கா.நா.சுவின் பட்டியலும் பிரகாஷும்

| Sunday, July 20, 2014


தஞ்சை பிரகாஷ் அவர்களைப் பற்றி நா.விச்வநாதன் அவர்கள் எழுதியிருக்கும் நினைவுக் குறிப்பு அண்மையில் தமிழ் தி ஹிந்துவில் வந்துள்ளது.  தஞ்சை பிரகாஷ் அவர்கள் கா.நா.சுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  பெரிய கலா ரசிகர்.  ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.  எனினும், இவரைப் பற்றி எழுதப் பட்ட சித்திரங்கள் குறைவு.  நேரடியாக பழக்கமில்லாத எவருக்கும் இந்த ஆளுமையைப் பற்றி எழுதப்பட்டதின் மூலம் அதிகம் தெரிய வழியில்லை என்ற நிலையில் நா.விச்வநாதனின் இந்தக் கட்டுரை பயனுள்ளது.  படைப்பாளிக்கும் படைப்புக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கத் தேவையில்லை என்பதை நம்பி வந்தாலும் கூட, எழுத்து ஒருவனின் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது அல்லது ஜீவனான எழுத்துக்கும் அது எழுதப் படுகிற சமயத்தில் அதை நம்புவனாக எழுத்துக்காரன் இருந்தான் என்பதையும் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. 

தஞ்சை பிரகாஷ் அவர்களிடம் ஜீனியஸ் ஒருவனிடம் இருந்தாக வேண்டிய எடுத்துக்காட்டான தன்மைகள் இருந்திருப்பதை விச்வநாதன் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. இரண்டு அரசு வேலைகள் - மத்திய மற்றும் மாநில - இவரை ஒரு இடத்தில் இருத்தி வைக்க முடியவில்லை.  வாழ்நாள் முழுவதும் நகர்ந்து கொண்டே இருந்திருப்பினும் சொந்த ஊர் -  ஆறு திரும்பி திரும்பி இவரை தங்களிடம் இழுத்தபடியே இருந்திருக்கின்றன.  சில்லறை தொழில்கள் பலவற்றை செய்துகொண்டே இருந்திருக்கிறார்.  எதுவும் பெரிய அளவில் உருப்படவில்லை. அதற்காக கவலைப்படவும் இல்லை.  மகாப்பெரிய பேச்சுக்காரராக இருந்திருப்பது தெரிகிறது.  எழுதியதை விடவும் பேசியது அதிகம் - அதில் எழுத்தை விட தரமும் அதிகம் என்றும் விச்வநாதன் தெரிவிக்கிறார்.  இதுவெல்லாமே, ஜீனியஸ் ஒருவனின் classical qualities. 

கிருத்துவம் தெரிந்த கிருத்துவர் என்று தெரிவிக்கும் விச்வநாதன், மதம் சம்பந்தமாக என்றுமே அலட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றும் கோடி காட்டுகிறார்.   தன்னுடைய எழுத்தைப் பற்றியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  அன்றைய நிலையில், எழுத்துக்காரர்களில் பெரும்பாலோர் கா.நா.சுவின் பட்டியலில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்தபோது, அவரின் நெருங்கிய நண்பரான தஞ்சை பிரகாஷ் அவர்கள் அப்படிப்பட்ட எந்தத் துடிப்பும் பெற்றிருக்கவில்லை என்பதும், நண்பர் என்ற காரணத்தினால் பிரகாஷ் அவர்களுக்கு தன்னுடைய பட்டியலில் கா.நா.சு. அவர்கள் இடம் கொடுத்துவிடவில்லை என்பதும் அறிவதற்கு சிறப்பாக உள்ளது.  இரண்டு பேருமே பெரிய மனிதர்கள் என்பதால் இது மாதிரி நடந்திருக்கலாம். 

எனக்கு எப்பொழுதுமே தோன்றுவதுண்டு.  நிறைய எழுத்துக்காரர்கள் இருக்கிறார்கள்.  பெரிய ரசிக மணிகள்தான் அரிதாக இருக்கிறார்கள்.  படிப்பவர்களை விட எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகம். எழுதுபவர்களில் நிறைய பேர் எழுத்துக் காரியத்தை நிறுத்திவிட்டு, படிக்க ஆரம்பித்தால் நல்ல எழுத்துக்கள் புதிதாக தோன்றும்.  படிக்கும் போதும் இலக்கியம் உருவாகிறது.   எழுத்து நுகருபவனின் முனையில் ஒன்றாகவும், தோற்றுவிப்பவன் முனையில் வேறொன்றாகவும்தான்  எப்பொழுதும் உள்ளது.  கேள்வியே இல்லை, படிப்பவன் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்கும் போதே, படைக்கவும் செய்கிறான்.

அப்படிப் பார்த்தால், தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் படைத்தது உலகளவு!