புகையிலைப் பொருட்களின் பாதிப்பு சமூகத்தின் உள்கட்டமைப்பிலிருந்து பிரிக்க முடியாததாக ஆகிப்போனது நமது துர்லபம்தான். இந்த அதிர்ஷ்டமின்மையின் வேர்களை, ஒழுக்கவியல் தவிர்த்த, வரலாற்று நோக்கோடு ஆராய்ந்து நாம் அறிய வந்திருக்கவே முடியாத பல உண்மைகளை இக்கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

அடுத்த மூன்று கட்டுரைகளும் பாரதியின் படைப்புலகத்தையும் அவரின் படைப்பாளி என்ற நிலையில் அவலம் சூழ்ந்த வாழ்வையும் தரவுகளுடன் விவாதிக்கிறது.  எழுத்தை நம்பி ஒருவன் எப்போதும் தமிழ்நாட்டில் வாழ முடிந்ததில்லை.  புரவலர்களோ சமூகமோ அவனது எழுத்திற்கு சன்மானமும் விலையும் தந்தாலொழிய, அவன் நசிந்து போகிறான்.  ஆண்மையின் கம்பீரத்திற்கு அடையாளமாக சமூகத்தின் பொதுவெளிகளில் காண்பிக்கப்பட்டிருக்கும் தலைப்பாகையுடன் வளைந்த முரட்டு மீசை கொண்ட பாரதியின் முகம், நாலணா ஜமீன்களிடமும், குட்டி மிராசுகளிடமும் குனிந்து கெஞ்சியிருப்பது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.  புரவலர்களும் மற்றோரும் தமது எழுத்து வாழ்க்கைக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை பாழாய்ப் போனதை புரிந்து கொண்ட பாரதி மக்களிடம் வருகிறான்.  தம்மிடம் மிகவும் உபயோகமான நூற்கள் ஏராளமான எண்ணிக்கையில் எழுதப்பட்டு, அச்சுக்கு காத்திருப்பதாகவும், இவைகளை நடுத்தர வர்க்கம் என்றழைக்கப்படும் வணிகர்கள், நிலக்கிழார்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறு வியாபாரிகள், வழக்குரைஞர்கள், எழுத்தர்கள் ஆகியோர் தம்முடைய நூற்களை வாங்கி படித்துப் பயன்பெற்று தம்மையும் ஆதரிக்க வேண்டுமாய் தனது கடைசி ஆங்கில கட்டுரையில் எழுதுகிறான் பாரதி.  இலக்கியம் புரவலர்களை மட்டுமே நம்பி அதுவரை இயங்கியது.  ஆனால், காலப்போக்கில் சமூக அரசியல் மாற்றங்கள் இந்த புரவலர்களையும் பலவீனப் படுத்திய நிலையில், அத்தகையோர் மேற்கொண்டு கவிஞர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதற்கும் பாரதி ஒரு விடையை கண்டுபிடிக்கிறான்.  பிரசுரத் தொழிலை வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் நிறைய பேர் வர வேண்டும் என்றும், இவர்கள் எழுதப்பட்ட பல புத்தகங்களை படித்தறிந்து அவைகள் நன்றாக விலையாகுமா ஆகாதா என்று யூகித்தறிந்து, தம்முடைய கைம்முதல் போட்டு பிரசுரிக்க வேண்டும்.  நன்றாக பிரசுர வியாபாரம் நடந்தால் ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும்.  நிறைய லாபமும் உண்டாகும் என்று கணக்குப் போட்ட பாரதியின் பெருந்திட்டம் தோல்வியையே தழுவியது.  இத்தகைய திட்டம் தீட்டிய ஒரு வருடத்திற்குள் இறந்தும் போகிறான் பாரதி.  புரவலரும் கிடைக்கவில்லை.  பிரசுகரும் அமையவில்லை.  படிக்கும் ஜனங்களும் வாய்க்கவில்லை. 

அதற்கடுத்த கட்டுரையில் பாரதியின் பத்திரிகை பணி அவன் கருத்துப் படங்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் தொடர்பாக விவாதிக்கப் படுகிறது.  கருத்துப் படங்களுக்கு பெரிய வாசக விருப்பம் உண்டு என்பதை பாரதி நன்கு உணர்ந்திருக்கிறான்.  பாரதியின் வாழ்க்கை முழுவதையும் பல்வேறு கோணங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தரவுகளின் அடிப்படையில் ஆராய வரும் ஒருவன் பாரதியின் மேதைமை விதிவிலக்கானது என்பதையும், மனித வரலாறு மிகவும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட ஞானவான்களை பிரசவிக்கிறது என்பதையும் வாசகபூர்வமாகவே உணர முடியும்.  ஆனால் சாதாரணர்களால் நிரப்பப்பட்டிருக்கும் இந்தச் சமூகம் மேதைகளை கல்லால் அடித்தோ, விஷம் கொடுத்தோ, ஆணி அடித்தோ, சுட்டுக் கொன்றோ விடுகிறது.  இவை எல்லாவற்றுக்கும் ஒரு அசாதாரணன் தப்புவானேயானால், அவனைப் பட்டினி போட்டு, சித்தம் கலக்கி, யானைக்கு விளையாட்டுப் பொருளாக கொடுத்து விடுகிறது. 

இந்த நூலின் கடைசிக் கட்டுரை அலாதியானது.  தமிழகத்தில் பகடி உண்டு; பகடி இலக்கியம் மிகவும் குறைவு.  முதல்நூல் ஒன்றை நையாண்டி செய்து அதைப்போலவே எழுதப்படுவதுதான் பகடி இலக்கியம் என்று ஆ.இரா.வேங்கடாசலபதி வரையறுக்கிறார்.  அலெக்சாண்டர் போப் எழுதிய ‘ரேப் ஆப் தி லாக்’ என்ற பகடி காவியத்தைப் போல தமிழில் இதுவரை ஒன்றே ஒன்றுதான் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லும் சலபதி, த.கோவேந்தனின் ‘புதுநானூறு’ என்ற பகடிப் பிரதியை குறிப்பிடுகிறார்.  திராவிட இயக்கம் மிகப்பெரிய நம்பிக்கைகளை தன்னோடு கொண்டுவந்து குறுகிய காலத்திற்குள்ளாகவே தன்னுடைய மையமான தத்துவங்களையெல்லாம் ஓட்டு அரசியலுக்கு விலையாகத் தந்து யாரை எதிர்த்து அந்த இயக்கம் முன்னெடுக்கப் பட்டதோ அவர்களை விட ஆபத்தானதாக அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைத் தலைவர்களால் உருச்சிதைக்கப் பட்டதை காணச் சகிக்காமல் தனது வேதனையை அங்கதமாக்கி சங்க இலக்கியப் பிரதியான புறநானூற்றின் பகடிப் பிரதியாக ‘புதுநானூற்றை’ இயற்றிக் காண்பிக்கிறார் த.கோவேந்தன். ‘புதுநானூறு’ – 54ம் பாடல் இந்த வீழ்ச்சியை தெளிவாய்ப் படம் பிடிக்கிறது.  தேர்தலில் தோற்றுப் போன, அதாவது திராவிட இயக்க பாஷையில் சொல்வதென்றால், வெற்றி வாய்ப்பை சற்றே இழந்த குறுந்தலைவன் ஒருவனுக்கு ஆறுதல் கூறும் முகத்தான் இப்பாடல் இயற்றப் பெற்று திராவிட அரசியல் மணத்தை பரப்புகிறது. 

கட்சித் தொண்டரே! கட்சித் தொண்டரே!
தேர்தலில் தோற்றீர் அல்லீர்; தேர்தலில்
வெற்றி வாய்ப்பினைச் சற்றே இழந்தீர்
ஆட்சி நம் கையில், வீழ்ச்சி இல்லை;
மேலவையில் உமைச் சால அமர்த்துவோம்,
வாரியம் அமைத்து வீற்றிருக்கச் செய்குவோம்,
அயல் மாநிலத்தில் ஆளுநர் ஆக்குவோம்,
வெளிநாட்டினிலே தூதராய் அனுப்புவோம். [புதுநானூறு 54]

ஒளவையின் ஆத்திச் சூடிக்கு இணையான பகடி இலக்கியமாக ம.இலெ.தங்கப்பாவின் ‘அரசியல் ஆத்திச்சூடி’ இப்படியாக நமக்கு சொல்கிறது.
அடியாள் திரட்டு.
ஆட்சியை குறிவை.
இழிமொழிக் கஞ்சேல்.
ஈயென இழித்துநில்.
உண்மை குழப்பு.
ஊழல் பழகு.
எச்சிலும் இகழேல்.
ஏசினும் கலங்கேல்.
ஐயர்போல் கரவுகொள்.
ஒழுக்கம் இடைஞ்சல்.
ஓநாய்போல் அழு. 
ஒளவையா, யார் அது?

பகடி இலக்கியத்தைப் பற்றிய இந்தக் கட்டுரை 24 அடிக்குறிப்புகள் கொண்டு மிகச் சரியான மேற்கோள்களுடன் தமது விவாதத்தைக் கட்டமைக்கிறது.

தரவுகளின் அடிப்படையில் எழுதப்படும் கட்டுரைகள் தட்டையாக இருப்பது வழக்கம்.  விறுவிறுப்பு இராது.  விவாதம் ஜாக்கிரதையாக தவிர்க்கப்பட்டிருக்கும்.  ஒரு ஸ்டுடியோ புகைப்படம் போல இருப்பதை அப்படியே பதிவு செய்துவிட்டு நகரும்.  எழுத்துக்காரனின் எண்ணம் தெரியாது.  ஆனால், இவை எல்லாவற்றையும் இந்த நூலில் சலபதி அவர்கள் எளிதாக தாண்டி வந்திருக்கிறார்.  இவருக்கு அரசியல் உண்டு.  ஒவ்வொரு கட்டுரையும் இவரது அரசியலுக்கு பலம் சேர்க்கவே எழுதப்பட்டிருக்கிறது.  யாருக்குத்தான் அரசியல் இல்லை?  நம்முடைய அரசியல் வெறும் கருத்து மோதல்களாகவும், கண்டனக் கூச்சல்களாகவும் எழுந்து விழும் நிலையில், சலபதி தனது அரசியலை பண்பாட்டின் கால ஓட்டத்தில் தனது கருத்துக்களை ஒட்டி தரவுகளை மிகுந்த உழைப்பின்பாற்பட்டு தெரிந்தெடுத்து ஆராவாரம் இல்லாமல் தீர்க்கமாக, முதல்நிலை தரவுகளின் குரலாகவே வாதிக்க முற்படுகிறார். விவாதத்தில் உண்மையான அக்கறை உள்ளவன் மட்டும் செய்கிற வேலை இது.  அதில் பாதியேனும் இருப்பவன் சலபதியின் கட்டுரைகளை கவனமாக உள்வாங்கி, சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து தனது அரசியல் நிலைப்பாட்டை அவரின் அரசியலோடு ஆமோதித்தோ, விவாதித்தோ செதுக்கிக் கொள்வான்.

[காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், உரூபா 175/-]