அண்மையில் பார்த்த திரைப்படங்களில், The Devil's Violinist மிகவும் பிடித்தமானதாக இருந்தது. Bernard
Rose இயக்கியிருக்கிறார். இவரின் முந்தைய படமான Immortal Beloved-ஐப் போலவே இதுவும் இசையை மையமாகக் கொண்டதுதான். பார்ப்பதற்கு நம்மைப் போலவே இருந்தாலும் கலைஞர்கள் வேறு பிறவிதான். அவர்களின் மையம் நம்முடையதைவிட மிகவும் விலகியிருக்கிறது. Artistic
excellence is the neurotic compensation of the perverted mind என்று Freud சொல்லியிருப்பதில் இருந்துதான் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியும். ஒரு நல்ல கலைஞன் மிகவும் தொந்தரவுக்குள்ளான மனிதன். நிம்மதியிலிருந்து அறுபட்டே நிற்கிறான். எதற்கோ ஏங்கினாலும் அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாதவன். தேடுதலையும் நிறுத்த முடியாமல், ஏக்கமும் வடியாமல் அவன் படும் அவஸ்தைகளை இன்னொரு கலைஞனே கண்டுணர முடியும்.
அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் வந்த செவ்வியல் படங்களின் தன்மைகளை The
Devil's Violinist பெரும்பாலும் ஒத்திருந்தது. சில செவ்வியல் பிரதிகளையும் நினைவுபடுத்த தவறவில்லை. முக்கியமாக, Christopher
Marlowe மற்றும் அவரது Dr
Faustus அடிக்கடி நினைவுக்கு வந்தனர். நாம் எல்லோருமே ஒரு சாத்தானிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம். கெட்டியாக பிடித்திருப்பது நாம் சாத்தானையா, சாத்தான் நம்மையா என்பது ஸ்திரமாக சொல்ல ஆகாதென்றாலும் யாரோ யாரையோ உடும்பாக பிடித்திருக்கிறோம். கடவுளைவிட சாத்தானே நம்மை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார். சாத்தானை நாமும் விடுவதாக இல்லை.
படத்தின் கதாநாயகன் நிக்கோலோ பகணினி [Niccolo
Paganini] வயலின் கலைஞன். அசாத்தியமான திறமைகள் கொண்டவன். இந்தப் பாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் ஒரு மாபெரும் இசைக் கலைஞரான டேவிட் கேரெட் [David
Garret] ஏற்று நடித்திருக்கிறார்.
நிக்கோலோ பகணினி அன்றைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இன்னலுறும் இசைக் கலைஞன். சமூகம் இன்னும் இவனது இசை மேதமையை அங்கீகரிக்காத நிலையில் அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் இவனை, எல்லா துர்குணங்களும் சபித்திருக்கின்றன.
போதையின் அனைத்து வடிவங்களும் இவனிடம் தஞ்சம். பெண் பித்தனும் கூட. ஆளுமை இன்னும் முழுமை பெறவில்லை. ஆகப் பெரிய சூதாடி.
இவனது மேதமையை கண்டுகொள்ளும் அர்பானி [Urbani] தன்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு நிக்கோலோ பகணினியை வற்புறுத்துகிறான். Jared
Harris இந்தப் பாத்திரத்திற்கு பாசாங்கற்ற உருவம் கொடுத்துள்ளார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் மனிதன் - பிசாசு இடையே ஊடாட்டம் தொடங்குகிறது. லண்டனுக்கு ஒரு இசைப் பயணம் மேற்கொள்ளுவதாக உறுதியளிக்கும் நிக்கோலோ பகணினி தன்னுடைய இங்கிலாந்து பயண ஒப்பந்தக்காரரான ஜான் வாட்சனுக்கு
தலைவலியாக மாறுகிறான். பயண அட்டவனையை தன்னுடைய விருப்பப்படி அடிக்கடி மாற்றிக்கொள்ளும் நிக்கோலோ பகணினியிடம் ஒரு ஜீனியசின் மேற்கோளான எதிர்மறைக் குணங்கள் அனைத்தும் பொருந்தியிருக்கின்றன.
ஜான் வாட்சன் இல்லத்தில் தாங்கும் நிக்கோலோ பகணினி, வாட்சனின் மகளான சார்லட் [Andrea Deck] மீது காதல் கொள்கிறான். இவர்களின் உறவு மோதலிலேயே தொடங்குகிறது. தன்மானம் மிக்க சார்லட் தான் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டாக வேண்டும் என்று நிக்கோலோ பகணினியை வற்புறுத்துகிறாள், இவனுடைய இசை மேதமையால் கவரப்பட்டிருந்தாலும் கூட. இவளின் குரல் இனிமையையும் பாடும் திறமையும் காணும் நிக்கோலோ பகணினி மேலும் இவளை உற்சாகப்படுத்துவதுடன் நிற்காமல், தன்னுடைய கச்சேரியிலும் பாடச் செய்கிறான். பெண் பித்து, மது, இன்ன பிற போதை வஸ்துக்களால் தனக்கு தர முடியாத ஏதோ ஒன்றை இவளிடம் கண்டுணரும் கலைஞன் தன் காதலை வெளிப்படுத்த, அவனிடமும் தன்னுள் ஏற்பட்டிருக்கும் மெல்லிய அன்பை உணருகிறாள். மெல்ல மெல்ல ஒரு பாடகியாக சார்லட் உருவெடுக்கும் சமயத்தில், இவர்களின் காதல் தனக்கு தொல்லையாக முடியும் என்ற யோசனையில், இவர்களைப் பிரிக்கும் முயற்சியில் வெற்றியடைகிறான் அர்பானி.
லண்டனின் பெண்ணீய குரல்கள் நிக்கோலோ பகணினியை சாத்தானின் உருவமென்றும், இவனுடையது காமப் பித்தாக்கும் இசை என்றும், பெண்களை தனது இச்சைக்கு பயன்படுத்தி தூக்கி எறிபவன் என்றும், அவன் நாடு கடத்தப்பட்டாக வேண்டும் என்றும் உரக்க க்ரீச்சிடுகின்றன. இவனின் இசை இளைஞர்களை கெடுப்பதாக நாடெங்கும் போராட்டங்களும் நடக்கின்றன. இவர்களுக்கு உதவும் விதமாக, பெண் பித்தன்
மற்றும் குடிகாரனான நிக்கோலோ பகணினி தன்னை அழித்துக்கொள்வதற்கு உண்டான அத்தனை சாத்தியங்களையும் வெறி பிடித்தவனைப் போல துரத்துகிறான்.
லண்டனில் இருந்து வெளியேறும் நிக்கோலோ பகணினி, தன்னிடம் இப்போது அதீதமான அளவில் மீதமிருக்கும் புகழையும் பணத்தையும் வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் போதை, பெண், சூது என்று யாரும் காப்பாற்ற முடியாத வேகத்தில் தன்னை தொலைக்கிறான். சார்லட்டின் நினைவுகளால் தன்னை சுட்டுக் கொள்ளும் பகணினி, தொடர்ந்து அவளுக்கு கடிதங்கள் எழுதி கெஞ்சுகிறான்.
தன்னிடம் வருமாறும், வந்து தன்னை மீட்டு ரட்சிக்குமாறும் உருகும் பகணினிக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சார்லட் மௌனமாக அவனது வேண்டுதல்களை மறுத்து விடுகிறாள், தன்னை கண்டுபிடிக்க அவன் உதவியிருந்தாலும் கூட.
போதை அதிகமாகி நினைவற்று விழுந்து இறக்கும் தறுவாயில், திறமை, புகழ், போதை, காமம், பணம், அதிகாரம் - எதுவுமே தன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தான் எப்பொழுதுமே அனாதையாகவே இருந்திருப்பதையும் உணர்கிறான் பகணினி.
ஒருவேளை, சார்லட் அவனை காப்பாற்றியிருக்க முடியும். ஏன் அவள் முயலவில்லை?
காதலின் மர்மங்கள் மனிதனால் அவிழ்க்கவே முடியாதவையா?