சில்க் ஸ்மிதா

| Saturday, December 31, 2016
காந்திக்கு ஒரு கடிதம்
 
மகாத்மா காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களின் முதல் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது பற்றி ராமச்சந்திர குஹா ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரை சாரி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைய [21-12-2016] தமிழ் தி ஹிந்துவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. காந்தி மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் காந்திக்கு எழுதிய கடிதங்கள் காந்தியின் ஆளுமை சம காலத்தில் எப்படி சமூகத்தால் புரிந்துகொள்ளப் பட்டிருந்தது என்பதை அறிய உதவி செய்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்கு முன்னமேயே காந்தி அவர்களுக்கு இந்தியாவில் செய்யக் காத்துக் கொண்டிருந்த பணிகள் பற்றி மற்றவர்களின் கடிதங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

அந்த ஆண்டுகளில் அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களில் கணிசமானவை தென்னாப்பிரிக்க தமிழர்களால் என்பதும், அந்தக் கடிதங்கள் காந்தியை இந்திய அரசியல் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை செய்வதை விடவும் இந்தியர்கள் வாழும் சமூகங்களில், இந்தியா உட்பட, நிலவிவரும் சாதீயக் கொடுமைகளைக் களைய முயற்சிக்குமாறு வேண்டியிருப்பது நமது முதன்மையான கவனத்தை வேண்டுவதாகும். அதே காலகட்டத்தில், பெரியாரின் உரைகள் - எழுத்துக்கள் முக்கியமாக இதையே வலியுறுத்துகின்றன. இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இந்திய தேசிய காங்கிரசைப் பற்றிய ஒடுக்கப்பட்ட சாதியினரின் மதிப்பீடுகள் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே இருந்தன. அந்த மதிப்பீடுகளை நிரூபிக்க காங்கிரசும் தவறவில்லை. அன்றைய சமூக நிலையை அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் எழுத்துக்களின் மூலம் அறிய நேரிடும் ஒருவர், இந்திய காங்கிரஸ் தலையிலான அரசியல் விடுதலைப் போராட்டத்தை விட, அன்று நிலவி வந்த சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கப்பட வேண்டும் என்று உணர்வது இயல்பானதே. காந்தியின் முழு உழைப்பும் சாதீயக் கொடுமைகளைக் களைவது என்பதாக திரும்பியிருக்குமானால், இந்திய வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கலாம். உண்மையில், சாதீய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக இருப்பது தற்செயலானது அல்ல. 

பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களின் இருப்பு, இவைகளினூடே கண்ணுறும் வேளையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு காத்திரமாக பயன்பட்டிருக்கிறது! 

பெரியார் எங்களின் பெரும் செல்வம்! எமது எல்லைச்சாமி! 
----

ஜெயதீபா




மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருமகள் (அண்ணன் மகளை அப்படி அழைப்பது வழக்கம்தானே) தீபா விகடன் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி வாட்ஸ்அப்-பில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நான் பார்த்தது முழு பேட்டியா என்று தெரியவில்லை. எட்டு நிமிடங்கள் ஓடும் இந்த நேர்காணலில் தீபா அவர்களின் ஆளுமை தெளிவாக வெளிப்படுகிறது. முதலில், பேசும்போது குரலிலோ கருத்திலோ குழப்பம் இல்லை. கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. வேகமாக பேசும் பொழுது தன்னை மீறி வந்துவிடும் வார்த்தைகள் இவரிடம் எதுவும் இல்லை. அடுத்து, தன்னை அவமதித்தவர்கள் யார் என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றாலும் அவர்களைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகள் எதுவும் இல்லை. தன்னுடைய சகோதரனை அவர்கள் அழைத்து ஈமக் காரியங்கள் செய்திருப்பினும் தன்னை எதுவும் அழைக்காதது பற்றி சொல்லும் பொழுது, தான் எதிர்த்து பேசும் குணம் கொண்டவள் என்பதால் அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்று சொல்கிறார். இதை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால், ஒருவேளை யாராவது அதிமுகவில் சசிகலாவிற்கு எதிராக அணி ஒன்றைத் திரட்டுவார்களேயானால், தன்னுடைய சகோதரன் அத்தகைய அணிக்கு முகமாக இருக்கத் தகுதி கொண்டவரல்ல என்பதையும், அப்படியான அணிக்கு முகமாக மட்டுமல்ல மூளையாகவும் இருக்க தானே தகுதி கொண்டவர் என்பதையும் குறிப்புணர்த்துகிறார். காணக் கிடைத்த நேர்காணல் துண்டின் இறுதிப் பகுதியில், "நீங்கள் அரசியல் பிரவேசம் செய்வீர்களா?" என்பதான கேள்விக்கு "அனைவரும் விரும்பினால் நான் அரசியலுக்கு வரக்கூடும்" என்று அமைதியாக சொல்கிறார்.


வாரிசு அரசியல் இந்தியாவிற்குப் பழக்கமானது மட்டுமல்ல, வழக்கமானதும்தான் என்ற நிலையில், சசிகலாவை விட ஒப்பீட்டு அளவில் தீபா, ஜெயலலிதா அவர்களுக்கு அரசியல் வாரிசாக நிலைக்க தகுதிகள் அதிகம் கொண்டவர் என்று தோன்றுகிறது. 
----
 

Silk Smitha



இன்று சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமியின் பிறந்தநாள்

விஜயலட்சுமி என்ற இயற்பெயர். தெலுங்கானா என்று இன்று அறியப்படும் நிலப்பரப்பில் பிறந்த பெண்மணி. வளருகின்ற பருவத்தில் தன்னுடைய திறமை எது என்ற தெளிவாக தெரிந்திருந்தவர். தொடர்ந்து வந்த வெற்றிகளில் தன்னுடைய நிம்மதியைத் தேடியவர். கூடவே இருந்த மனிதரிடமும் அது கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அதை அவர் தந்தேயாக வேண்டும் என்று விதித்த கட்டாயம் எளிதாக மீறப்படவே, மதுவிடம் அதைத் தேடியவர். தருவது போல போக்குக் காட்டிவிட்டு, தீரவே முடியாத வேறு பல பிரச்சினைகளைத் தாராளமாக அள்ளி வழங்கிய சிவப்புத் திரவம் நெருக்கமான மனிதர்களிடம் இருந்து விஜயலட்சுமியைத் தனிமைப் படுத்தியது. நெருங்கவே பயப்பட்ட தோல்வி இவர் தளர்ந்திருந்த நேரம் பார்த்து தாக்கித் தகர்த்தெறிந்தது.
மிக வேகமாக வெற்றியடைந்த பெண்கள் அனைவரும் மிக வேகமாகவே காலத்தின் புத்தகத்தில் கிழித்தெறிந்த தாள்களாக காற்றில் மிதந்து காணாமல் போவது துல்லியமாக ஒவ்வொரு முறையும் நடந்திருப்பது தற்செயலாக இருக்க முடியாதுதானே!

கல்லூரிக் காலத்தில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் கதாநாயகனானான். தன்னுடைய லட்சியமே விஜயலட்சுமியின் கையைத் தொட்டுப் பார்ப்பதுதான் என்பான். மெட்ராசுக்குப் போய் நடிகனாகி விஜயலட்சுமியைக் கட்டிப்பிடித்து ஒரு பாட்டுக்கு பேய் நடனமாடினான். அந்தப் பாடலின் ஒரு நொடியில் அவன் முகத்தை கேமிரா நெருக்கமாக திரையில் காட்டிய பொழுது, தனது தீராத பெரும்பசி ஒன்று தீர்ந்துபோன திவ்யத் திருப்தி அவனுடைய கருப்பு முகப் பின்னணியில் காற்றில்லா சுடராக ஒளிர்ந்ததாக எனக்குப் பட்டது. 

பின்னொரு நாளில் அவனும் தோல்வியடைந்த நட்சத்திரமாக ஆகிப்போன நாட்களில், சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னான். "சில்க்கோடு டான்ஸ் ஆடிவிட்டேன். சாதிப்பதற்கு இனிமேல் இங்கு ஏதுமில்லை."

விஜயலட்சுமிகளிடம் மாபெரும் வீழ்ச்சிகளுக்கேயுரிய பேரழகு புதைந்திருக்கிறது. அவரின் தாடிக்கார காதலர் இன்னும் இருக்கக் கூடும். விஜயலட்சுமியின் பிறந்தநாளான இன்று எங்கோ தனியாக இருட்டில் அழுதுகொண்டிருக்கக் கூடும்.

இன்னும் சில ரசிகர்களும் - பிரபுவைப் போல - விஜயலட்சுமி இல்லாத உலகத்தின் நிறைவின்மையைக் கண்டு நிச்சயம் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.