கவிஞர் வரிசை: எலிசபெத் பாரெட் பிரௌனிங்

| Monday, October 14, 2013
கவிஞர் வரிசை 1: ELIZABETH BARRET BROWNING [எலிசபெத் பாரெட் பிரௌனிங்] -
இங்கிலாந்தின் புகழ் பெற்ற பெண் கவிஞர்களில் ஒருவர். விக்டோரியன் காலத்தியவர். மிகவும் பிரபலமாக தன்னுடைய நாட்டிலும் அமெரிக்காவிலும் அறியப்பட்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையுலகம் இவரது கவிதைகளால் நிச்சயமாக வளம் பெற்றிருக்கிறது. குழந்தை தொழிலாளர், அடிமைகள் மற்றும் பெண்ணீய பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்தவர். ஆஸ்திரியாவுக்கும் இத்தாலிக்கும் இடையேயான அரசியல் முறுகல் நிலைபற்றி தனது கருத்துக்களை தைரியமாக முன்வைத்தவர். 'Sonnets from the Portuguese' மற்றும் 'Aurora Leigh' போன்ற இவரது கவிதைகள் விசேஷமானவை. பிறப்பு 1806 மார்ச்சு 6ல்.

இவரது கவிதைகளை படித்து ஆச்சர்யமுற்ற அந்நாளைய பிரபல கவி Robert Browning இவருக்கு நீண்ட கடிதமொன்றை எழுதியதில் ஆரம்பித்த நட்பு காதலாகி கல்யாணத்தில் நிறைவுற்றது. தந்தையின் எதிர்ப்பால், இவர் Robert Browning-ஐ
ரகசியமாகத்தான் மணமுடிக்க முடிந்தது. மணம் முடித்த இடம் St.Maryle Bone Church. திருமணத்திற்கு பிறகு நிரந்தரமாக இத்தாலியில் குடியேறிய இவர்களுக்கு ஒரே மகன் - Robert Widermann Barret Browning. செல்லமாக மகனை 'Pen' என்று அழைத்தனர்.

தனது 55-வது வயதில் நுரையீரல் நோயால் அவதியுற்ற இக்கவிஞர், 1860-ம் ஆண்டு தனது கடைசிக் கவிதைத் தொகுப்பான "Poems before Congress"-ஐ வெளியிட்டார். இது அர்ப்பணிக்கப்பட்டது தனது கணவருக்கு. ஜூன் 29, 1861-ம் திகதி மரித்துப்போன இவரை ஆங்கிலக் கவியுலகு இன்றைக்கும் எளிதாக நினைவுகூரக் கூடிய வண்ணம் இவரது கவிக்கொடை சிறப்பு வாய்ந்தது.