சாசனம்

| Monday, August 10, 2015
ஜோசப் அடிசன் :  Joesph Addison [1672-1719] 

ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஜோசப் அடிசன் அவர்களுக்கு எவராலும் மறுதலிக்க முடியாத பெரிய ஆசனம் உண்டு என்றாலும், இலக்கியம் தவிர்த்த காரணங்களுக்காக கூட இவர் பெரிதும் நினைவு கூறப்படுகிறார்.  அவரது காலம் இங்கிலாந்தில் காபி விடுதிகளின் காலம்.  லண்டனில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேலான காபி விடுதிகள் இருந்தன.  நாட்டின் அறிவு ஜீவிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசாங்க வேலைக்காரர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களுக்கும் கூடி எதையும் பற்றி கதைக்கும் கூடங்களாக இந்த காபி விடுதிகள் இருந்தன.  ஜோசப் அடிசனைப் பற்றி பேசும் போது அவரின் சம காலத்தவரான ஜோனதன் ஸ்விப்ட்டைப் பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாகிறது.  இருவருமே ‘தீமையை’ ஏசியவர்கள். ஆனால் ஸ்விப்ட் மிகவும் கடுமையான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார்.  அவரது சொல்லாடல்கள் சவுக்கு வீச்சுக்கள்;  அகப்பட்டவர்கள் துடித்துப் போனார்கள்; ரத்தம் கக்கினார்கள்.  ஆனால் அடிசன், தனது மெலிதான கிண்டலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.  மனிதத்தின் மீது தன்னுடைய நம்பிக்கையை எப்பொழுதுமே அடிசன் இழக்கவில்லை; ஆனால் ஸ்விப்ட் மனிதம் செத்துவிட்டதாகவே நம்பினார்.  
  
இவரது வாழ்வு ஏற்றம் இறக்கம் இரண்டையுமே கொண்டது.  இவரது தந்தையார் ஒரு பாதிரி.  மெத்தப் படித்தவர்.  அடிசன் தனது பள்ளிப்படிப்பை லண்டனிலும், மேற்படிப்பை ஒக்ஸ்போர்ட் சர்வகலா சாலையிலும் முடித்தார்.  இவருக்கும் தனது தந்தையைப் போலவே பாதிரி ஆக ஆசை இருந்தும், மற்றவர்களின் வற்புறுத்தலால் அரசாங்கப் பணியில் சேர்ந்தார்.  தனது எழுத்தின் மூலமே அரசின் அதி உயர் பதவிகளைப் பெற முடியும் என்று நிரூபித்தவர்களில் அடிசன் முக்கியமானவர்.  அரசன் வில்லியம் அவர்கள் அடிசனுக்கு வருடம் முன்னூறு பவுண்ட் ஓய்வூதியம் கொடுத்தது மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுவராக பயணம் செய்யவும் பணித்தார். 
 
ஆனால், மனிதனின் வாழ்க்கை விதிகளின் கைகளில் சாதாரணமாகவா உருட்டப்படுகிறது?  தான் சார்ந்திருந்த கட்சி பதவி இழந்ததின் தொடர்ச்சியாக, ஓய்வூதியம் உட்பட தான் அரசிடமிருந்த பெற்று வந்த பல சலுகைகளை மீண்டும் இழக்க வேண்டி வந்தது.  ஆனால் சில வருடங்களிலேயே மீண்டும் புது வாழ்வு பெற்றார் அடிசன்.  புதிய அரசின் ஆதரவை தனது எழுத்தின் வன்மையால் மீண்டும் பெற முடிந்த அடிசன், அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளராக உயர்ந்தார்.

அடிசனின் அந்திமம் தனது நண்பர்களோடு சண்டை பிடிப்பதில் கழிந்தது.  இவரின் பிரபல்யத்தை அலெக்சாண்டர் போப் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.  போப் அடிசனை கிண்டல் செய்து கிழித்தெறிந்தார்.  ஜோனதன் ஸ்விப்ட் மற்றும் ஸ்டீல் ஆகிய இருவரிடமும் அடிசன் கட்சி ரீதியாக வேறுபட்டதால் சண்டை போட வந்தது.  இவரது திருமணம் கூட மூன்று ஆண்டுகளே நீடித்தது.  1716-ல் ஒரு வயதான விதவையை மணந்த அடிசன், மூன்று வருடங்களுமே கூட ஒரு மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இவரது மரணம் 1719-ல் அமைதியாக சம்பவித்தது.

அடிசன் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றி ஜான்சன் கூறியது இந்த சிறு நினைவுக் குறிப்பை முடித்து வைக்க மிகவும் பொருத்தமானது: “Give nights and days, Sir, to the study of Addison if you mean to be a good writer, or what is more worth, an honest man.”
----

வில்லியம் கோல்டிங் [WILLIAM GOLDING]
தனது முதல் நாவலின் மூலம் உலகப் புகழ் கிடைத்து முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்த நாவலின் பொருட்டே நோபல் பரிசு பெற்றவர் வில்லியம் கோல்டிங். இங்கிலாந்தில் காரன்வெல் என்ற இடத்தில் பிறந்தவர். 1911ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி பிறந்தார். தந்தையார் ஆசிரியர், தாயார் ஒரு சமூகப் போராளி. பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டி போராடியவர் இவரது தாயார்.
 
கோல்டிங் 1935ம் ஆண்டு சாலிஸ்பரி என்ற இடத்தில் ஆங்கிலமும் தத்துவம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். ஆனால் சில வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போர் திடகாத்திரம் உள்ள இளைஞர்களை எல்லாம் தன்னுள் பங்கேற்க அழைத்தது. 1940ல் இங்கிலாந்து கடற்படையில் சேர்ந்தார். போர் அனுபவங்கள் இவரை மிகவும் மோசமாக பாதித்தது என்று கூற இடமுண்டு. தனது முதல் நாவலான Lord of the Flies என்ற நாவலை 1954ம் ஆண்டு வெளியிட்டார். ஏறத்தாழ முப்பது வருடங்கள் கழித்து, 1983ம் ஆண்டு, இதே நாவலுக்காக நோபல் பரிசு இவருக்கு கிடைத்தது. 1993ம் வருடம் தனது சொந்த ஊரிலேயே மரித்துப் போனார்.

இவரது இளமைக் காலம் ருசிகரமானது. தனது ஆரம்பக் கல்வியை தந்தையாரின் பள்ளியிலேயே முடித்தார். தனது பனிரெண்டாவது வயதில் ஒரு நாவல் ஒன்று எழுதி அம்முயற்சியில் தோற்றுப்போன அனுபவமும் இவருக்கு உண்டு. இது தந்த ஏமாற்றத்தால் ஒரு முரட்டுப் பையனாக மாறி தனது நண்பர்களை அரட்டி உருட்டி வந்ததாக இவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.அடுத்தவர்களை அவமானப் படுத்துவதில் தான் மிகவும் ஆனந்தப்படுபவனாகஇருந்திருக்கிறேன் என்று அவரே சொல்கிறார்.

இவர் ஒரு விஞ்ஞானி ஆவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர் தனது பட்டப் படிப்புக்காக தேர்ந்தேடுத்ததோ ஆங்கில இலக்கியம். ஆக்ஸ்போர்ட் சர்வகலா சாலையில் 1934ம் ஆண்டு தனது இளங்கலை பட்டத்தை முடித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான கவிதைகள்”, விமர்சகர்களால் கடுமையாக தாக்கப்பட்டது, இவரை மோசமாகப் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.
 
படிப்பு முடிந்ததும் அங்கொன்றும் அங்கொன்றுமாக சில வேலைகள் செய்து வந்த கோல்டிங் எதிலும் மனம் ஊன்றாமல், தந்தையாரின் தொழிலுக்கே வந்தார். ஆங்கில இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களை தனது சொந்த ஊரில் இருந்த பள்ளியில் கற்பித்துக் கொடுத்து வந்தார். தன்னிடம் படித்து வந்த பையன்களில் சில மிகவும் முரடர்களாக இருந்ததைக் கண்ட கோல்டிங், அந்தப் பையன்களில் வார்ப்பிலேயே தனது முதல் நாவலுக்கான மையமான சில கதாபாத்திரங்களை உருவாக்கினார். கற்பித்தல் என்பது இவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின் அழைப்பை இவரால் நிராகரிக்க முடியவில்லை. 1940ல் போருக்குச் சென்ற கோல்டிங், போரின் இறுதி வரை படை வீரராகவே தொடர்ந்தார்.
----

பெனடிக்ட் டிமோதி கார்ல்டன் கம்பர்பெச் [BENEDICT TIMOTHY CARLTON CUMBERBATCH]
இவர் லண்டனில் 1976-ம் ஆண்டில் பிறந்தவர். தாய் தந்தை இருவருமே நடிகர்கள். தாய் வழித் தாத்தா மற்றும் தந்தை வழி தாத்தா இருவருமே மிகப் பெரிய பேர்வழிகள். ஒருவர் கடற்படையில் கமாண்டராக இருந்தவர். இன்னொருவர் தூதர். பள்ளிப் படிப்பை கம்பர்பெச் இங்கிலாந்தில் முடித்த பிறகு, ஓவியத்தில் பயிற்சி பெற்றார். இதற்கான Harrow School உதவித் தொகையையும் பெற்றார். பிறகு, இந்தியாவில் டார்ஜிலிங் நகரில், திபெத்திய துறவியகம் ஒன்றில், சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக இருந்தார். மீண்டும் தாய்நாடு. மான்செஸ்டர் சர்வகலா சாலையில் நாடகம் பற்றி மேற்படிப்பு முடித்தவுடன், லண்டன் நிகழ்த்துக் கலை மற்றும் இசை வித்வத்சபையில் இன்னொரு பட்டம்; பிறகு, செவ்வியல் பாவனை என்ற ஒரு முதுகலை பட்டம். இதற்குள்ளாகவே, திரைப்படங்களில் நடிப்பதற்கான அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

கம்பர்பெச் நாடகம், தொலைகாட்சி, சினிமா, மற்றும் வானொலியில் தனது விலக்கான பங்களிப்பை செய்து வருகிறார். அறிவியல் ஆய்வாளர் Alan Turing-ஆக The Imitation Game என்ற படத்தில் நடித்தது அண்மைக் காலத்தில் மிகவும் முக்கியமான பாவனை வெளிப்பாடு என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக, Golden Globe, British Academy of Film and Television விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுக்காகவும், இந்தப் படத்திற்காக, இவர் பரிந்துரைக்கப்பட்டார். நடிப்புலகில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக எலிசபெத் அரசி இந்த ஆண்டில் Birthday Honours என்ற கௌரவத்தால் இவரை பெருமைப்படுத்தி உள்ளார்.
 
இவரது மனைவி சோபி ஹன்டர் ஒரு நாடக நெறியாளர். இவர்களுக்கு இந்த ஆண்டில் ஒரு மகன் பிறந்துள்ளான். இவரைப் பற்றிய எதிர்பார்ப்பு தீவிர சினிமா ரசிகர்களிடம் நிறைய இருக்கிறது.